ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்நாட்டு போராக மாறியுள்ளது. இதன் காரணமாக அங்கு வசித்து வரும் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களை மீட்கும் பணிகளில் அந்தந்த நாடுகள் மீட்பு பணிக்கான சிறப்பு விமானங்களை இயக்குகின்றன. நம் இந்தியாவும் “ஆபரேஷன் காவேரி” என்ற திட்டத்தின் மூலம் சூடானில் சிக்கி உள்ள நான்காயிரம் இந்தியர்களை மீட்கும் பணியில் இறங்கி முதல் கட்டமாக அங்கிருந்து 360 இந்தியர்களை போர் விமானம் மூலம் மீட்டனர்.
அதில் தமிழகத்தை சேர்ந்த 9 பேரும் அடங்குவர். அவர்கள் டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் அதில் அடங்குவர்.
இந்த ஆபரேசன் காவேரி திட்டத்தின் மூலம் மீட்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களான ஜோன்ஸ் திரவியம் அவருடைய மனைவி சேத்ரூத் ஷீபா, மகள்கள் ஜென்ஸி ஜோன்ஸ், ஜோஷ்னா ஜோன்ஸ் ஆகிய நான்கு பேரும் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை 9 மணி அளவில் மதுரை வந்தடைந்தனர். சூடானில் உள்ள நிலவரம் குறித்து ஜோன்ஸ் திரவியம் கூறியதாவது,
“சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்தி னருக்கும் நடைபெறும் உள்நாட்டு போரில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அங்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கின்றனர். காட்டூன் பகுதியில் இந்தியர்கள் அதிகமாக உள்ளனர். உள்நாட்டு போரினால் கடந்த 10 நாட்களாக அங்கு மின்சாரம், குடிநீர் கிடையாது. பெரும்பாலான இடங்களை துணை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டின் படி மத்திய அரசின் நடவடிக்கையால் முதல் கட்டமாக 360 பேர் மீட்கப்பட்டனர். அங்கு முக்கிய உடைமைகளைத் தவிர மற்ற பொருட்கள் எதையும் எடுத்து வர அனுமதி இல்லை. தலைநகர் காட்டூனிலிருந்து முக்கிய நகரமான ஜெட்டாவுக்கு பேருந்தில் வந்து அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி வந்தோம்.
15 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு ஆசிரியர் பணிக்கு சென்றேன். இப்போது ஒரு பள்ளியில் இயக்குனராக பணிபுரிகிறேன். எனது மூத்த மகள் ஜென்ஸி ஜோன்ஸ் மருத்துவம் மூன்றாம் ஆண்டும் இரண்டாவது மகள் ஜோஷ்னா ஜோன்ஸ் மருத்துவம் இரண்டாவது ஆண்டும் படித்து வந்தனர். இப்போது அவர்கள் கல்வி தடை பட்டுள்ளது. அங்குள்ள கல்வி முறை வேறு. இங்கு உள்ள கல்வி முறை வேறு. என் மகள்கள் படிப்பை தொடர தமிழக முதலமைச்சர் உதவி செய்ய வேண்டும். எங்களது உடைமைகளை பெரும்பாலானவற்றை எடுக்காமல் வந்து விட்டதால் என்ன செய்வது என்றே தெரியவில்லை மிகுந்த மன வருத்தத்தில் உள்ளோம். எங்கள் வாழ்க்கையே கேள்விக் குறியாகி விட்டது. என்று வருந்தி கூறினார். பின்னர் நான்கு பெரும் உறவினர்களை சந்திக்க திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டிக்கு புறப்பட்டு சென்றனர் .
கல்வி பணி நிமித்தம் வெளிநாடு செல்வோர் இது போன்ற எதிர்பாராத தடைகளினால் சம்பாதித்தவற்றை அங்கேயே விட்டு விட்டு சொந்த நாட்டுக்குத் திரும்பி வருவோர், மீண்டும் முதலில் இருந்து வாழ்வைத் துவங்குவதற்கு சமம்.