இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகள் அடுத்தடுத்து வர இருப்பதால் அந்தக் காலங்களில் கூடுதல் கார் விற்பனையைச் செய்ய மாருதி சுசுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக மாருதி சுசுகி நிறுவனம் உள்ளது. மாருதி சுசுகி கார் விற்பனை ஆண்டுக்கு 40 லட்சம் முதல் 45 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, பண்டிகை காலங்களில் அதிக அளவிலான விற்பனை நடைபெறுவது வழக்கம்.
இதன் அடிப்படையில் நடப்பு ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி முதல் நவம்பர் மாதம் 14ம் தேதி வரை 68 நாட்கள் பண்டிகை காலங்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், இக்குறிப்பிட்ட நாட்களில் விஜயதசமி, நவராத்திரி, ஆயுத பூஜை, தீபாவளி போன்ற முக்கியமான பண்டிகைகள் கொண்டாட இருப்பதால் அந்தக் காலங்களில் மக்கள் வாகனங்களை வாங்க கூடுதல் முக்கியத்துவம் அளிப்பர். அதன் அடிப்படையில் நடப்பு நிதியாண்டில் விற்பனையை அதிகப்படுத்த மாருதி சுசுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மாருதி சுசுகி நிறுவனத்தின் முதல்நிலை செயல் அதிகாரி சேஷாய் ஸ்ரீ வர்ஷன் தெரிவித்தபோது, “தற்போது தொடங்க இருக்கும் பண்டிகை காலத்தில் மாருதி சுசுகி 10 லட்சம் வாகனங்களை விற்பனை செய்ய திட்டமிட்டு இருக்கிறது. கடந்த ஆண்டில் 42 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக, பண்டிகைக் காலத்தில் மட்டும் 22 சதவீதம் முதல் 27 சதவீதம் வரை கார்களின் விற்பனை நடைபெற்றிருக்கிறது. இதனால் நடப்பு பண்டிகைக் காலத்தில் 10 லட்சம் கார்களை விற்பனை செய்வதை இலக்காக நிர்ணயித்திருக்கிறோம். இதற்காக விற்பனை நிலையங்களில் கூடுதல் சலுகைகள், சிறப்பம்சங்கள் உள்ளிட்டவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அதேசமயம், பண்டிகை காலத்துக்குப் பிறகு ஆண்டு இறுதியில் விற்பனை நலிவடையும். அதனால் புதிய ஆண்டு தொடக்கத்தில் விற்பனையை அதிகப்படுத்த கூடுதல் சலுகைகள், பரிசுகள் ஆகியவற்றை வழங்கி, விற்பனையைக் கூட்டவும் வாகன நிறுவனங்கள் திட்டமிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் வாகன விற்பனைக்கு மீண்டும் இலக்கு நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது.