சமீபகாலமாக செஸ் விளையாட்டில் பல வெற்றிகளைக் குவித்து வரும் இந்திய செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் விளையாட்டு அனைவரையும் மகிழ்ச்சியடைய வைக்கும் வண்ணமாக உள்ளது. அதை விட ஆச்சர்யப்படுத்தும் ஒரு விஷயம் பிரக்ஞானந்தாவின் தாய்.
எங்கே போட்டி நடந்தாலும் பிரக்ஞானந்தாவுடன் அவர் தாயாரை கண்டிப்பாக காண முடியும். எளிமையான உடை, பெரும்பாலான அம்மாக்களின் முகத்தோற்றம், ஆடம்பரமில்லாத தோற்றம் என்று தன்னுடைய மகனை ஊக்குவிக்க எல்லா போட்டிகளிலுமே தவறாமல் இவர் கூடவே இருப்பார். சொல்லப் போனால், பிரக்ஞானந்தாவின் ‘லக்கி சார்ம்’ அவருடைய அம்மா என்றே சொல்லலாம்.
பெரிய மனிதர்கள் கூடும் இடங்களிலும் சிறுவயது முதலே ஊக்கம் கொடுத்து தன்னுடைய மகனை அழைத்து செல்வது, அவருக்கு உறுதுணையாக இருப்பதென்று அந்த தாயின் முயற்சியே இன்று பிரக்ஞானந்தாவின் வெற்றிக்கு அடிப்படை காரணம் என்று கூட சொல்லலாம்.
‘எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே’ என்னும் பாடல் வரிகளே நினைவிற்கு வருகிறது.
நல்ல திறமையுள்ள பிள்ளைகள் பலர் இருந்தாலும், அவர்களின் திறமையை பெற்றோர்கள் பெரிதும் ஊக்குவிப்பது கிடையாது. பெற்றோர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு படிப்பு, வேலை, திருமணம் என்று அவர்களின் கனவை பிள்ளைகள் நிறைவேற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் உண்டு. ஆனால் ஒரு பெற்றோராக குழந்தைகளுக்கு செய்ய வேண்டியது எது தெரியுமா? அவர்களின் கனவு, ஆசை, லட்சியம் என்னவென்று கேட்டு அதற்கு தடையாக இல்லாமல் அந்த குழந்தைக்கு ஊக்கத்தை கொடுத்தால் போதும் அந்த குழந்தையால் எந்த உயரத்தையும் தொட முடியும்.
என்னுடைய கனவை, லட்சியத்தை நான் சாதிப்பேன் என்பதை இந்த ஊர், உலகம் நம்பவில்லையென்றால் என்ன? என்னுடைய பெற்றோர்கள் நம்புகிறார்கள், அவர்கள் எனக்கு ஊக்கம் கொடுக்கிறார்கள் என்று ஒரு குழந்தை நம்பும்போது அந்த குழந்தையின் மனதில் ஏற்படும் தன்னம்பிக்கையும், பலமுமே பல தடைகளை உடைக்கும் சக்தியை கொடுக்கும்.
நீ ஒரு டாக்டராக அல்லது ஒரு பொறியாளராக வேண்டும் என்று பிரக்ஞானந்தாவின் அம்மா சொல்லியிருந்தால், இன்று நமக்கெல்லாம் இப்படிப்பட்ட ஒரு செஸ் சாம்பியன் கிடைத்திருக்க மாட்டாரல்லவா?
எல்லோருக்குமே ஒவ்வொரு வித திறமையிருக்கிறது. அதை தடுத்து வேறு பாதையில் பிள்ளைகளை மாற்றி விடாமல் ‘நான் இருக்கிறேன்’ என்று பெற்றோர்கள் தரும் ஒரு சின்ன ஊக்கம் பல பிரக்ஞானந்தாக்களை உருவாக்கும். பெற்றோர்களிடம் பிள்ளைகள் எதிர்ப்பார்ப்பதும் அந்த சின்ன ஊக்கத்தைதான். நீங்களும் உங்கள் குழந்தைகள் அவர்கள் கனவுகளை அடைய ஊக்கம் கொடுத்துப் பாருங்களேன். நிச்சயமாக அவர்கள் நம்பமுடியாத உயரத்தை அடைவதை நீங்களே கண்கூடாக காணலாம். ஒரு சின்ன மாற்றம், சரித்திரத்தையே மாற்றும்!