இண்டிகோ விமான சேவை இன்று நாடு முழுவதும் முடங்கிப் போனது. தொழில் நுட்பக் கோளாறு காரணமாக இண்டிகோ இணைய தளம் முடங்கியுள்ளது. இதனால், விமான நிலையங்களில் check-in செய்ய கால தாமதமாவதால் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ‘விரைவில் பாதிப்புகள் சரி செய்யப்பட்டு விமான சேவை இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்படும்’ என இண்டிகோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் இரு மாதங்களுக்கு முன்பு கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த தக்காளி விலை, தற்போது தாறுமாறாக அதிகரித்துள்ளது. மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளதால், தக்காளியின் குறைந்தபட்ச விலை 60 ரூபாய் ஆகவும், அதிகபட்ச விலை 76 ரூபாய் ஆகவும் தமிழக அரசு விலை பட்டியல் வெளியிட்டுள்ளது. இருப்பினும், மார்க்கெட்டில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகளில் தக்காளியின் விலை100 ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
‘குறைவான கட்டணத்தில் நீண்ட தூரம் பயணிக்கும் வகையில் அடுத்த 6 ஆண்டுகளில் மூவாயிரம் ரயில் சேவைகள் தொடங்கப்படும்’ என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார். நடுத்தரவர்க்கத்தினர் 400 ரூபாய்க்கும் குறைவான கட்டணத்தில் ஆயிரம் கிலோ மீட்டர் வரை பயணிப்பதை இலக்காகக் கொண்டு செயல்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள 'சார்' திரைப்படம் இம்மாதம் 18ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. முதலில் ‘மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்’ எனப் பெயரிடப்பட்ட இந்தப் படம் பின்னர் ‘சார்’ என மாற்றப்பட்டது. படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது.
‘சர்வதேச டி20 போட்டிகளை மிஸ் செய்கிறீர்களா?’ என ரோகித் ஷர்மாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "எனது சர்வதேச டி20 பயணம் முடிந்துவிட்டது. மற்ற வீரர்களுக்கு வழிவிட வேண்டிய சூழல் வந்துவிட்டது" என ரோகித் ஷர்மா பதில் அளித்துள்ளார். இவரது ரசிகர்கள், ‘Lion is always a lion’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.