விவசாயிகளின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், வேளாண்மைத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா மற்றும் அமைச்சர் நித்தியானந்த் ராய் ஆகியோர் விவசாயிகளுடன் நேற்று நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
விவசாயக் கடன் தள்ளுபடி, விளைப்பொருட்களுக்குக் குறைந்த பட்ச ஆதரவு விலை, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்துதல் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த சில நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியை நோக்கி பேரணியாக சென்ற விவசாயிகளை பஞ்சாப் ஹரியானா எல்லையில் போலீஸார் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அமைச்சர்கள் மற்றும் பஞ்சாப் முதல்வர் பக்வாந்த் மானும் சேர்ந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சண்டிகரில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தை நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1 மணி வரை நீடித்தது. பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது, “பருத்தி, மக்காச்சோளம், பருப்பு வகைகள் ஆகியவற்றை குறைந்த பட்ச ஆதரவு விலையில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அரசு நிறுவனங்கள் வாங்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் துவரை, உளுந்து, சோளம் மற்றும் பருத்தியை அரசு கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் நபார்டு நிறுவனகள் ஆகியவை வாங்கும். விவசாயிகளிடமிருந்து எந்த அளவிற்கு அந்த நிறுவனங்கள் வாங்கும் என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை. இதற்கான தனி செயலி ஒன்று விரைவில் உருவாக்கப்படும். இதன்மூலம் நிலத்தடி நீரையும் அதிகரிக்கலாம், பஞ்சாப் விவசாயமும் பாதுகாக்கப்படும்” என்று முடித்தார்.
மேலும் விவசாய அமைப்பின் நிர்வாகி கூறுகையில், “அரசின் திட்டங்கள் குறித்து இந்த இரண்டு நாட்களில் பேசப்படும். மேலும் இந்த துறை தொடர்பான நிபுணர்களிடம் கருத்துகள் கேட்கப்படும். விவசாயக் கடன் தள்ளுபடி செய்வது குறித்து இன்னும் எதுவும் பேசவில்லை. அதுவும் இன்னும் இரண்டு நாட்களில் பேசப்படும் என்று நம்புகிறோம். டெல்லி சலோ பேரணி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்களுக்கெல்லாம் தீர்வுக் காணப்படவில்லையெனில் மீண்டும் வரும் 21ம் தேதி காலை 11 மணிக்கு பேரணியைத் தொடங்குவோம்” என்றார்.