அமெரிக்காவின் ஃபுளோரிடாவை நெருங்கும் மில்டன் சூறாவளியை சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் படம் பிடித்துள்ளனர். மிகவும் அபாயகரமான நிலையை எட்டியுள்ள அந்த சூறாவளி இன்று கரையை நெருங்க வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது.
தாம்பரம் - கோயம்புத்தூர் இடையே பண்டிகைக் கால சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக செல்லும் எனவும் அறிவித்துள்ளது. வரும் 13ம் தேதி முதல் டிசம்பர் 1ம் தேதி வரை, வெள்ளிக்கிழமைகிகளில் தாம்பரத்தில் இருந்தும், ஞாயிற்றுகிழமைகளில் கோயம்புத்தூரில் இருந்தும் இந்த ரயில் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை, மெரினா கடற்கரையில் புனரமைக்கப்பட்ட நீச்சல் குளத்தை திறந்து வைத்துள்ளார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். 100 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம் கொண்ட இந்த நீச்சல் குளம், காலை 5.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை இயங்கும் எனவும் காலை 8.30 முதல் 9.30 வரை பெண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நீச்சல் குளத்தில் குளிக்க பெரியவர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு 50 ரூபாயும், சிறியவர்களுக்கு 30 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த நீச்சல் குளத்தைச் சுற்றி சிசிடிவி கேமரா மற்றும் சுற்றுச்சுவர் முழுவதும் வண்ணம் பூசி, அழகான படங்கள் வரையப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
‘ஜெய் பீம்’ படத்தின் மூலம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இயக்குனர் TJ ஞானவேல் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம்தான் 'வேட்டையன்.' சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள இப்படம் நாளை10ம் தேதி பிரம்மாண்டமாக வெளிவரவுள்ளது. இப்படத்தில் பல ஆண்டுகள் கழித்து ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளார் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன்.
இந்த நிலையில், லைகா நிறுவனம் தயாரித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படத்தில் ரஜினியுடன் நடிப்பதற்காக அமிதாப் பச்சன் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிப்பதற்காக அமிதாப்பச்சன் 7 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் ஆசிய சாம்பியனான இலங்கை கிரிக்கெட் அணியை இன்று இந்தியா சந்திக்க உள்ளது. அரையிறுதிக்குத் தகுதி பெற இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது குறிப்பிடத்தக்கது.