அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து வரும் நிலையில், கமலா ஹாரிஸ் பிரச்சாரத்திற்கு அணிந்து வந்த கம்மல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆகையால், பிரச்சாரமும், தேர்தல் பணிகளும் சூடுபிடித்துள்ளது. அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதேபோல் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வேட்பாளராக மீண்டும் களமிறங்கவிருந்த நிலையில், அவர் சில காலத்திற்கு முன்னர், போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்தார்.
ஜோ பைடனுக்கு ஏற்கனவே சொந்த கட்சியில் பல எதிர்ப்புகள் இருந்தன. ஆகையால், அவரை இம்முறை போட்டியிட விடக்கூடாது என்று கட்சிக்காரர்களே எதிர்த்தனர். ஆனாலும், அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் என்று திடமாக இருந்து வந்தார். சில நாட்களுக்கு பின்னர் அவரது குடும்பத்தினரும் போட்டியிலிருந்து விலக கூறினர். ஆகையால் இவர் போட்டியிடப்போவதில்லை என்று கூறிவிட்டார். இதனால், அவருக்கு பதிலாக கமலா ஹாரிஸ் களமிறங்குகிறார்.
கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இடையே காரசாரமான வாதங்கள் எழுகின்றன. இருவரும் செல்லும் பிரச்சாரங்கள் தீயாய் இருக்கின்றன. அந்தவகையில் தற்போது கமலா ஹாரிஸ் பிரச்சாரத்திற்கு அணிந்து சென்ற கம்மலால் சர்ச்சை எழுந்துள்ளது. கமலா ஹாரிஸ் அணிந்த கம்மல் ஐஸ்பாக் சவுண்ட் சொல்யூஷன்ஸின் ‘நோவா எச் 1 ஆடியோ கம்மல்கள்’ என்றும், இது வழியாக யாரோ ஒருவர் அவரைத் தொடர்பு கொண்டு, விவாதத்தின் போது உதவுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், நிபுணர்கள் மற்றும் உண்மைச் சரிபார்ப்பாளர்கள் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளனர். அவர்களின் கூற்றுப்படி, கமலா ஹாரிஸ் அணிந்திருந்தது உண்மையான கம்மல்களே. இது டிஃப்பனி & கோ நிறுவனத்தின் இரட்டை முத்து கம்மல்கள் என்றும், இதன் விலை சுமார் 800 டாலர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சர்ச்சையானது கமலா ஹாரிஸ் தரப்பை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை தேர்தல் ரிசல்ட்டில்தான் பார்க்க முடியும்.