உலக நாடுகள் பலவற்றிலும் தினமும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் வருகின்றன. அவற்றில் சில உலக மக்களுக்கு நன்மை தருபவையாகவும் சில கேடுகளையும் விளைவிப்பவையாகவும் இருக்கின்றன. அந்த வகையில், கடந்த 2023ம் ஆண்டில் உலக நாடுகள் அளவில் நடைபெற்ற சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் மற்றும் மாற்றங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
நீடிக்கும் உக்ரைன் - ரஷ்யா போர்: 2022, பிப்ரவரி 24, ஆரம்பித்த ரஷ்யா - உக்ரைன் போர், 22 மாதங்கள் ஆகியும் ஒரு முடிவை எட்டவில்லை. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உக்ரைன் குடிமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. கூறுகிறது. ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட உக்ரைன் மற்றும் ரஷ்ய போர் வீரர்கள் உயிர் துறந்திருப்பதாக, ‘நியூயார்க் டைம்ஸ்’ கூறுகிறது. மொத்த உயிர் மற்றும் பொருட் சேதத்தைப் பற்றிய அதிகாரபூர்வத் தகவல்கள் இல்லை. உலகிலுள்ள நாடுகள், உக்ரைனை ஆதரிக்கும் அமெரிக்கா சார்பு நாடுகள், ரஷ்யாவை ஆதரிக்கும் நாடுகள் என்று இரு பிரிவாகப் பிரிந்து நிற்கின்றன. இந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை செயலிழந்து நிற்கிறது.
ஹமாஸ் - இஸ்ரேல் போர்: 2023, அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேலில் ஊடுருவித் தாக்கினர்.இதில் 1200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 240 நபர்கள் பிணைக் கைதிகளாகப்பட்டனர். இதனால், பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற காசாவை அழிப்பதே குறிக்கோள் என்று மிகக் கடுமையான தாக்குதலில் இறங்கியுள்ளது இஸ்ரேல். கடந்த பத்து வாரங்களாக நடக்கின்ற போரில், காசா பகுதியில் உயிர்ச் சேதமும், பொருட் சேதமும் அதிகம். இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் காசாவில் உயிரிழந்ததாகவும், இருபது இலட்சம் மக்கள் வீடு, உடைமைகளை இழந்து இருப்பதாகவும் கூறுகிறார்கள். இஸ்ரேலுக்கு ஆதரவும், எதிர்ப்புமாக உலக நாடுகள் இரு அணிகளாக நிற்கின்றன.
அமெரிக்க - சீனா உறவு: பொருளாதாரத்தில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் இரு நாடுகளுக்கும் உறவில் முன்னேற்றம் காணப்படவில்லை. 2022 நவம்பரில் பாலியில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டில் ஜோபைடன் மற்றும் லீ ஜின்பிங் சந்தித்துப் பேசியதால், 2023ல் உறவு சீரடையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
அமெரிக்கா, தனது எல்லைக்குள் பறந்த சீன கண்காணிப்பு பலூனை சுட்டு வீழ்த்தியதில் மறுபடியும் விரிசல். தாங்கள் அனுப்பியது வானிலை கணிக்கும் பலூன் என்கிறது சீனா. அமெரிக்க வெளியுறவுத் தலைவர், ப்ளிங்கன் ஜூன் மாதம் பெய்ஜிங்க் சென்றார். அதிபர் ஜோ பைடன், லீ ஜின்பிங் சந்திப்பு சான்பிரான்சிஸ்கோவில் நவம்பர் மாதம் நடைபெற்றது. சிறிய உடன்பாடுகள் ஏற்பட்டாலும், உறவில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.
கனடா - அமெரிக்கா குற்றச்சாட்டு: கனடாவின் அதிபர் ட்ரூடோ, ஜூன் மாதம் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட ஹர்தீப் சிங் நிஜார் கொலையில், இந்தியாவிற்குத் தொடர்பிருப்பதாகக் குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டை அபத்தம் என்று மறுத்த இந்தியா, நிஜார் தேடப்படும் காலிஸ்தான் குற்றவாளி என்றும் அவர் கொலையில் இந்தியாவிற்கு சம்பந்தம் இல்லை எனக் கூறியது.
பரஸ்பரம் தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட, விசா சேவைகள் பாதிக்கப்பட்டன. உறவு இன்னும் சீரடையவில்லை. இதனிடையில், அமெரிக்க குடிமகனான குர்பத்வந்த்சிங் பண்ணூன் என்ற காலிஸ்தான் தீவிரவாதியின் கொலை முயற்சியில் நிகில்குப்தா என்ற இந்தியர்க்கு சம்பந்தம் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. செகோஸ்லாவாகியா சிறையில் இருக்கும் குப்தாவை அமெரிக்காவிற்கு நாடு கடத்தும் முயற்சியில் அமெரிக்கா முனைந்துள்ளது. இதை தீர விசாரிப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது.
மக்கள் தொகையில் முதலிடம் பிடித்த இந்தியா: உலகிலேயே அதிக மக்கள் வசிக்கும் நாடான சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள், உலக மக்கள் தொகை 2023, அறிக்கையின்படி இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடி, சீனா 142.57 கோடி. சீனாவின் ஜனத்தொகை குறைவதுடன் அதனுடைய சராசரி வயது 39லிருந்து 51ஆக உயரும். இந்தியாவின் சராசரி வயது 39ஆக இருக்கும். வளரும் ஜனத்தொகை, இளம் தலைமுறை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும். இதனால், ஆசியாவில் முதன்மை நாடாக இந்தியா உருவெடுக்க வாய்ப்பளிக்கும்.
பாகிஸ்தான்: கிரிக்கெட் விளையாட்டிலிருந்து அரசியலுக்கு வந்த இம்ரான்கான் கைது, அவருடைய ஆதரவாளர்களால் அரசுக்கும், இராணுவத்திற்கும் எதிராகப் பெரிய கிளர்ச்சியைத் தூண்டியது. அன்வார் ககர் தற்காலிக பிரதம மந்திரியாகப் பொறுப்பேற்றார். ஊழல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இலண்டனில் இருந்த முன்னாள் பிரதம மந்திரி நவாஸ் ஷெரீப், நாடு திரும்பியுள்ளார். அடுத்த வருடம் அங்கு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. “அண்டை நாடான இந்தியாவைப் போல் நம் நாடு வளர்ச்சி அடையாததற்கு நாம்தான் காரணம்” என்கிறார் முன்னாள் பிரதம மந்திரி.
வங்கதேசம்: அடுத்த வருடம் ஜனவரி 7ம் தேதி பொதுத் தேர்தல். தற்போது ஆட்சி செய்வது அவாமி லீக் கட்சி. 19 வருடமாக பிரதம மந்திரியாக இருந்து வருகிறார் ஷேக்ஹசினா. அவர் பதவி விலகி, கட்சி சார்பற்ற இடைக்கால அரசு தேர்தல் நடத்த வேண்டும் என்பது வங்காளதேச தேசியக்கட்சியின் கோரிக்கை. இதனால் நடந்து வருகின்ற கிளர்ச்சியில் எதிர்கட்சியைச் சேர்ந்தவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.