அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் தரப்பின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஒபிஎஸ் தரப்பையும் உள்ளடங்கிய பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற விசாரணை செய்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர். இதனிடையே ஈரோடு இடைத்தேர்தலை காரணம் காட்டி ஈபிஎஸ் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து கொண்டது.
முன்னதாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. அதிமுக தரப்பில் வேட்பாளர் யாரும் அறிவிக்கப்படாமல் தாமதமாகி வந்தது. வேட்பாளர் நிறுத்துவதில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டனர்.
அதிமுக வேட்பாளர் அறிவிப்பை அரசியல் கட்சிகள் எதிர்பார்த்திருந்த நிலையில் அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். ஈரோடு கிழக்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்நிலையில் இந்த மனு மீதான இரு தரப்பினரின் வாதங்கள் முடிவடைந்த நிலையில், இடைத்தேர்தலுக்கான ஓபிஎஸ் தரப்பையும் உள்ளடங்கிய பொதுக்குழுவை கூட்ட நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் அதிமுக வேட்பாளரை பொதுக்குழுவே இறுதி செய்யும்.
வேட்பாளரை தேர்வு செய்யும் விவகாரத்தில் பொதுக் குழுவில் வாக்கெடுப்பு நடைபெற வேண்டும். பொதுக்குழு முடிவுகளை அவைத்தலைவர் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும். பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். தற்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ஈரோடு இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.