சமூக வலைத்தளங்களில் அவதூறாக செய்தி பதிவிட்டதற்காக தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கடந்த மாதம் மதுரை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், மதுரை நீதிமன்றத்தால் நிபந்தனையோடு கூடிய ஜாமீன் வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். அதன்படி, அவர் மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.
அதன்படி எஸ்.ஜி.சூர்யா மதுரையில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்து மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்துப் போட்டு வந்தார். இந்த நிலையில் சில தினங்களாகவே அவர் கையெழுத்துப் போட காவல் நிலையத்துக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அவர் தங்கியிருந்த விடுதியிலும் அவர் காணப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், அவதூறு வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமீன் பெற்ற சூர்யா, நீதிமன்ற உத்தரவை மீறி மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கையெழுத்து போட வராததால், அவரை மதுரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். மேலும், அவர் நீதிமன்ற ஜாமீன் நிபந்தனைகளை மீறி டெல்லி சென்றிருப்பதாகவும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது, இதனால் மதுரை போலீசார் எஸ்.ஜி.சூர்யாவிடம் விசாரிக்க, அவரைத் தேடி வருகின்றனர். இந்த நிலையில் நீதிமன்ற நிபந்தனையை மீறி இருக்கும் எஸ்.ஜி.சூர்யாவின் ஜாமீன் ரத்தாகவும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட சிதம்பரம் நடராஜர் கோயில் கனக சபை விவகாரத்தில் அவதூறாக செய்தி வெளியிட்டதாக அவர் மீது புகார் வந்திருக்கும் நிலையில், போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு வழக்குத் தொடர்பாகவும் அவர் போலீசாரால் தேப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.