செய்திகள்

CBSE பள்ளிகளிலும் படிக்கலாம் தமிழ் மீடியத்தில்!

கல்கி டெஸ்க்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கல்வி பயில்வதை பலரும் பெருமையாகவே கருதுகின்றனர். தற்போது அதுபோன்ற பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் இந்தி வழியில் மட்டுமே பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. அதாவது, இங்கிலீஷ் மீடியம் அல்லது இந்த மீடியங்களில் மட்டுமே மாணவர்களுக்கு பாடங்கள் சொல்லித் தரப்படுகின்றன. இந்தியாவின் பன்மொழிக் கொள்கையை ஊக்குவிக்கும்விதமாக இனிமேல், தமிழ் உட்பட, 22 இந்திய மொழிகளின் வழியிலும் கல்வியை போதிக்க சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுமதி தந்திருக்கிறது. புதிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020)க்கு ஏற்ப, கல்வி முறையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் புதிய தேசிய கல்விக் கொள்கை மாணவர்களுக்கு பன்மொழி அறிவுத் திறன் மற்றும் நன்மைகளை வலியுறுத்துகிறது. அதுமட்டுமின்றி, மாணவர்களின் தாய்மொழியில் பெரிதும் கவனம் செலுத்துகிறது.

இது சம்பந்தமாக சிபிஎஸ்இ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘இளம் மாணவர்களுக்கான பன்மொழி அறிவின் முக்கியத்துவம் மற்றும் அறிவாற்றல் நன்மைகளை புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. மேலும் இது, ஆரம்ப வகுப்புகள் முதல் 12ம் வகுப்பு வரையான வகுப்புகளில் மாற்றுவழியாக இந்திய மொழிகளைப் பயன்படுத்துவது வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. பன்மொழிக் கல்வியை நடைமுறைப்படுத்துவதும், தாய்மொழியில் பயிற்றுவிப்பதும், பன்மொழி அமைப்புகளில் கற்பிக்கும் திறன் வாய்ந்த ஆசிரியர்களின் இருப்பு, உயர்தர பன்மொழிப் பாடப்புத்தகங்களை உருவாக்குதல், குறிப்பாக இரண்டு ஷிப்ட் அரசுப் பள்ளிகளில், கிடைக்கக்கூடிய குறைந்த நேரம் உள்ளிட்ட பல்வேறு சவால்களை முன்வைக்கிறது” என்று தெரிவித்து இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து, தமிழ் உட்பட 22 இந்திய மொழிகளில் புதிய பாடப் புத்தகங்களைத் தயாரிக்கும்படி கல்வி அமைச்சகம் NCERTக்கு உத்தரவிட்டு இருக்கிறது. அடுத்து வரும் கல்வி ஆண்டில் இருந்து அனைத்து மாணவர்களுக்கும் பட்டியலிடப்பட்ட 22 மொழிகளில் பாடப் புத்தகங்கள் கிடைக்கும் வகையில் NCERT இந்தப் பணிக்கு அதிக முன்னுரிமை கொடுத்து இருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்திய மொழிகளில் பாடப் புத்தகங்களைத் தயாரிக்கவும், ஆங்கிலம் தவிர இந்த மொழிகளின் மூலம் கற்றல் - கற்பித்தல் செயல்முறையைத் தொடங்கவும் தயாராகி வருகிறது. மேலும், இந்திய மொழிகளை ஆய்வு செய்யவும் முடிவு செய்யும். அதேபோல், தொழில்நுட்பம், மருத்துவம், தொழில் திறன், சட்டம் போன்றவற்றைப் படிக்கும் மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களும் இந்திய மொழிகளில் தயாரிக்கப்பட உள்ளது. ஆகவே, வரும் கல்வியாண்டில் இருந்து சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை தமிழ் வழியிலும் பயில முடியும் என்பது குறிப்பித்தக்கது.

அடுத்த ஆண்டிலிருந்து ஸ்மார்ட் போன்கள் விலை உயரும் என ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அறிவிப்பு!

விமர்சனம்: கங்குவா - படக்குழுவின் பேட்டிகளும் இப்போது படமுமே 'மீம் மெட்டீரியல்'கள் ஆகிப் போச்சே!

காவிரியில் கடைமுழுக்காடி ஜன்மாவை கடைத்தேற்றுவோம்!

நிதானமாக இருப்பதால் கிடைக்கும் லாபம் என்ன தெரியுமா?

NISAR - இஸ்ரோ - நாசா கூட்டு முயற்சியில் பேரிடர் கண்காணிப்பு செயற்கைக்கோள்!

SCROLL FOR NEXT