நம் நாட்டில் பொதுமக்களுக்கு தங்க நகைகளின் மீது அதிக ஆர்வம் உண்டு. இந்த ஆர்வமும் மோகமும் எதனால் வருகிறது, இதிலிருந்து விடுபட என்ன செய்வது என்பதை விளக்குகிறது இந்தப் பதிவு.
நாட்டில் தங்கத்தின் விலையும், பெட்ரோல் விலையும் தான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய நாளில் பெட்ரோல் அத்தியாவசியத் தேவை என்பதால், விலையேற்றத்தை சகித்துக் கொண்டு தான் வாகனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர் பொதுமக்கள். ஆனால் தங்கம் அத்தியாவசியத் தேவையைத் தாண்டிய ஆடம்பரச் செலவு தான். பலரும் இங்கே மற்றவர்கள் பார்வைக்கு வசதியாக வாழ்கிறோம் என்பதைக் காட்டுவதற்காகவே தங்கத்தை அதிகளவில் வாங்கிக் குவிக்கிறார்கள்.
மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் தங்கம் வாங்கும் நபர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக உள்ளது. இந்திய மக்கள் பெரும்பாலும் தங்கத்தின் மீது அதிக மோகம் கொண்டுள்ளனர். இதனால் தங்கத்தின் விலை எவ்வளவு ஏறினாலும் அதன் விற்பனை மட்டும் இந்தியாவில் குறைவதில்லை. தங்கத்தின் மீதான அதீத மோகத்திற்கு என்ன தான் காரணம் என்று அலசினால், ஆசையும், கௌரவமும் என்ற இரண்டு விஷயங்கள் தான் நம் கண் முன் வந்து நிற்கிறது. ஒரு சிலர் இதையும் தவிர்த்து வருங்கால சேமிப்பிற்கான சிறந்த முதலீடாகவும் தங்கத்தைப் பார்க்கின்றனர்.
இன்றைய நாட்களில் தங்கத்திலும், நிலத்திலும் தான் அதிக முதலீடு செய்யப்படுகிறது. இவ்வாறு முதலீடு செய்தால், வருங்காலத்தில் விலையேற்றம் அடைந்து அதிக இலாபத்தைக் கொடுக்கும் என்பது பலருடைய எண்ணம். தங்கத்தில் முதலீடு செய்வதற்காக அரசு தரப்பில் தங்கப் பத்திர முதலீட்டுத் திட்டமும் உள்ளது. முதலீடாக பார்க்கும் போது தங்கம் மிகச் சிறந்த காரணியாக விளங்குகிறது. ஆனால், ஆசைக்காகவும், கௌரவத்திற்காகவும் தங்கம் வாங்குவது அவரவர் பொருளாதாரச் சூழலைப் பொறுத்து இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் அதைவிடுத்து, தங்கத்தின் விலை சிறிதளவு குறைந்தாலே உடனே நகைக் கடைக்குச் சென்று புதுப்புது மாடல்களில் தங்க நகை வாங்குவது பலரிடத்திலும் இருக்கும் பழக்கமாகி விட்டது.
சில பெண்கள் தங்கள் அழகை மேம்படுத்திக் கொள்ளும் ஆசையில் தங்கத்தை விரும்புகிறார்கள். சில பெண்கள் மகள்களின் திருமணத்திற்காக தங்கம் வாங்கி சேர்த்து வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மேலும், தங்கத்தின் மீதான மோகம் நம் நாட்டுப் பெண்களுக்கு அதிகம் என்பதை மறுக்க இயலாது. இருப்பினும் “விரலுக்கேற்ற வீக்கம்” என்ற பழமொழிப்படி, நம் வசதிக்கு ஏற்ற வகையில் தங்கம் வாங்கினால் நிதி நெருக்கடியில் சிக்காமல் தப்பித்துக் கொள்ளலாம். இல்லையெனில் அத்தியாவசியத் தேவைக்கு கூட பிறரை எதிர்பார்க்கும் நிலைக்கு ஆளாக நேரிடும்.
உறவினர்களின் விஷேசங்களுக்கு பெண்கள் செல்லும் போது அதிகளவில் தங்க நகைகளை அணிவது உண்டு. உறவினர்களிடத்தில் நாம் வசதியாக வாழ்கிறோம் என்று காட்டிக் கொள்ளவும், எங்கள் வீட்டில் நான் செல்வாக்காக இருக்கிறேன் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தவும் தான் இந்த வீண் விளம்பரம். அதேநேரத்தில் அவசரத் தேவைகளில் நமக்கு கைக்கொடுப்பதும் இந்த தங்க நகைகள் தான் என்பதையும் இங்கே மறுக்க முடியாது.
தங்கத்தின் மீதிருக்கும் ஆசை நம்மிடம் குறைந்து எதார்த்தத்தை உணர்ந்து கொண்டால், அதன் விலை உயர்ந்தால் என்ன? குறைந்தால் என்ன? என்று நம் வேலையில் நமது கவனத்தைச் செலுத்தலாம். தங்கமும் ஒரு உலோகம் தான் என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டால், அதன் மீதான ஆசை குறையத் தொடங்கும். ஆனால் தங்கத்தின் மீது ஆசை இருக்கும் வரை, அதன் விலையை நினைத்து அடிக்கடி கவலைப்பட்டுக் கொண்டே இருப்போம். நீங்கள் எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.