சூடானில் கடுமையான வறட்சி மற்றும் உள்நாட்டு போர் போன்ற பல காரணங்களால் மக்களின் வாழ்வாதரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், தற்போது காலராவால் 300 பேர் பலியாகியுள்ளனர்.
உலக நாடுகளில் ஆங்காங்கே வைரஸ் நோய்கள் பரவி வருகின்றன. அதில் சில தொற்றுகள் தீவிரமாகி மக்களின் உயிரைப் பறிக்கின்றன. அந்தவகையில் சூடானில், தற்போது காலரா நோய் வேகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் சுமார் 11,327 பேருக்கு காலரா நோய் ஏற்பட்டிருக்கிறது. அதில் 316 பேர் பலியாகியுள்ளனர். அதேபோல் டெங்கு காய்ச்சலும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசுத்தமான நீர் மற்றும் உணவுகளில் பரவும் ஒரு பேக்டிரியாதான் காலரா ஏற்பட காரணமாகிறது. சூடானில் நடந்து வரும் வன்முறை காரணமாக ஐந்து பேரில் ஒருவர் என்ற கணக்கில் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள். இதுவரை இதில் மொத்தம் 10,000 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த வன்முறை வெடிப்பால், சூடானில் சுமார் 25 மில்லியன் மக்கள் அதாவது சூடானின் பாதியளவு மக்கள் பட்டினி மற்றும் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதனால், அதிகமான மக்கள் எகிப்த், எதியோப்பியா மற்றும் தென் சூடான் ஆகிய பகுதிகளுக்குத் தப்பி ஓடி தஞ்சமடைகின்றனர்.
இப்படியான சூழ்நிலையில், பல நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்த காலரா நோயினால் அதிகளவு உயிர்சேதம் ஏற்படுகிறது. இந்த பரவலைத் தடுக்க வேண்டும் என்றால், குடிநீர், உணவுகளை சுகாதாரமாக்குதல் வேண்டும். இல்லையெனில் நினைத்ததைவிட அதிகமாக நோய் பரவி மக்கள் உயிரைக் கொல்லும். மேலும் இப்போது பரவிவரும் காலரா மிகவும் வேகமாக உயிரைக் கொல்லும் அளவிற்கு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
வயது வரம்பின்றி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இந்த காலரா நோய் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.
இதில் திடுக்கிடும் தகவல் என்னவென்றால், மூன்று நாட்கள் முன்பு சூடானின் மூன்று பகுதிகளில் மட்டும் 268 காலரா பாதிப்புகள் மற்றும் 17 பலி எண்ணிக்கை மட்டுமே இருந்தது. ஆனால், இப்போது சூடான் முழுவதுமே இந்த எண்ணிக்கையைவிட மிகமிக அதிகமாக இருப்பதால், இதன் வேகம் உலக நாடுகளை கதிகலங்க வைக்கிறது.