இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சென்னைக்கு வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அ.தி.மு.கவின் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேச இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாளை இரவு சென்னைக்கு வரும் அமித்ஷா கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்குகிறார். மறுநாள் காலை ஹோட்டலில் சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைந்து பத்தாவது ஆண்டை தொடங்கியுள்ள நிலையில், மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் பல்வேறு கூட்டங்கள் தமிழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் தொடக்கவிழாவில் அமித்ஷா கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக நாளை இரவு சென்னைக்கு வரும் அமித்ஷா, நாளை மறுநாள் மாலை வரை சென்னையில் இருக்கிறார். பின்னர் வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து கிளம்பிப் போய்விட்டு அன்றிரவே டெல்லி செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமித்ஷாவின் இரண்டு நாள் பயணத்தின்போது அவரை சென்னையில் சந்திக்க அ.தி.மு.க தரப்பிலிருந்து நேரம் கேட்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகளை முன்கூட்டியே இறுதி செய்வது உள்ளிட்ட விஷயங்கள் சந்திப்பின்போது பேசப்பட இருக்கின்றன.
இந்நிலையில் மாஜி அ.தி.மு.கவினரான ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன், சசிகலா தரப்பிலிருந்தும் உள்துறை அமைச்சரை சந்திக்க முயற்சியெடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. சமீபத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் நெருங்கிய ஆதரவாளரான ஒரத்தநாடு வைத்திலிங்கத்தின் இல்லத் திருவிழாவை முன்னிட்டு மூவரும் சந்தித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடைசி நேரத்தில் சசிகலா தரப்பு ஆர்வம் காட்டாத நிலையில் தினகரனும் ஓ.பன்னீர்செல்வம் மட்டுமே சந்திக்க முடிந்தது.
திருமண விழாவின் மூவரையும் இணைத்து ஓரணியில் நிறுத்தினால் எடப்பாடிக்கு எதிரான அ.தி.மு.கவின் அதிருப்தியாளர்கள் ஓரணியில் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது சாத்தியமில்லை. இந்நிலையில் சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் மூவரும் இணைந்து பேசுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா என்கிற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. மூவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே பா.ஜ.கவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளமுடியும் என்கிற நிலையில் இதுவொரு முக்கியமான திருப்புமுனையாக அமையலாம்.
நாளை மறுநாள் பா.ஜ.க நிர்வாகிகளை அமித்ஷா சந்தித்து பேச இருக்கிறார். பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மஹாலில் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் எத்தனையோ இடங்கள் இருக்கும்போது பள்ளிக்கரணையில் பா.ஜ.க கூட்டம் நடத்துவது ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னையில் போட்டியிடுவதற்கு பா.ஜ.க தன்னுடைய தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டதோ என்கிற கேள்வியும் எழுகிறது. நாளை மறுநாள் தெரிந்துவிடும்!