முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுயிக்கிற்கு, தமிழக அரசு சார்பில் இங்கிலாந்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது, அதனைத் திறக்க அமைச்சர் ஐ.பெரியசாமி லண்டன் சென்றார்.
-இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாவது:
தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையைப் பல இடையூறுகளுக்கு மத்தியில் தனது சொந்தப் பணத்தை செலவு செய்து கட்டியவர் கர்னல் ஜான் பென்னிகுயிக்.
அவரது இந்த சேவையை போற்றும் விதமாக பென்னிகுயிக் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் தமிழக அரசு சார்பில் பென்னிகுயிக் சிலை நிறுவப்படும்.
-இவ்வாறு பென்னிகுயிக் பிறந்த நாளான கடந்த ஜனவரி 15-ம் நாள் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதையடுத்து அச்சிலை நிறுவ இங்கிலாந்து சட்டப்படி, செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் ஒப்புதலையும் பெற்று, கேம்பர்ளி நகரில் தமிழ்நாடு அரசின் சார்பில் கர்னல் பென்னிகுயிக் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை திறந்து வைக்க கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று லண்டன் கிளம்பி சென்றார்.
-இதுகுறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;
முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் பென்னிகுயிக் சிலையை திறப்பதற்காக முதலமைச்சரின் பிரதிநிதியாக லண்டன் செல்கிறேன்.லண்டன் மாநகர் முதல்வர் ஆணையிட்டு வருகிற 10-ம் தேதி காலை 10 மணிக்கு கேம்பர்ளியில் இந்த சிலை திறக்கப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற முதல்வர் ஸ்டாலினின் பிரதிநிதியாக நான் செல்கிறேன்
-இவ்வாறு அவர் கூறினார் .