செய்திகள்

கட்சியின் பெயரை மாற்ற தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை: உத்தவ் தாக்கரே!

ஜெ.ராகவன்

ஒரு கட்சிக்கு தேர்தல் சின்னம் ஒதுக்குவதற்குத்தான் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது. ஆனால், ஒரு கட்சியின் பெயரை மாற்றுவதற்கு அதற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று சிவசேனை உத்தவ் தாக்கரே பிரிவின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முன்னாள் முதல்வரான உத்தவ் தாக்கரே, செய்தியாளர்களிடம் பேசுகையில், சிவசேனை என்ற பெயர் தாத்தா (கேசவ் தாக்கரே) வழங்கிய பெயர். அதை எவரும் பறித்துச் செல்லவிடமாட்டேன் என்றும் கூறினார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையம் சிவசேனை கட்சிப் பெயரையும், அதன் வில் அம்பு சின்னத்தையும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பிரிவினருக்கு வழங்கி உத்தரவிட்டது.

எனினும் உத்தவ் தாக்கரே பிரிவினர் சிவசேனை (உத்தவ் பாலாசாஹேப் தாக்கரே) என்ற பெயரில் இயங்கவும், அக்கட்சிக்கு சுடர்விடும் ஜோதி சின்னத்தையும் ஒதுக்கி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. 2019 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு உத்தவ் தாக்கரே, பா.ஜ.க.வுடன் உறவை முறித்துக் கொண்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மகா விகாஸ் அகாதி என்னும் கூட்டணியை உருவாக்கி அரசு அமைத்து முதல்வரானார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஷிண்டே, தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து உத்தவ்க்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வெளியேறி, பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்து முதல்வரானார்.

இந்த நிலையில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உத்தவ் தாக்கரே, ஒரு அரசியல் கட்சியின் பெயரை மாற்றுவதற்கு தேர்தல் ஆணையத்து அதிகாரம் இல்லை. தேர்தல் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய மட்டுமே அதற்கு அதிகாரம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.எனது தாத்தா கேசவ் தாக்கரே வைத்த பெயர்தான் சிவசேனை. அதை எப்படி தேர்தல் ஆணையம் மாற்றியமைக்கலாம். எங்கள் கட்சியின் பெயரை வேறு ஒருவர் பறித்துக்கொள்வதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றார் அவர்.

மக்களவைத் தேர்தலை ஒட்டி பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதே என்று கேட்டதற்கு, இதை எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்று நான் சொல்ல மாட்டேன். நாங்கள் எல்லோரும் தேசபக்தர்கள். ஜனநாயகத்தை நிலைநிறுத்தவே ஒன்று சேர்ந்துள்ளோம் என்று உத்தவ் தாக்கரே கூறினார்.

1975-77 ஆண்டு காலத்தில் நாட்டில் நெருக்கடி நிலை அமலில் இருந்தபோதிலும் அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த அரசு எதிர்க்கட்சிகள் தேர்தலில் பிரசாரம் செய்ய அனுமதித்ததை அவர் சுட்டிக்காட்டினார். இலக்கியவாதிகளான பி.எல்.தேஷ்பாண்டே, துர்கா பகவத் உள்ளிட்டோரும் தேர்தல் பிரசாரம் செய்தனர். அந்த ஆண்டு ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது. தற்போது அந்த அளவு சுதந்திரம் உள்ளதா என நான் ஆச்சரியப்படுகிறேன் என்றார் உத்தவ் தாக்கரே.

ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சிவசேனை கட்சி பெயரும், வில் அம்பு சின்னமும் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை எதிர்த்து உத்தவ் தாக்கரே தாக்கல் செய்த மனுவை வரும் ஜூலை மாதம் 31 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.கடந்த மே 11 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு அளித்த தீர்ப்பு முற்றிலும் சட்டவிரோதமானது. எனவே தமது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே கூறியிருந்தார்.

மேலும் தேர்தல் நெருங்கி வருவதால் ஷிண்டே பிரிவினர் சட்டவிரோதமாக தங்களது கட்சி பெயரையும் சின்னத்தையும் பயன்படுத்தி வருகின்றனர். எனவே மனுவை அவசரமாக விசாரிக்க பட்டியலிட வேண்டும் என்றும் உத்த்வ் தாக்கரே கோரியிருந்தார்.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT