கல்கி

மால்குடியில் மறுவாழ்வு!

படைப்பாளிகளுடன் வாழ்வது போராட்டமா? கொண்டாட்டமா?

பெ. மாடசாமி

பகுதி – 11

பெ.மாடசாமி

பிறந்த ஊரையும் பெற்றெடுத்த தகப்பனையும் இன்று வரை வாசகர்கள் மத்தியில் வலம்வரச் செய்யும் ஓர் எழுத்தாளன் ஆர்.கே.நாராயணன்.

“இவனால் ஒரு வரியைக்கூட சரியாகக் குழப்பமில்லாமல் எழுத முடியவில்லை” என்று ஆர்.கே. நாராயணனைப் பற்றி விமர்சித்த பிரபல ஆங்கில எழுத்தாளர் கிரகாம்கிரினே பின்னொரு நாளில் ஆர்.கே.நாராயணனின் படைப்புகள் அச்சில் ஏறக் காரணமானார். ‘சாகித்திய அகாதமி’ விருதை வென்றெடுத்தது அவருடைய ‘The Guide’. வசனம் பேசிய கிரகாம்கிரினேயின் உதடுகள் இவருடையப் புத்தகங்கள் “பத்தாயிரத்தில் ஒன்று” என வாழ்த்தியது.

ஆங்கிலத்தில் புலமைகொண்ட ஆர்.கே.நாராயணன் கல்லூரி நுழைவுத் தேர்வில் வெற்றி பெறவில்லை என்பதை நினைக்கும்போது அவருக்கும் ‘தேர்வு’ பயம் இருந்ததோ என எண்ணத் தோன்றுகிறது.

கல்லூரி படிப்புக்குப் பின்பு சில வருடங்களே வேலை. அதன்பின்பு முழு கவனமும் எழுத்தே. ஒரு முறைக்கு இருமுறை அல்ல, பலமுறை படித்து திருத்தி, வாசகன் படிக்கும்போது தள்ள வேண்டிய பக்கங்களை இவரே தள்ளிவிட்டதால்தான் இவருடைய வாசகர்கள் எல்லோரும் வார்த்தைகளைக்கூட விடாமல் படித்தார்கள், ரசித்தார்கள்.

வாசகர்களை வசப்படுத்திய ஆர்.கே.நாராயணனின் ஆரம்ப வாழ்வே வசந்தமாய் அமையவில்லை. பெற்றெடுத்த தாயினுடைய மனநிலை குறைவின் காரணமாக பாட்டி (அம்மணி)யின் வளர்ப்புத்தான்.

ஒரு கற்பனை ஊரை உருவாக்கி மாங்குடியையும் லால்குடியையும் இணைத்து ‘மால்குடி’ என்று பெயரிட்டு, அது எங்கிருக்கிறது என வாசகர்களைத் தேட விட்டவர் ஆர்.கே.நாராயணன்.

தமிழ், பிரஞ்சு, இத்தாலி, ஜெர்மன், ருஷ்யா, சுவிடிஷ் ஆகிய மொழிகளில் இவருடைய ‘The Guide’ஐ காணமுடிகிறது என்றால், இந்த உலகறிந்த தமிழனை நினைக்கையில் ஒவ்வொரு தமிழனின் உள்ளமும் உவகை கொள்கிறதல்லவா? சாமர்ஸெட்மாம் ஆர்.கே. நாராயணனின் ரசிகர்.

ஆர்.கே.நாராயணனிடம் அவருடையப் புத்தகங்கள் பற்றி கலந்துரையாடுகிற அளவுக்கு நெருக்கமான பரம ரசிகை, இந்திய நாட்டின் முன்னாள் பிரதமரான இந்திராகாந்தி அம்மையார். ஓர் எழுத்தாளருக்கு அவருடைய பரம ரசிகை வழங்கிய பரிசு ராஜ்யசபை உறுப்பினர் பதவி. பள்ளி செல்லும் பிள்ளைகள் புத்தக மூட்டைகளைச் சுமப்பதால் அவர்களின் முதுகெலும்பு கேள்விக்குறியாக மாறுவதை ஆச்சரியக்குறியாக ராஜ்யசபையில் எடுத்துரைத்து அனைவரின் கவனத்தை ஈர்த்த சமூக ஆர்வலர் ஆர்.கே.நாராயணன்.

நாட்டுப்புற வாழ்வில் யதார்த்தமாய்ச் சந்திப்பவர்களின் பேச்சில், நடவடிக்கையில் நகைச்சுவையைக் கலந்து கொடுத்து திகட்டாத இனிப்பை அகிலத்துக்கே வழங்கினார். 1933ல் அவருக்குத் துணைவியானார் ராஜம். நன்றாகவே நகர்ந்தது வாழ்வு. ஆணாதிக்கம் விரும்பாத ஆர்.கே.நாராயணன் விரும்பியபடியே மகள் ஹேமா பிறந்தாள்.

இன்றைக்கு ‘டைபாய்டு’ நோயை சாதாரணமாகப் பார்க்கிறோம். ஆனால், உலகம் விரும்பி தேடிய மால்குடி மைனரின் மனைவியை 1939ல் அவரிடமிருந்து பிரித்து விடுகிற கொடுங்கூற்றுக்கு ஆளானது இந்த டைபாய்டு. தன் பிரிவைத் தாங்காது தாமும் அவர் பின்னே சென்று விட முயற்சிப்பார் என்பதை முன்னமே  அறிந்திருந்ததால்  ‘ஹேமாவுக்காக நீங்கள் வாழவேண்டும்’ எனக் கூறிவிட்டுச் செல்கிறார்.

உலகளாவிய ஆங்கில நாவல் படைப்பாளன் ஆர்.கே.நாராயணன் தன் மனைவியின் இறப்பில் தன்னை ஆற்றுப்படுத்தியதோடு உலக வாசகர்களையும் தேற்றுகிறார். ராஜத்தின் மறைவுக்குப் பின்பு ‘கிருஷ்ணா’ என்ற ஆங்கில ஆசிரியராக (The English Teacher) மாறி, அதன் வாயிலாக, மறைந்த தன் மனைவியோடு வாழ்ந்து காட்டுகிறார் ஆர்.கே.நாராயணன். கற்பனை ஊரை உருவாக்கிய ஓர் எழுத்தாளன் மனைவியின் மரணத்துக்குப் பின் கற்பனையிலொரு நிஜவாழ்வைத் தன் மனைவியோடு வாழ்ந்து காட்டுகிறார்.

‘The English Teacher’ என்ற நாவலை தன்னுடைய மனைவி ராஜத்துக்கு சமர்ப்பணம் செய்கிறார். இந்த புத்தகம் 1945ல் வெளியிடப்பட்டது. அதன்பின்பு புதுப்பிக்கப்பட்டு 1953ல் ‘Grateful to the Life and Death’ என்ற பெயரில் வெளியானது.

இந்த நாவலில் வரும் சம்பவங்கள் ஆர்.கே.நாராயணனின் மனைவி ராஜம் இறப்பதற்கு முன்பும் பின்பும் என்று எடுத்துக்கொள்ளும்போது உயிரோடுயிருந்த ராஜத்தோடு இருந்த வாழ்க்கையையும் அவர் இறப்புக்கு பின்பு அவர் அவரோடு இருக்க நினைத்ததையும் கொண்ட ஒரு நிஜக் கற்பனையாகக் காண முடிகிறது.  எழுத்தாளனாகிய ஆர்.கே.நாராயணன், தன் மனைவியோடு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்துள்ளார் என்பதும், மனைவியின் இறப்புக்குப் பிறகும், உரையாடல்கள் வாயிலாக இழந்த துயரத்திலிருந்து மீண்டுவந்து அவர் வாழும் வாழ்க்கையில் மாறுபட்ட கோணத்தில் அவரைப் பார்க்க முடிகிறது.

கிருஷ்ணா ஆர்.கே. நாராயணனின் கற்பனை ஊரான மால்குடியில் உள்ள கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக இருக்கிறார். தன்னுடைய பணி அரைத்த மாவையே அரைப்பது போன்றிருக்கிறது என்ற எண்ணம் ஏற்பட, கவிஞராக மாற முயற்சிக்கிறார். அவர் வாழ்ந்த காலத்தில் பெண்கள் பெரும்பாலும் ஆண்களையே சார்ந்திருந்தார்கள் என்பதுதான் உண்மை.

ஆனால், கிருஷ்ணா ஆணாதிக்கச் சிந்தனையிலிருந்து சற்று பாதை மாறி வீட்டு பொறுப்புகளை மனைவியிடம் கொடுத்து, அவரை அவருடைய எண்ணம்போல் நடக்க அனுமதிக்கிறார். தான் கவிஞனாக கவிதை புனைய ஆசைப்படுவதாக தன் மனைவியிடம் சொல்லும்போது ஆர்வமிகுந்த அவர் மனைவியே தன் முதல் ரசிகையாக, “எங்கே ஒரு கவிதை சொல்லுங்கள்” என்று கேட்கவும், சமாளித்த வகையில் கிருஷ்ணா கவிதை வரிகளைக் கூற, “அது வோர்ட்ஸ்ஒர்த்தின் வரிகள்” என்று சுசீலா தெரிவித்ததோடு, ‘நீங்கள் நீங்களாக, சொந்தமாக இருங்கள்’ என்று கூறுவதில் அன்பு கலந்த ஆலோசனையைப் பார்க்க முடிகிறது.

அவர்கள் வாழ்வில் ஊடலுக்குப் பின்பு கூடலைக் காண முடிகிறது. கிருஷ்ணா பாதுகாத்து வைத்திருந்த பழைமையான கடிகாரத்தையும் சில கடிதங்களையும் சுசிலா பழைய பொருளாக விற்றுவிட, சற்றுக் கோபம் கலந்த வருத்தத்தைக் காண்பிக்கிறார் கிருஷ்ணா. அதனால், இருவரும் இரண்டு நாட்கள் பேசாமல் கோபித்துக்கொள்ள கிருஷ்ணாவே இறங்கி வந்து பேசுவதோடு திரைப்படத்துக்கு அழைத்துச் சென்று சமாதானப்படுத்துகிறார். சுசிலாவும் தான் செய்த தவறுக்குப் பரிகாரமாக புதிய கடிகாரத்தை வாங்கிக் கொடுக்கிறார்.

இருவரும் தங்கள் மகளுக்கு 3வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள். புதிய வீடு ஒன்று வாங்குவதற்காக இருவருமே இணைந்து வீட்டைப் பார்ப்பதற்குச் சென்ற இடத்தில் அந்த வீட்டில் இருந்த கழிவறையின் சுகாதாரமற்ற நிலையால் சுசீலா சுகவீனமடைய, ‘டைபாய்டு’ என கண்டுபிடிக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து கிருஷ்ணாவை விட்டு பிரிகிறார்.

மனைவியின் பிரிவைத் தாங்க முடியாத கிருஷ்ணா தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் ஏற்பட மகளுக்காக வாழ வேண்டும் என்று மனம் மாறுகிறார். அதனைத் தொடர்ந்து தன் மனைவி சுசிலாவோடு மானசீகமாக பேசி அவருடைய ஆலோசனைப்படி நடக்கிறார்.

கற்பனை ஊரை உருவாக்கி தன்னுடைய கதைகளில் உள்ள அத்தனை மனிதர்களையும் அதில் உலாவவிட அதனை வாசகர்கள் ரசித்தனர். அவர்கள் ரசித்ததைக் கண்டு ஆனந்தமடைந்தார். அதே கற்பனை எழுத்தாளன் தன்னுடைய வாழ்க்கையின் பிற்பகுதியை, தான் தன் மனைவியோடு மகிழ்ச்சியாக வாழ நினைத்ததை அதே ஊரில் தன் மனைவியோடு வாழ்ந்து காட்டிய கற்பனை கற்பனைக்கும் எட்டாததுதான்.

எழுதவே வாழ்ந்தவர் என்கிற வகையில் நாவல்களையும் சிறுகதைகளையும் படைத்தவர். வாழும்போது பல உயரிய விருதுகளை பெற்று, தன் 94வது வயதில் தமிழ் மண்ணுக்கு உலக அளவில் சிறப்பு செய்து வாசகர்கள் மத்தியிலிருந்து பிரிந்து சென்றார்.

வெற்றிக்கு உதவும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள கற்க வேண்டிய 7 பழக்கங்கள்!

அத்திப்பழம் வெஜிடேரியனா அல்லது நான்-வெஜிடேரியன் ஃபுரூட்டா?

ஆரோக்கியத்தை வாரி வழங்கும் வாழைப்பூ!

Biography of Picasso: 20ஆம் நூற்றாண்டின் கலைப் புரட்சியாளர். 

சிறுகதை: நரையும் நர்மதாவும்!

SCROLL FOR NEXT