மகாராஷ்டிராவில் 75 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் மேலும் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க மகாராஷ்டிரா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களுக்கு பயணம் செய்கிறார்.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மகாராஷ்டிரா செல்லும் பிரதமர் மோடி, நாக்பூர் நகரையும் பிலாஸ்பூரையும் இணைக்கும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதுவரை நாட்டில் 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கத்தில் உள்ள நிலையில், இன்று பிரதமர் 6ஆவது வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து, நாக்பூர் மெட்ரோவின் முதல் கட்டத்தை தொடங்கி வைத்து, இரண்டாம் கட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். மிகான் பகுதியில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும், பிரதமர் மோடி சம்ருத்தி நெடுஞ்சாலை திட்டத்தின் முதல் கட்டத்தையும் தொடங்கி வைக்க உள்ளார். இந்த மருத்துவமனைக்கு பிரதமர் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் அடிக்கல் நாட்டினார்.
இதனைத் தொடர்ந்து, கோவாவில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பல்வேறு சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள மோபா சர்வதேச விமான நிலையத்தையும் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.
நாடு முழுவதும் உலகத்தரம் வாய்ப்பு உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை உருவாக்க வேண்டும் என்ற பிரதமரின் கண்ணோட்டத்தின்படி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொபா சர்வதேச விமானநிலையத்திற்கு, கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த விமான நிலையம் ரூ.2,870 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.
பின்னர் பேசிய பிரதமர், "மகாராஷ்டிராவின் நாக்பூரில் இருந்து வளர்ச்சிப் பணிகள் தொடங்கப்படும் இந்த சிறப்பான நாள் மக்களின் வாழ்க்கையை மாற்றும். மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்காக இன்று பதினொரு புதிய திட்டங்கள் உருவாகி வருகிறது, இது புதிய உயரங்களை அடையவும், புதிய திசையை வழங்கவும் உதவும்.
மகாராஷ்டிராவின் இரட்டை எஞ்சின் அரசின் வேலைகளின் வேகத்திற்கு இன்றைய திட்டங்கள் சான்றாகும். இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாட்டின் முழுமையான பார்வையை சித்தரிக்கின்றன. ஒவ்வொரு ஏழைக்கும் ரூ.5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் நமது சமூக உள்கட்டமைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு. காசி, கேதார்நாத், உஜ்ஜயினி முதல் பந்தர்பூர் வரையிலான நமது நம்பிக்கைத் தலங்களின் வளர்ச்சி நமக்கு ஒரு எடுத்துக்காட்டு.
உள்கட்டமைப்பு என்பது உயிரற்ற சாலைகள் மற்றும் மேம்பாலங்களை மட்டும் கொண்டதல்ல, அதன் விரிவாக்கம் மிகவும் பெரியது. விடுதலையின் அமிர்த காலத்தில், வளர்ந்த இந்தியா என்ற மாபெரும் உறுதியுடன் நாடு முன்னேறி வருகிறது. அதை அனைவரது கூட்டு பலத்தால் சாதிக்க முடியும்.
வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்கான மந்திரம் நாட்டின் வளர்ச்சிக்காகவே மாநிலத்தின் வளர்ச்சி என்பதாக இருக்க வேண்டும். வளர்ச்சி ஓரளவு மட்டும் இருந்தால், வாய்ப்புகளும் ஒரு அளவிலேயே இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கல்வி என்று இருந்தால், தேசத்தின் திறமை வெளிவர முடியாது. ஒரு சில நகரங்களுக்கு மட்டுமே என வளர்ச்சியும் மட்டுப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, நாட்டின் பெரும்பாலான மக்கள் வளர்ச்சியின் முழுப் பலனையும் பெறவில்லை. அல்லது இந்தியாவின் உண்மையான பலம் வெளிவரவில்லை.
கடந்த 8 ஆண்டுகளில், 'சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் மற்றும் சப்கா பிரயாஸ்' கொள்கைகளுடன் இந்த சிந்தனை மற்றும் அணுகுமுறை இரண்டும் மாறிவிட்டது. முன்பு தாழ்த்தப்பட்டவர்கள் இப்போது அரசின் முன்னுரிமை பிரிவில் உள்ளனர்.
இந்தியாவில் குறுக்குவழி அரசியல் தோன்றுவது சரியல்ல. அரசியல் கட்சிகள் அரசியல் நலனுக்காகவும், பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சி அமைக்கும் நோக்கிலும் குறுக்குவழிகளை கடைப்பிடித்தும் உழைத்து சம்பாதித்த மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து வருகின்றன. அடுத்த 25 ஆண்டுகளில் நாடு வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுக்கும் வேளையில், சில அரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபத்திற்காக இந்தியாவின் பொருளாதாரத்தை அழிக்க விரும்புகின்றன. நான்காவது தொழில் புரட்சிக்கான நேரம் வரும்போது, அதை இந்தியா தவறவிட முடியாது. எந்தவொரு நாடும் குறுக்குவழிகளுடன் இயங்க முடியாது, நீண்ட கால தொலைநோக்கு பார்வையுடன் கூடிய நிரந்தர தீர்வு நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமானது. 'குறைவாக சம்பாதிப்பது, அதிகம் செலவு செய்வது' என்ற கொள்கையில் செயல்படும் சுயநல அரசியல் கட்சிகளை அம்பலப்படுத்த வேண்டும்.
நாட்டில் நிலையான வளர்ச்சி மற்றும் நிலையான தீர்வுகளுக்கான முயற்சிகளுக்கு மக்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. குஜராத் தேர்தல் முடிவுகள் அதன் விளைவுதான் என்றும், நிரந்தர வளர்ச்சி மற்றும் நிரந்தர தீர்வுக்கான பொருளாதாரக் கொள்கை அவசியம்" என்று பேசினார்.