செய்திகள்

அமித்ஷா வருகையின்போது மின்தடை ஏற்பட்டது தற்செயல்தான் - அமைச்சர் செந்தில் பாலாஜி!

ஜெ. ராம்கி

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது, விமான நிலைய வாசலில் தொண்டர்களை சந்தித்தார். அந்நேரத்தில் மின்தடை ஏற்பட்டது சர்ச்சையானது. அது எதிர்பாராத வகையில் நடந்தது என்று மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்திருக்கிறார்.

வேலூர் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னைக்கு வந்திருந்தார். விமான நிலைய வாசலில் தன்னை வரவேற்க காத்திருந்த தொண்டர்களை பார்த்து கையசைத்த அமித்ஷா, காரை நிறுத்திவிட்டு தொண்டர்களை நோக்கி நடந்தார். அந்நேரத்தில் மின்தடை ஏற்பட்டு, அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது.

இது திட்டமிடப்பட்ட சதி என்று கோஷமெழுப்பிய பா.ஜ.க தொண்டர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் இறங்கினார்கள். பின்னர் அவர்களை சமாதானப்படுத்திய காவல்துறையினர், அங்கிருந்து அனுப்பி வைத்தார்கள். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையில் சம்பவம் குறித்து மின்வாரியத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜி விளக்கமளித்திருக்கிறார். தமிழகத்தில் எங்குமே மின்தடை என்பது இல்லை. சீராக மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அரசியலுக்காகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தமிழகத்தில் இல்லாத மின்தடை இருப்பதைப் போலவே பேசுகிறார்கள்.

சென்னை விமான நிலையத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையின் போது ஏற்பட்ட மின்தடை என்பது எதிர்பாராத வகையில் நடந்த நிகழ்வு. அதுவும் உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டது. எதில் அரசியல் செய்ய வேண்டும் என்பதை மறந்து எதை வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம் என நினைப்பவர்களின் எண்ணம் திராவிட மண்ணில் எடுபடாது என்று தெரிவித்திருக்கிறார்.

கடந்த சில நாட்களாகவே மீனம்பாக்கம், ஆதம்பாக்கம், நங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் குறிப்பாக அதிகாலை நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக உள்ளூர் வாசிகள் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக வார இறுதியில் சனிக்கிழமை மற்றும் ஞாயிறு அதிகாலை நேரத்தில் நான்கு முறை மின்வெட்டு இருந்ததாகவும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவிக்கிறார்கள்.

உள்துறை அமைச்சரின் இரண்டு நாள் சென்னை வருகையை ஒட்டி, கிண்டி, மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விமான நிலைய வாசலில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டதன் காரணம் சம்பந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த மின்வாரிய அதிகாரிகளுக்கே புரியாத புதிராக இருக்கிறது.

நேரம் எனும் நில்லாப் பயணி!

ஸ்வஸ்திக் வடிவ கிணறு பற்றி தெரியுமா உங்களுக்கு?

சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!

World Family Doctor Day: கொண்டாடப்பட வேண்டிய ஹீரோக்கள்! 

பெண்களே! உங்கள் முகத்திற்கு ஏற்ற பொட்டு எது?

SCROLL FOR NEXT