ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா உலக பிரசித்தி பெற்றது. பொங்கல் விழாவில் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும், எழுத்தாளரும், இன்போசிஸ் அறக்கட்டளை தலைவருமான சுதா மூர்த்தி கலந்து கொண்டு பொங்கல் வைத்துள்ளார்.
இந்த பொங்கல் நிகழ்வில் தனக்கு கிடைத்த அனுபவங்களை எழுத இருப்பதாகவும், நிகழ்வுகளில் பேசும்போது அனைத்து இடங்களிலும் இதன் சிறப்பு குறித்து பேச இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை நடந்த ஆற்றுக்கால் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு மக்களோடு பொங்கல் வைத்தது பலரின் புருவத்தை உயர்த்தியுள்ளது.
மேலும், ''இந்த விழாவில் பலதரப்பட்ட பெண்கள் பல இடங்களிலிருந்து தங்கள் குடும்பத்தினரோடு இந்த இடத்திற்கு வந்திருந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இது சாதி, மத பேதமற்ற, ஏழை, பணக்காரர் என்ற பேதமின்றி அனைவரும் சமம் என்ற சமத்துவத்தை காட்டுவதாக இருந்தது. இந்த விழா முடிந்ததும் ஒருவருக்கொருவர் மீண்டும் சந்தித்துக் கொள்ளப் போவதில்லை. இருப்பினும், விழாவில் பொங்கல் வைக்கும்போது ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
''அருகில் இருந்தவர்களிடம் சாதம் வெந்துவிட்டதா என்று கேட்டேன். அவர்கள் இன்னும் கொஞ்சம் வேகட்டும் என்று கூறினர். நான் யாரிடம் கேட்டேனோ அவர் அருகிலிருந்த இருவருக்கு உதவினார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், கட்டுப்பாடுகள் இல்லாமல் ஒருவருக்கொருவர் உதவியதை பார்த்து ஆச்சரியமாக இருந்தது. இந்த சமத்துவத்தை வரவேற்கிறேன்.
கேரளாவில் 2019 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பின்னர் முதல்வரை சந்தித்து இன்ஃபோசிஸ் அறக்கட்டளை சார்பில் பல்வேறு உதவிகளை செய்தோம். அப்போது ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா பற்றி கேள்விப்பட்டேன். அடுத்த ஆண்டு கோவிட் தொற்று இருந்ததால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆதலால் இந்த ஆண்டு கலந்து கொண்டேன்'' என்று தெரிவித்துள்ளார்.
சமைக்கும்போது அடுப்பில் இருந்து வெளியேறிய புகையும், வெப்பமும் அவரது உற்சாகத்தை குறைத்து விடவில்லை. குழந்தை பருவத்தில் வடக்கு கர்நாடகாவில் உள்ள ஷிகானில் வளர்ந்துள்ள, அவரது சிறுவயதில் மின்சாரமோ, எரிவாயுவோ கிடையாதாம். அதனால் அடுப்பில் வெப்பத்தை எப்படி கூட்டுவது அல்லது குறைப்பது என்பது பற்றி தனக்குத் தெரியும் என்கிறார் வெளிப்படையாக.
கேரளாவில் எப்படி செய்வார்களோ அதேபோல், சிவப்பு அரிசி, வெல்லம், நெய், உலர் பழங்கள், தேங்காய் ஆகியவற்றைக் கொண்டு சுதா மூர்த்தி பொங்கல் வைத்தார். அவரது கணவரும் இன்ஃபோசிஸ் இணை நிறுவனருமான என்.ஆர். நாராயண மூர்த்தி வெளியூர் சென்றுவிட்டதால், கொச்சியைச் சேர்ந்த தனது மருமகள் அபர்ணாவுக்கும், மகன் ரோஹனுக்கும் டிபன் கேரியரில் பொங்கல் எடுத்துச் சென்றுள்ளார்.
இவரது மகள் அக்ஷதா, பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்கை திருமணம் செய்து கொண்டுள்ளார். தனிப்பட்ட முறையில் நான் யாருக்காகவும் பிரார்த்தனை செய்யவில்லை. புதன்கிழமை சர்வதேச பெண்கள் தினம் என்பதால், இங்கு பொங்கல் வைக்க வந்து இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.