தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
-இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது. அதன்படி இக்குழு ஜூன் 27-ம் தேதி தனது அறிக்கையை சமர்ப்பித்தது.
இதையடுத்து இப்பிரச்சனை பள்ளி மாணவர்கள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பற்றி பள்ளிக்கல்வித் துறை மூலம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு, பொதுமக்களிடம் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட கருத்துகள் மற்றும் கலந்தாலோசனைக் கூட்டம் மூலம் பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், சட்டத்துறையின் ஆலோசனையுடன் ஒரு வரைவு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டது.
இச்சட்டம் நேற்று (செப்டம்பர் 26) நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.
-இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.