மகாராஷ்டிரா அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் துணை முதலமைச்சரான அஜித் பவாருக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக-ஏக்நாத் ஷிண்டே பிரிவு சிவசேனை கூட்டணி அரசில் எதிர்க்கட்சித் தலைவரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான அஜித் பவார் இணைந்து துணை முதல்வர் பதவி பெற்றார். அவருடன் வந்த எம்எல்ஏக்களில் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். மகாராஷ்டிர அரசியிலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி இந்த நகர்வால் தேசியவாத காங்கிரஸ் கட்சியினரிடையே குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், மகாராஷ்டிரா அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் துணை முதலமைச்சரான அஜித் பவாருக்கு நிதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
என்.சி.பி எம்எல்ஏக்கள் சாகன் புஜ்பாலுக்கு உணவு மற்றும் சிவில் சப்ளை துறையும், திலீப் வால்சேவுக்கு கூட்டுறவு சங்கமும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஹசன் முஷ்ரிஃப் மருத்துவ கல்வி துறையையும், தனஞ்சய் முண்டே விவசாயத் துறையையும், அதிதி தாக்கர பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. தர்மராவ் பாபா ஆத்ரமுக்கு உணவு மற்றும் மருந்துத் துறை, அனில் பாட்டீலுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு துறை, சஞ்சய் பன்சோட்டுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாடுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக, அஜித் பவார் பிரிவு நிதி மற்றும் திட்டமிடல், உணவு மற்றும் சிவில் சப்ளைஸ், கூட்டுறவு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, விவசாயம், நிவாரணம் மற்றும் மறுவாழ்வு மற்றும் மருத்துவக் கல்வித் துறை உள்ளிட்டவற்றை பெற்றிருக்கிறது. துறைகள் பங்கீட்டின் பட்டியலை இறுதி செய்து சமர்ப்பிக்க முதல்வர் அலுவலக அதிகாரிகள் இன்று ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லமான ராஜ்பவனுக்கு சென்றனர். ஆளுநரின் ஒப்புதல் கிடைத்ததும், மேல் நடவடிக்கைக்காக தலைமைச் செயலாளருக்கு இந்த பட்டியல் அனுப்பி வைக்கப்படும்.
ஜூலை 2 ஆம் தேதி, அஜித் பவார் மற்றும் 8 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மகாராஷ்டிரா அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்த திடீர் நடவடிக்கையால் சரத் பவார் தலைமையிலான அணியில் பிளவு ஏற்பட்டது. ஆளும் சிவசேனா-பாரதிய ஜனதா கட்சி (பாஜக) கூட்டணியில் சமீபத்திய தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சேர்க்கப்பட்டது, இலாகாக்களை ஒதுக்குவதில் மோதலைத் தூண்டியது. அஜித் பவார் அணிக்கும் ஏக்நாத் ஷிண்டே கோஷ்டிக்கும் இடையிலான மோதல் அமைச்சரவை விரிவாக்கத்தை பல வாரங்கள் தாமதப்படுத்தியது.
மகாராஷ்டிரா அமைச்சரவையில் இப்போது பாஜகவைச் சேர்ந்த 9 அமைச்சர்களும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவைச் சேர்ந்த 9 அமைச்சர்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 9 அமைச்சர்களும் உள்ளனர். இதில் அதிகபட்சம் 43 உறுப்பினர்கள் வரை இருக்கலாம். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோருடனான சந்திப்புகளின் போது தனது கட்சியினருக்கு முக்கியமான இலாகாக்களுக்காக பேசிய அஜித் பவாருக்கு நிதி இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது ஒரு பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.