மஹா லக்ஷ்மியின் பிறப்பு ரகசியம் தெரியுமா?

Goddess MahaLakshmi
Goddess MahaLakshmiImg Credit: Pinterest
Published on

ஶ்ரீதேவி எனப்படும் லஷ்மி தேவிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் உண்டு. அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தின் கடவுளான லஷ்மி தேவி, பல மதத்தினரால் வழிபடப்படும் ஒரு பொது தெய்வம் ஆவார்.

பிரபஞ்சம் தோன்றும் போது ஶ்ரீ தேவியும் சக்தியின் ஒரு வடிவமாக தோன்றினாள். தேவர்களுக்கு அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியை தரும் கடவுளாக தேவலோகத்தில் வீற்றிருந்தாள். முன்பொரு சமயம் கோபத்திற்கு பெயர் பெற்ற துர்வாச முனிவர் திருக்கயிலை மலையிலிருந்த ஈசனை வழிபட்டு ஆசி வேண்டினார். ஆசி வழங்கிய ஈசன் துர்வாசருக்கு ஒரு தெய்வீக மாலையை வழங்கினார்.

மாலையைப் பெற்றுக் கொண்ட துர்வாசர், அதை எடுத்துக் கொண்டு தேவலோகம் சென்றார். தேவலோகத்தில் இந்திரனை சந்தித்த அவர், அந்த தெய்வீக மாலையை அன்பளிப்பாக கொடுத்தார். இந்திரன் மாலையை மரியாதையுடன் ஏற்றுக்கொண்டு தனது யானையான ஐராவதத்தின் கழுத்தில் அந்த தெய்வீக மாலையை அணிவித்தார். மாலையில் இருந்த வண்டுகள் ஐராவதத்தை சுற்றி ரிங்கரித்துக் கொண்டிருந்தது. வண்டினை கண்டு பயந்து போன ஐராவத யானை மாலையை கழட்டி வீசியது. இதை பார்த்து கோபமடைந்த துர்வாச முனிவர், இந்திரனிடம், உனது அதிர்ஷ்டமும்  செல்வமும் விரைவில் அழிந்து போகும். ஶ்ரீ தேவியும் தேவலோகம் விட்டு நீங்குவாள் என்று சாபம் கொடுத்தார்.

துர்வாச முனிவரின் சாபத்தினால் ஶ்ரீதேவி தேவலோகம் விட்டு பாற்கடலுக்குள் சென்று விட்டார். ஶ்ரீ தேவி தேவலோகம் விட்டு சென்றதால் தேவர்களின் சக்தி பலவீனமடைந்தது. இதனால் அசுரர்கள் தேவர்களை தாக்கி தேவலோகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆதரவற்ற நிலையில் இருந்த தேவர்கள், பிரம்மதேவனிடம் சென்று முறையிட்டனர். ஶ்ரீதேவியைத் திரும்பப் பெறாதவரை மீண்டும் சக்தியைப் பெற முடியாது என்று பிரம்மா கூறினார்.

பிரம்ம தேவர் தேவர்களிடம் பாற்கடலை கடையும் ஆலோசனை வழங்கினார். அவ்வாறு செய்வதால் ஶ்ரீ தேவி வெளியே வருவது மட்டுமல்லாது அமிர்தமும் கிடைக்கும். அந்த அமிர்தம் கிடைத்தால், அதை உண்டால், தேவர்கள் அனைவருக்கும் சாகாவரம் கிடைக்கும் என்றும் கூறினார். கடலைக் கடைய தேவர்களின் பலம் மட்டும் போதாது அசுரர்களின் துணையும் வேண்டும். தேவர்கள் அசுரர்களுக்கும் அமிர்தம் கொடுப்பதாகக் கூறி அவர்களையும் பாற்கடலைக் கடைய கூட்டு சேர்த்தனர்.

தேவ-அசுரர்கள் பெரிய மந்திர மலையை மத்தாகவும், வாசுகி நாகத்தைக் கயிறாகவும் பயன்படுத்தி பாற்கடலை கடைந்தனர். மந்திர மலை கடலில் மூழ்க விடாமல் காப்பாற்ற மஹாவிஷ்ணு கூர்ம (ஆமை) அவதாரம் எடுத்து தன் முதுகில் தாங்கிக் கொண்டார். பாற்கடலை கடையும் போது அதில் பேரழகு மிக்க ஶ்ரீதேவி அலைகளின் நடுவே பத்ம மலர்களின் மேலே மீண்டும் தோன்றினாள். அலைகளின் நடுவில் தோன்றியதால் அலை மகள் என்ற பெயரும் தேவிக்கு உண்டு.

இதையும் படியுங்கள்:
நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!
Goddess MahaLakshmi

தேவியின் தெய்வீக அழகினால் மஹாலட்சுமி என்ற பெயரில் அழைக்கப்பட்டார். லஷ்மி தேவியின் அழகைக் கண்டு மஹா விஷ்ணு மயங்கினார். மஹா லக்ஷ்மியும் விஷ்ணுவின் பார்வையில் நாணினாள். மஹாலக்ஷ்மி தேவியும் விஷ்ணுவைக் பார்த்தாள், விஷ்ணுவின் தெய்வீக வடிவத்தால் ஈர்க்கப்பட்டு தன் கணவனாகத் தேர்ந்தெடுத்தாள். தன் கையால் விஷ்ணுவுக்கு மலர் மாலையை சூட்டி திருமணம் செய்து கொண்டாள்.

சமஸ்கிருத வார்த்தையான 'லக்ஷ்யா' என்பதிலிருந்து லக்ஷ்மி என்ற வார்த்தை உருவானது. அதாவது, லக்ஷ்மி தேவி செல்வம் மற்றும் செழிப்பின் தெய்வம். அழகு, கருணை மற்றும் வசீகரத்தின் தெய்வமாகவும் வணங்கப்படுகிறாள். தூய்மையான கருணைக் கொண்ட மனங்களில் தேவி வாசம் செய்கிறாள். பொறுமையின் வடிவமாக பூமா தேவியாகவும், அசுரனை வதம் செய்ய வாராஹியாகவும் இருக்கிறாள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com