Deepavali Festival 
மங்கையர் மலர்

தீபாவளிப் பண்டிகை - கொண்டாட்டமா? திண்டாட்டமா?

க.பிரவீன்குமார்

ண்டிகைகள் என்று சொன்னாலே பொதுவாக நம்மை அறியாமல் நமக்குள் ஒரு சந்தோஷம், மகிழ்ச்சி வெளிப்படும். ஆனால், இன்றையச் சூழலுக்கு யாரிடமாவது “என்னப்பா, பண்டிகை எல்லாம் எப்படி?” என்று கேட்டால், “அட ஏம்பா! இப்ப எல்லாம் பண்டிகையாவா கொண்டாடுறாங்க” என்று சலித்துக்கொள்பவர்களை அதிகம் பார்க்கிறோம்!

தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டமா? அல்லது திண்டாட்டமா?

கொண்டாட்டமே! என்று சத்யா மற்றும் கிருபாகரன் கூற, இல்லை தீபாவளி திண்டாட்டமே! என்று அபிராமி மற்றும் சித்திரை செல்வன் வாதிடுகிறார்கள்.

சத்யா: தீபாவளி பண்டிகை என்றாலே நிச்சயமாகக் கொண்டாட்டம்தான். புதுப்புது ஆடை, பலகாரம் அதுமட்டும் இல்லாமல் வீட்டுக்கு உறவினர்கள் வருகை என்று வீடே திருவிழாக்கோலம் பூண்டு இருக்கும். இதைவிடச் சிறப்பான விஷயம் பள்ளிகளுக்கு விடுமுறை, வேலைக்குச் செல்பவர்களுக்கு போனஸ். இப்படி நமக்கு எத்தனை கவலைகள் இருந்தாலும், இந்தப் பண்டிகை நாள் வந்தால்போதும் எல்லா கவலைகளும் “பத்தோட பதினொன்றாகப் பறந்து போய்விடும்”. இப்படிப்பட்டப் பண்டிகை கொண்டாட்டமாகத்தான் இருக்கவேண்டும். ஒருபோதும் திண்டாட்டமாகாது.

Deepavali Festival

அபிராமி: என்னைப் போன்ற பெண்களுக்கெல்லாம் தீபாவளி நிச்சயம் திண்டாட்டம் தான். பண்டிகைகள் என்று சொன்னாலே வீட்டைக் கூட்டி, பெருக்கி சுத்தம் செய்து அப்பப்பா எத்தனை வேலைகள். அது மட்டுமா உறவினர்கள் யாராவது வருகிறார்கள் என்றால், அவர்களுக்குப் பிடித்தார்போலப் பலகாரம் செய்து கொடுக்கவேண்டும். எல்லா வேலைகளும் பெண்களாகிய நாம்தான் இழுத்துப் போட்டுச் செய்யவேண்டும்.  இந்த ஆண்கள் வெடி வைப்பது, ஊர் சுற்றுவது, எங்காவது படத்துக்கு செல்வது என்று அவர்கள் சந்தோஷமாகவும் உல்லாசமாகவும் சென்றுவிடுவார்கள். இப்படி எங்களால் ஒரு பண்டிகையைக்கூட சந்தோஷமாகக் கொண்டாட முடியவில்லை. அப்படி இருக்கத் தீபாவளி என்றால் திண்டாட்டம்தானே. எப்படி கொண்டாட்டமாகும்?

கிருபாகரன்: வருடம் முழுவதும் தன் குடும்பத்திற்காக வெளியூர் வேலைகளுக்குச் செல்பவர்கள் எல்லாம் இந்தத் தீபாவளி பண்டிகையன்று, தன் சொந்த ஊருக்குத் திரும்பிவந்து, தன் சொந்த பந்தங்களோடு தீபாவளியைக் கொண்டாடுவார்கள். அவர்களுக்கு குடும்பத்தைப் பிரிந்து இருக்கும் ஏக்கம், சோகம் போன்றவற்றை இதுபோன்ற பண்டிகைகள்தான் போக்குகின்றன. அதுமட்டுமின்றி, உறவினர்களோடு எந்த முரண்பாடுகள் இருந்தாலும் பண்டிகை காலங்களில் ஒருவரோடு ஒருவர் சேர்ந்து வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்வது, தனக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை எல்லாம் மறந்து, ஒரு பிணைப்பை உறவுக்குள் உருவாக்குவது எல்லாமே பண்டிகை நாட்களில்தான். இப்படி உறவுகள் மத்தியில் நல்ல மாற்றத்தைக் கொண்டுவரும் தீபாவளி பண்டிகை எப்போதும் கொண்டாட்டம்தான். திண்டாட்டம் அல்ல.

சித்திரைச் செல்வன்:வருடம் முழுவதும் உழைத்துச் சம்பாதித்த பணத்தைத் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் வரும்போது அனைத்தையும் செலவு செய்ய வேண்டியதாக இருக்கும். வரும் போனஸில் நாம் ஏதும் திட்டம் வைத்திருந்தால், அதனை வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் புது ஆடைகள் எடுப்பதற்கும், பிள்ளைகளுக்கு வெடி போன்றவற்றை வாங்கிக் கொடுக்கவும், விருந்தாளிகளுக்கு அசைவ உணவு சமைக்கவும், அவர்களுக்குப் பலகாரம் செய்யத் தேவையான பொருட்களை வாங்கிகொடுக்கவும் வைத்திருந்த பணம் எல்லாம் தீபாவளி வேட்டுபோல் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும். இது மட்டுமா? பல குடும்பங்களில்  வீட்டிலிருக்கும் ஏதாவது ஒன்றை விற்று அல்லது அடமானம் வைத்து இதைப் போன்ற பண்டிகைகளுக்கு செலவு செய்து கொண்டாட வேண்டிய நிலை வரும். இப்படி இருக்கையில் தீபாவளி என்பது நிச்சயமாகத் திண்டாட்டம்தான்.

இரு தரப்பு வாதங்களைப் பார்க்கும்பொழுது தீபாவளி பண்டிகை பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ள மக்களுக்குக் கொண்டாட்டமாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்குத் திண்டாட்டமாகவும் இன்றைய சூழலில் இருக்கிறது. இன்னும் சிலர் மக்களைத் தாண்டி சுற்றுச்சூழல் அதிகம் பாதிக்கப்படுகிறது என்று தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடாமல் உள்ளார்கள். இப்படி பலதரப்பட்ட மக்கள் பல வாதங்களை முன் வைத்தாலும், இதனால் பல பண குறைவு போன்ற திண்டாட்டங்களைக் குடும்பச் சூழலில் சந்தித்தாலும் தீபாவளி போன்ற  பண்டிகைகள் உறவுகளை மேம்படுத்துகின்றன என்பதில் சந்தேகமில்லை. நம் சக்திக்கு மீறிய, டாம்டூம் என்று ஆடம்பரமாகக் கொண்டாடாமல், மன மகிழ்ச்சியும் நிறைவும் தரக்கூடிய எளிமையான ஆனால், அவசியமான வகையில் கொண்டாடினால்  தீபாவளி பண்டிகை நிச்சயமாக கொண்டாட்டமே!

வாசகர்களே!

உங்கள் கருத்துகளை ‘comments box’-ல் பதிவிடலாமே!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

உங்க பெண் குழந்தைக்கு இந்த உணவுகளைக் கட்டாயம் கொடுக்கவும்!  

நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைக்கவும் சுவாரஸ்யமாக மாற்றவும் யாரால் முடியும்?

உலகிலேயே விலையுயர்ந்த பாஸ்போர்ட் இதுதான்! இதன் விலை எவ்வளவு தெரியுமா?

SCROLL FOR NEXT