Newly married couple 
மங்கையர் மலர்

சிறுகதை: கல்யாண பரிசு!

வாசுதேவன்

ஒரு சுப முகூர்தத்தில் அனுவிற்கும், அர்ஜுனுக்கும் திருமணம். இருவர் வீட்டாரும் பணக்காரர்கள். இருவரும் அவரவர் பெற்றோர்களுக்கு ஒரே ஒரு வாரிசு. கேட்க வேண்டுமா தட புடலுக்கு. திருமண நிகழ்ச்சி நடைப் பெற்றுக் கொண்டு இருந்தது.

ஓய்வு பெற்ற பள்ளிக்கூட ஆசிரியர் சுந்தரமும் அவரது மனைவி வனஜாவும் ஆட்டோவில் வந்து இறங்கினர் அனுவின் சித்தப்பா சுந்தரம். அவர்களது தகுதி கருதி சுந்தரமும் அவர் மனைவி வனஜாவும் ஒதுங்கியே வாழ்ந்து வந்தனர். நேரில் வந்து அழைக்காவிட்டாலும், தபாலில் வந்த அழைப்புக்கு மரியாதை கொடுத்து இருவரும் ஆட்டோவில் வந்து திருமண மண்டபத்தின் முன் இறங்கினர்.

அப்பொழுது மண்டபத்தின் உள்ளே இருந்து வேகமாக வந்த அனுவின் தந்தை சங்கரன், "ஏன் இவ்வளவு நேரம் என்று வினவ..!", சுந்தரத்திற்கு ஆறுதலாக இருந்தது. பதில் கூற வாய் திறக்கும் பொழுது புரிந்தது, அந்த வரவேற்பு கார் ஒன்றிலிருந்து இறங்கிய பணக்கார பெரிய மனிதருக்கு என்று.

அப்பொழுது அகஸ்மாத்தாக அங்கு வந்த மணமகன் அர்ஜுனுக்கு வந்த பெரிய மனிதர் அறிமுகம் செய்து வைக்கப் பட்டார். அதே சமயம் சுந்தரம், வனஜா தம்பதியினரின் முகத்தில் காணப்பட்ட ஏமாற்றத்தை, அர்ஜுனால் நன்கு உணர முடிந்தது. அர்ஜுன் அவர்கள் இருவரையும் நன்கு பார்த்தான்.

திருமணத்திற்கு வந்து இருக்கும் சுந்தரம், வனஜா இருவரையும் அனுவின் தந்தை சங்கரன் கண்டுக் கொள்ளவே இல்லை என்பதையும் அர்ஜுன் நோட் செய்து கொண்டான்.

சுந்தரம் தம்பதியினர் உள்ளே சென்று அமர்ந்தனர், முக வாட்டத்துடன். இருவரும் பேசிக் கொள்ள கூடவில்லை. டிபன் சாப்பிடக்கூட செல்லவில்லை.

சிந்தனையோடு சென்ற அர்ஜுன் விவரத்தை அறிந்துக் கொண்டான். பெரும் பணக்காரனாக இருந்த போதும் அர்ஜுனுக்கு, மனிதாபிமானம் அதிகம்.
அங்கு அந்த தம்பதியினர் இருவரும் எப்பொழுது கிளம்பி செல்லலாம் என்ற எண்ணத்தில் இருந்தனர்.

திடீரென்று அர்ஜுன், அனு சகிதம் ஜோடியாக அவர்கள் முன் தோன்றினான் .

"சார்..! நீங்கள் இருவரும் எங்களை மனதார ஆசிர்வதிக்க வேண்டும்..!", என்று சற்று உரத்த குரலில் கூறி அவர்கள் இருவரது கால்களிலும் புது மணமக்கள் விழுந்து வணங்கினர்.

இதை சிறிதும் எதிர் பார்க்காத சுந்தரம், வனஜா தம்பதியினர் திகைத்துப் போனாலும், மனதார வாழ்த்தினார்கள், அட்சதை தூவி.

"மிக்க மகிழ்ச்சி சார்..! என்னை தெரியவில்லையா. நான் தான் சார் அர்ஜுன், உங்க மாணவன். கோவை பள்ளியில் பயின்றவன். சார்..! நீங்கள் கணக்கு பாடத்துடன் எங்களுக்கு வாழ்க்கையில் எப்படி நேர்மையாகவும், தைரியமாகவும் வாழ வேண்டும் என்று கற்றுக் கொடுத்ததால் தான் நான் இன்று ஒரு சிறந்த நிலையில் இருக்கிறேன்," என்று புகழ்ந்து விட்டு, "தாங்கள் கட்டாயம் விருந்து உண்டு எங்களை கவுரவிக்க வேண்டும்" என்றும் வேண்டிக் கொண்டான்.

பிறகு கேட்கவா வேண்டும் இருவருக்கும் வி ஐ பி உபசாரம் தான். வனஜாவின் மனசு லேசானது. கணவரை நினைத்து பெருமை கொண்டாள்.

சுந்தரம் எவ்வளவு யோசித்தும் அர்ஜுன் எந்த வருடத்து மாணவன் என்று கண்டு பிடிக்க முடியவில்லை. அவை அடக்கம் கருதி மேற்கொண்டு விசாரிக்க முற்படவில்லை.

திருமணம் தடபுடலாக நடந்தேறியது. விருந்து அமர்க்களம். நன்றி கூறி விட்டு சுந்தரமும், வனஜாவும் விடை பெற்று சென்றனர். அவர்கள் சென்ற பின், அர்ஜுனின் சிறு வயது முதல் தோழனான பாண்டியன் வந்து, "அந்த வாத்தியாரை நாம் படித்த பள்ளியில் பார்த்தாக நினைவில் இல்லையே" என்றான்.

அர்ஜுன் சிரித்துக் கொண்டே "நானும் பார்த்ததே இல்லை. இன்று தான் முதன் முதலில் சந்தித்தேன்."

அப்படி என்றால், " ஏன்..! அவ்வளவு பில்ட் அப் செய்தாய்..!" என்று கேட்டான் பாண்டியன்.

"திருமணத்திற்கு மனைவியுடன் வந்தவரை என் மாமனார் அலட்சியப்படுத்தி நடத்திய விதம் என் கண்களில் பட்டது. சைக்கிள் கேப்பில் வந்தவர் பற்றி விவரம் அறிந்தேன். பிறகு நடந்ததை தான் நீ பார்த்தாயே. எங்கள் இருவருக்கும் கிடைத்தது மனமார்ந்த ஆசீர்வாதங்கள். அவர்கள் இருவருக்கும் உரிய மரியாதை கிடைத்தது..!", என்று கூறி விட்டு மன திருப்தியோடு விரைந்தான் அர்ஜுன் தன் புது மனைவியை பார்க்க.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT