திராவிட மாடல் அரசியல் என்பதே வாரிசு அரசியலை மையப்படுத்தி தான் என்பதை மீண்டும் நிரூபிக்கிறது என கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதி புலியகுளம் அருகே உள்ள அம்மன் குளம் பகுதியில் 66வது வார்டில் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீர் இயந்திர திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், 24 மணி நேரமும் ஆரோ தண்ணீரை பெற்றுக் கொள்ளும் தானியங்கி எந்திரத்தை திறந்து வைத்துள்ளதாகவும் மேலும் இரண்டு இயந்திரங்களை திறந்து வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
திராவிட மாடலின் அடிப்படை சமூக நீதி என்றால் அந்த சமூக நிதி சம நீதியாக இருக்க வேண்டும் என்றும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு துணை முதல்வர் பதவியோ, அல்லது முக்கிய இலாகாக்களின் பதவியோ வழங்கவில்லை. கட்சியில் இருக்கும் தலைவரின் மகனுக்கு இந்த பதவியை வழங்கியுள்ளனர். திராவிட மாடல் என்பது வாரிசு அரசியலை மையப்படுத்தி தான் என்பதை இது மீண்டும் நிரூபிக்கிறது என்றார். இது ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு விஷயம் எனவும் தெரிவித்தார்.
இவர்கள் பேசுவது எல்லாம் குடும்ப அரசியல் வாரிசு அரசியலைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதை திரும்பத் திரும்ப நிரூபித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். பாஜகவில் கடைநிலை ஊழியரும் கூட நாட்டின் உயர்ந்த பொறுப்புகளுக்கு வர முடியும் என்கின்ற உண்மையான ஜனநாயகத்தை நாங்கள் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறோம் என்றார். தமிழகத்தின் அமைச்சரவையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் அரசியல் ரீதியாக அனுபவம் உள்ளவர் சக உறுப்பினராக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் , கர்நாடகா தேர்தலை பொருத்தவரை நாங்கள் மக்களை நம்புகிறோம். மக்கள் ஆதரவு பாஜகவிற்கு உள்ளது என்கிறார் வானதி ஸ்ரீனிவாசன்.