ஒரே பாலின திருமணத்திற்கு தாய்லாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து இந்த சட்டம் அடுத்த ஆண்டு ஜனவரியிலிருந்து அமலுக்கு வரவுள்ளது.
கடந்த ஜூன் மாதம் தன் பாலின திருமணத்திற்கு தாய்லாந்தின் செனட் சபை ஒப்புத்தல் அளித்தது. இதனைத்தொடர்ந்து அந்த மசோதா மன்னர் மகா வஜிரலங்கோனின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அவரும் ஒப்புதல் அளித்துவிட்டால் தாய்லாந்தில் அந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று சொல்லப்பட்ட நிலையில், தற்போது சட்டரீதியாக தன்பாலின திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரிக்கும் முதல் தென்கிழக்காசிய நாடு என்ற பெருமையைத் தாய்லாந்து பெற்றுள்ளது.
ஒரே பாலினத் திருமணத்தை ஏற்கும் மூன்றாவது ஆசிய நாடு தாய்லாந்து. தைவானும் நேப்பாளமும் ஏற்கெனவே அத்தகைய திருமணங்களை அங்கீகரித்து வருகின்றன.
தாய்லாந்தில் ஜூன் மாதம் செனட் சபை அளித்த ஒப்புதலுக்கு பிறகு அக்டோபர் மாதம் சட்டம் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வரும் என்று தாய்லாந்து மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், நேற்றுதான் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆகையால், வரும் ஜனவரி மாதத்திலிருந்து அமலுக்கு வரும் என்பது உறுதியானது.
இந்த புதிய சட்டமூலம் செவ்வாய்க்கிழமை (24) பிற்பகுதியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. புதிய சட்டம் 2025 ஜனவரி 22ம் தேதி நடைமுறைக்கு வரும்.
இந்தியாவைப் பொறுத்தவரை இந்தியாவில் தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில், ஐந்து பேர் கொண்ட அமர்வில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. தன்பாலின திருமணம் செய்பவர்களுக்கு எந்த பிரச்னைகள் வராமலும் அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாகவும், அமைச்சரவைத் தலைமையில் ஒரு குழு அமைத்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என நாடாளுமன்றத்திற்கு வலியுறுத்தப்பட்டது.
இந்தத் தீர்ப்பை பொறுத்தவரை, தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் இல்லை என்றுதான் சொல்லப்பட்டதே தவிர, ஓரினச்சேர்க்கையில் ஈடுபடக்கூடாது என்றோ அல்லது திருமணம் செய்யக்கூடாது என்றோ கூறப்படவில்லை.
ஆனால், சில நாடுகளில் தன் பாலின திருமணங்கள் செய்துக்கொண்டாலோ அல்லது தொடர்பில் இருந்தாலோ கொடூரமான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன.
அப்படிப்பட்ட நாடுகளுக்கு மத்தியில் தாய்லாந்து மக்களின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து தன் பாலின திருமணத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது உலக நாடுகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.