பள்ளி மாணவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க, நடமாடும் உளவியல் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்த, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
ஒரு அரசு பள்ளியில் மாணவிக்கு, ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்தார். அம்மாணவி தற்கொலைக்கு முயற்சித்தார். தவறு செய்யும் ஆசிரியர்களுக்கு தண்டனை கிடைத்தாலும், குற்றங்கள் அதிகரிக்கின்றன. பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மட்டுமன்றி, அதே பள்ளியில் படிக்கும் இதர குழந்தைகளுக்கும் அச்ச உணர்வு ஏற்படுகிறது.
படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. பள்ளி மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் பிரச்னைகளை களைய உளவியல் ஆலோசகர், உதவியாளர்களுடன் கூடிய நடமாடும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்த வேண்டும்.
மாணவர்களுக்கு விழிப்புணர்வு, ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என, 2012ல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இத்திட்டம் பெயரளவில் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது.
மாணவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க நடமாடும் உளவியல் ஆலோசனை மையங்கள் முறையாக செயல்படுவதை உறுதி செய்யக்கோரி, தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.மகா தேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு, 'தமிழக பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், இயக்குனர் மனுவை பரிசீலித்து நடமாடும் உளவியல் மையங்கள் ஏற்படுத்தி செயல்படுவதை உறுதி செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.