லோக்சபா தேர்தல் தேதி அறிவித்து நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், பிரேமலதா விஜயகாந்த் விதிமுறைகளை மீறி பேனர் அடித்ததாகக் கூறி கோயம்பேடு போலீஸார் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர்.
ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தல் தேதி சென்ற வாரம் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்தே நாடு முழுவதும் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன.
அதாவது அந்த விதிமுறைகள் அமலுக்கு வந்தால் திட்டங்கள் அறிவிக்கக்கூடாது, நடைமுறைப்படுத்தக்கூடாது போன்ற நிறைய விதிகள் உள்ளன. ஒருவேளை அந்த விதிமுறைகளை யாராவது மீறினால் அது யாராக இருந்தாலும் அவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் தமிழகம் முழுவதும் கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பணம் பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் ஆகியவற்றைத் தடுக்க தேர்தல் அதிகாரிகள் தமிழகம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆவணங்கள் இல்லாமல் கொண்டுச் செல்லப்பட்டப் பணத்தைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.
அந்தவகையில் நேற்று விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மகளிர் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. எம்பிராய்டிங் தையல் பயிற்சி நிபுணர் சரண் விஜய் 6 மாதங்களாக இலவச வகுப்பு நடித்தி வந்தார். இந்த நிகழ்ச்சியில் அதன் இறுதி நாளை முடிவுசெய்துவைத்து சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில் 300 பெண்களுக்கு இலவச சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக இந்த நிகழ்ச்சியை நடத்த கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் அனுமதிக் கேட்கப்பட்டது. ஆனால் நடத்தை அமல் காரணமாக போலீஸார் அனுமதி வழங்கவில்லை. அதையும் மீறி நிகழ்ச்சி நடைபெற்றதால் எப்படி இந்த நிகழ்ச்சியை நீங்கள் நடத்தலாம் என்று போலீஸார் தேமுதிக அலுவலகத்திற்குச் சென்று கேட்டுள்ளனர்.
அப்போது தேமுதிக நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சி அலுவலகத்திற்குள் மட்டுமே நடக்கிறது. ஆகையால் அதை யாரும் கேட்க முடியாது என்று கூறியுள்ளனர். அதேபோல் இதனால் மற்றவர்களுக்கு எந்தப் பாதிப்பும் பிரச்சனையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் விதிகளை மீறி அலுவலகத்திற்கு வெளியே பந்தலும், பேனரும் போடப்பட்டிருந்தன. இதுக்குறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கோயம்பேடு போலீஸாரிடம் புகார் அளித்தார். இதனையடுத்துதான் விதிகளை மீறியதாகக் கூறி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மற்றும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த காளிராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.