செய்திகள்

நீலகிரியில் வாழ்வாதாரத்தை இழக்கும் 2500 குடும்பங்கள்: மூடப்படும் டேன் டீ !

ஜெ. ராம்கி

நீலகிரியில் உள்ள டேன் டீ தோட்டம், வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுவதாக ஓராண்டு காலமாகவே சர்ச்சை இருந்து வருகிறது. இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தி.மு.க கூட்டணிக்கட்சியினர் வனத்துறையிடம் ஒப்படைப்பதற்கு கண்டனம் தெரிவித்து வந்த சூழலில், நீலகிரி தொகுதியின் எம்.பியான ஆ.ராசாவும் அரசின் முடிவை ஆதரித்து பேசியிருப்பதால் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. 

கோவை வால்பாறை அருகே சின்கோனா பகுதியில் உள்ள டேன் டீ அரசு தேயிலை தோட்டம் உள்ளிட்ட சில தோட்டங்களை மீண்டும் வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்து சென்ற ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.  இதனால் 2500 குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.

'டேன் டீ' எனப்படும் தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்ட கழகம், இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்குத் திரும்பிய தமிழர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது.  தமிழக வனத்துறை வசம் இருந்த வனப்பகுதிகளை குத்தகை அடிப்படையில் 11,000 ஏக்கர் பெறப்பட்டு, தேயிலைத் தோட்டங்களாக மாற்றப்பட்டது. அதில் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்தவர்கள் பணியில் அமர்த்தப் பட்டார்கள். 

கடந்த 15 ஆண்டுகளாக டேன் டீ நிர்வாகம் நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. தொழிலாளர்கள் பற்றாக்குறை, நஷ்டம் என்று ஏதோதோ காரணங்களைச் சொல்லி டேன் டீ தோட்டத்திற்கு சொந்தமான 5 ஆயிரம் ஏக்கர் பகுதிகளை மீண்டும் வனத்துறையிடம் ஒப்படைக்கும் வேலைகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் தி.மு.க எம்.பியின் கருத்து, டேன் டீ தொழிலாளர்களை கோபப்படுத்தியிருக்கிறது. 

‘ஒரு நாள் கூலியாக 355 ரூபாய்தான் கிடைக்கிறது. ஆனால், எங்களுடைய வாரிசுகள் படித்து, பெரிய உத்தியோகத்தில் இருப்பதாக எம்.பி சொல்கிறார். டேன் டீ தோட்டத்தை நம்பி ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறோம்’ என்கிறார் உள்ளூர் வாசி. தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு எங்கே போனாலும்  வாழ்வாதார பிரச்னைதான். இலங்கையோ, தமிழகமோ அவர்களுக்கு அன்றாட வாழ்க்கையே போராட்டமாகிவிட்டது.

இந்நிலையில் டேன் டீ வசமுள்ள பகுதிகளில் வனத்துறை வசம் வந்தால், வன விலங்குகள் நடமாட்டத்திற்கு உதவியாக இருக்கும் என்கிற ரீதியில் ஆளும் தரப்பு பேச ஆரம்பித்திருக்கிறது. ஆஹா! என்னவொரு வன பாசம்!

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT