செய்திகள்

இனி இந்த ஆட்டமெல்லாம் ஆட முடியாது! எது தெரியுமா?

சேலம் சுபா

பாரம்பர்யமிக்க கலைகள் அனைத்தும் நம் தமிழகத்தின் சொத்துகள். பரதத்துடன் கரகம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை எனப் பல்வேறு கிராமப்புற நடனங்களும் நம் தமிழர் பாரம்பர்யங்களை வெளிப்படுத்துபவைகளாக உள்ளன. இந்த நடனங்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் நடக்கும் கோயில் திருவிழாக்களில் பங்கு பெற்று மக்களை மகிழ்வித்து வருகின்றன. அந்த வகையில் கலைகள் தோன்றிய காலத்தில் இருந்தே குறவன் குறத்தி நடனமும் தமிழகத்தில் பிரசித்திபெற்ற கலையாகக் கருதப்பட்டது. நாட்கள் செல்லச்செல்ல அந்த நடனம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைக் குறிக்கும் வகையிலும் ஆபாசம் கலந்து இருப்பதாகவும் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்தனர்.

      இதை அடுத்து இந்த நடனத்தை தடை செய்ய வேண்டுமென தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தப் பட்டன. தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் குறவன் குறத்தி ஆட்டத்தை தடை செய்ய உத்தரவிடப்பட்டது. இதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என குறவன் - மலைக்குறவன் கூட்டமைப்பு சார்பில் கலை மற்றும் பண்பாட்டு துறையிடம் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் குறவன் குறத்தி ஆட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கீகரிக்கப்பட்ட கலைப்பட்டியலில் இருந்தும் நீக்கம் செய்ய உத்தரவிடப் பட்டுள்ளது.

       இது தொடர்பாக சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில்...

தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தின் அங்கீகரிக்கப்பட்ட நூறு கலைகள் அடங்கிய கலைப்பட்டியலில் குறவன் குறத்தி ஆட்டம் இடம் பெற்றிருந்தாலும், இக்கலைப் பிரிவில் உறுப்பினராக இதுவரை எவரும் பதிவு செய்யவில்லை என்பதால் வரிசை எண் 40ல் இடம் பெற்றுள்ள குறவன் குறத்தி ஆட்டம் என்ற கலைப்பிரிவை நீக்கம் செய்யுமாறு கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், கரகாட்டம் உட்பட ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் எந்த ஒரு கலை நிகழ்ச்சிகளிலும் குறவன் குறத்தி ஆட்டம் என்ற கலை நிகழ்ச்சி நடத்துவதற்குத் தடை விதித்து ஆணை வழங்குமாறு தெரிவித்துள்ளார். இயக்குனரின் கருத்துருவைப் பரிசீலனை செய்தும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்புரையைச் செயல்படுத்தும் விதமாகவும் தமிழ்நாடு குறவன் மலைக்குறவன் மற்றும் குறவர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் கோரிக்கையின் அடிப்படையிலும் அடையாளம் காணப்பட்ட 100 கலைகள் பட்டியலில் வரிசை எண் 40ல்  இடம்பெற்றுள்ள குறவன் குறத்தி ஆட்டம் என்ற கலைப் பிரிவை நீக்கம் செய்து அரசு ஆணை இடுகிறது. மேலும் கரகாட்டம் என்ற பெயரிலும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் எந்த ஒரு கலை நிகழ்ச்சி களிலும் குறவன் குறத்தி ஆட்டம் என்ற கலை நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை செயல்படுத்தி குறவன் குறத்தி ஆட்டம் எந்த ஒரு கலை நிகழ்ச்சிகளிலும் நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்திடுமாறு கலைப் பண்பாட்டுத் துறை இயக்குனர் அறிவுறுத்தப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

      இந்தத் தடையை வரவேற்றுள்ள தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க முன்னாள் மாநில துணை செயலாளர் செந்தில்குமார் தமிழ்நாடு முதல்வருக்கும் இதற்காகவே போராடிய அனைத்து சங்கத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கும்  நன்றி தெரிவித்துள்ளார்.

     கல்வி அறிவு பெருகி வரும் இக்காலத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரின் மனது புண்படுத்தும் வகையிலான இந்தக் குறவர் குறத்தி ஆட்டம் தடை செய்யப்பட்டுள்ளது அந்தச் சமூகத்தின் முன்னேற்றத்துக்கான வெற்றியாக கொள்ளலாம்.

இயற்கையிடம் சுறுசுறுப்பை கற்றுக் கொள்ளுங்கள்!

தலைக்கு ஷாம்பு பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க!

வாழ்க்கை என்பது கொடுக்கல் வாங்கல் மட்டுமல்ல…

புடவைக் கட்டும் பொழுது பெண்கள் செய்யக்கூடாத 9 தவறுகள்!

நிமிர்ந்த நடைக்கு ஆதாரமான முதுகெலும்பை பராமரிக்க 10 எளிய வழிகள்!

SCROLL FOR NEXT