செய்திகள்

மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர், பெண்களுக்கு சிலிண்டர் - திரிபுரா தேர்தலில் பாஜக வாக்குறுதி!

ஜெ.ராகவன்

திரிபுரா மாநிலத்தில் இம்மாதம் 16 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த தேர்தலில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியும் இடது முன்னணியும் கூட்டணி அமைத்துள்ளன. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் இடது முன்னணி 47 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

திரிபுரா மாநிலத் தேர்தலில் முதல் முறையாக திரிணமூல் காங்கிரஸ் களம் இறங்கியுள்ளது. இதற்காக அக்கட்சியைச் சேர்ந்த அபிஷேக் முகர்ஜி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இது தவிர திப்ரா மோதா என்ற அமைப்பும் புதிதாக களத்தில் குதித்துள்ளது.

தேர்தல் களத்தில் ஐந்து கட்சிகள் போட்டியில் இருந்தாலும் மும்முனை போட்டிதான் என்று சொல்ல வேண்டும்.

திரிபுரா மாநிலத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்து வருகிறது. அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளுமே தேர்தலில் வென்று ஆட்சியமைக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளன.

எதிர்க்கட்சிகளின் வியூகத்தை எப்படியாவது முறியடித்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது.

இந்த நிலையில் பாஜக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று அகர்தலாவில் வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:

பொருளாதாரத்தில் நலிந்த குடும்பங்களில் பெண் குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தையின் பெயரில் ரூ.50 ஆயிரத்துக்கு பத்திரம் வழங்கப்படும்.

கல்வியில் சிறந்து விளங்கும் கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி தரப்படும். பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் அனைத்து பயனாளிகளுக்கும் 2 இலவச எல்பிஜி சிலிண்டர் வழங்கப்படும். தகுதியுள்ள அனைத்து நிலமற்ற குடிமக்களுக்கும் நிலப்பட்டா விநியோகிக்கப்படும். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள அனைவருக்கும் 2025 -க்குள் வீடு கட்டித் தரப்படும்.

5 ரூபாய்க்கு உணவு வழங்கும் வகையில் விடுதிகள் திறக்கப்படும். கல்வியில் சிறந்து விளங்கும் 50 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும்.

ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்துக்கான ஆண்டு வரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக இரட்டிப்பாக்கப்படும். ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் 2024-ம் ஆண்டுக்குள் குடிநீர் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கவர்ச்சிகரமாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள பா.ஜ.க. மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா என்பது மார்ச் 2 ஆம் தேதி தெரிந்துவிடும்.

அடுத்த ஆண்டிலிருந்து ஸ்மார்ட் போன்கள் விலை உயரும் என ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அறிவிப்பு!

விமர்சனம்: கங்குவா - படக்குழுவின் பேட்டிகளும் இப்போது படமுமே 'மீம் மெட்டீரியல்'கள் ஆகிப் போச்சே!

காவிரியில் கடைமுழுக்காடி ஜன்மாவை கடைத்தேற்றுவோம்!

நிதானமாக இருப்பதால் கிடைக்கும் லாபம் என்ன தெரியுமா?

NISAR - இஸ்ரோ - நாசா கூட்டு முயற்சியில் பேரிடர் கண்காணிப்பு செயற்கைக்கோள்!

SCROLL FOR NEXT