செய்திகள்

வெளிநாட்டுப் பள்ளியில் மாணவ, மாணவிகள் தொட்டுப்பேச தடை! எங்கே தெரியுமா?

ஜெ.ராகவன்

இங்கிலாந்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்று பள்ளி மாணவர்களிடையே ஒழுக்கத்தை உறுதி செய்ய எடுத்துள்ள நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக நம்நாட்டில் மாணவர்களும் மாணவிகளும் ஒரே வகுப்பில் படித்துவந்தாலும் அவர்கள் யாரும் தொட்டுப் பேசுவதையோ அல்லது ஒருவரை ஒருவர் கட்டித் தழுவுவதையோ அல்லது கைகுலுக்குவதையோ நாம் சாதாரணமாக பார்க்க முடியாது. மேலும் சில பள்ளிகளில் மாணவர்கள் மாணிவிகளுடன் பேசுவதற்குகூட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பெரும்பாலான வெளிநாடுகளில் அப்படியில்லை. வளர் இளம் பருவத்தினர் மாற்று பாலினத்தவருடன் இயல்பாக பழகுவதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்களை மட்டும் எடுத்துக்கூறிவிட்டு சுதந்திரமாக விட்டுவிடுவார்கள்.

ஆனால். இப்போது இங்கிலாந்தில் எஸ்ஸெக்ஸில் செம்ல்ஸ்போர்டு பகுதியில் உள்ள ஹைலாண்ட்ஸ் உயர்நிலைப்பள்ளி, மாணவர்களிடம் ஒழுக்கத்தை வளர்க்கும் முயற்சியாக மாணவ,மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பதற்கோ, ஒருவர் மற்றொருவரின் கையில் தட்டவோ, கை குலுக்கவோ தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களிடையே அனைத்து விதமான உடல் ரீதியான தொடர்புகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக பள்ளி நிர்வாகம், பெற்றோர்களுக்கு கடிதம் எழுதிய நிலையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

“மாணவர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிக்கவும், கைகுலுக்கவும் தடை விதிக்கப்படுகிறது. உங்கள் குழந்தையை பாதுகாப்பாக வைத்திருக்கவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். உங்கள் குழந்தை மற்ற மாணவர்களைத் தொட்டால், அவர்கள் சம்மதத்துடனோ அல்லது சம்மதம் இல்லாமலோ எதுவும் நடக்கலாம். சிலர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தகாத முறையிலும் நடந்து கொள்ளலாம் என்பதாலேயே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளோம்” என்று பள்ளி நிர்வாகம் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளது.

இதேபோல மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் மாணவர்கள் யாராவது செல்போன் பயன்படுத்துவது தெரியவந்தால் அதை பறிமுதல் செய்வோம். பள்ளி நேரம் முடிந்தபின்னர்தான் அதை திருப்பித்தருவோம் என்றும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே பள்ளியின் முடிவுக்கு பெற்றோர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்கின்றனர் பெற்றோர்.

மாணவர்கள், மாணவிகளை தொடுவது ஆபத்தானது என்றாலும் ஒட்டுமொத்தமாக தடைவிதிப்பது சரியாகாது என்று ஒருசில பெற்றோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

வேறு சில பெற்றோர் தொடுதலில் நல்லது எது? கெட்டது எது? என்று சொல்லித்தராமல் இப்படியொரு அதிரடியான நடவடிக்கையை எடுப்பது சரியா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் டோஃபுவின் ஆரோக்கிய நன்மைகள்!

வயநாடு: ராகுல் ஜெயிப்பது நிச்சயமா?

அக்னி நட்சத்திரமும் மகாபாரத கதையும் தெரியுமா?

அக்னி நட்சத்திரம் காலத்தை சமாளிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா?

சமையலறையை சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக மாற்ற 3 எளிய வழிகள்!

SCROLL FOR NEXT