நம் வாழ்க்கையில் நாம் அவசரப்பட்டு, பதற்றப்பட்டு எடுக்கும் முடிவுகள் நமக்கு எப்போதும் நல்ல பலனைத் தருவதில்லை. அதற்கு பதில் சற்று நிதானமாகவும், அமைதியாகவும் முடிவெடுத்துப் பாருங்களேன். நாம் நினைத்ததை விட அதிக பலனை பெறலாம். இதைப் புரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஒரு சின்ன பையன் தன் அம்மாவுடன் கடைக்கு போகிறான். அந்த பையனை பார்த்த கடைக்காரர் அவனை அங்கிருக்கும் பாட்டிலில் உள்ள சாக்லேட்டை எடுத்துக்கொள்ள சொல்கிறார்.
ஆனால், அந்த பையன் சாக்லேட்டை எடுக்காமல் அமைதியாக இருந்தான். இதைப் பார்த்த கடைக்காரருக்கு ஆச்சர்யம். ‘சின்ன பையனாக இருக்கிறான் சாக்லேட் வேண்டாம் என்கிறானே!’ என்று நினைத்து மறுபடியும் எடுத்துக்கொள்ள சொல்கிறார்.
இப்போது அந்த பையனின் அம்மாவும், ‘சாக்லேட்டை எடுத்துக்கொள்’ என்று சொல்கிறார். ஆனால், அந்த பையன் எடுக்கவில்லை. இதைப்பாரத்த கடைக்காரரே வந்து பாட்டிலை திறந்து கை நிறைய சாக்லேட்களை எடுத்து அந்த பையனின் கைகளில் கொடுக்கிறார். இரண்டு கைகளிலுமே நிறைய சாக்லேட்ஸ் கிடைத்ததால் அந்த பையனுக்கு ரொம்ப சந்தோஷம்.
வீட்டிற்கு வரும்போது அந்த பையனின் அம்மா கேட்கிறார். ‘கடைக்காரர் சாக்லேட் எடுத்துக்க சொல்லும்போது நீ ஏன் எடுத்துக் கொள்ளவில்லை’ என்று கேட்கிறார். அதற்கு அந்த சின்ன பையன் என்ன சொன்னான் தெரியுமா?
‘அம்மா! என்னுடைய கை ரொம்ப சின்னது. நான் அந்த பாட்டிலில் கைவிட்டு சாக்லேட்டை எடுத்தால் என்னால் ஒன்று, இரண்டுதான் எடுக்க முடியும். ஆனால், இப்போது கடைக்காரரே தன்னுடைய பெரிய கைகளால் எடுத்துக் கொடுத்தபோது நிறைய சாக்லேட்ஸ் கிடைத்தது’ என்று சொன்னான். இதை கேட்ட அம்மா தன் பிள்ளையின் புத்திசாலித்தனத்தை நினைத்து ஆச்சர்யப்பட்டார்.
இந்த கதையில் வந்ததுப் போல்தான். வாழ்க்கையில் என்றைக்குமே எந்த முடிவெடுக்கும் போதும் கொஞ்சம் நிதானமாகவும், புத்திசாலித்தனமாக யோசித்தால் போதும், நாம் நினைப்பதை விடவே அதிகமான பலனைப் பெறலாம். இதை புரிந்துக்கொண்டு முயற்சித்துப் பாருங்கள். நிச்சயம் வாழ்க்கையில் வெற்றிப் பெறலாம்.