ஆந்திராவிற்கு மூன்று தலைநகரங்கள் அமைப்பது தொடர்பாக அம்மாநில அமைச்சரும் முன்னாள் நடிகையுமான ரோஜா உள்ளிட்ட மாநில அமைச்சர்கள் கலந்து கொண்ட பேரணி நேற்று மாலையில் முடிந்த நிலையில், ரோஜா ஊர்திரும்ப விமான நிலையம் வந்தார்.
அதேசமயத்தில் ஜனசேனா கட்சித் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் விசாகபட்டினம் வரவிருந்த நிலையில், பவன் கல்யானை வரவேற்பதற்காக அவரது கட்சியினர், மற்றும் ரசிகர்கள் கூட்டம் கூடினர். அவர்களை பாதுகாப்பு கருதி போலீசார் விமான நிலையத்தின் உள்ளே அனுமதிக்கவில்லை.
இதனால் அங்கு அமளீ ஏற்பட்டது. அச்சமயம் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த ரோஜா உள்ளிட்ட அமைச்சர்களின் கார்கள் மீது ஜனசேனா கட்சியினர் சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டி அடித்தனர்.
இந்நிலையில் ரோஜா மற்றும் பிற அமைச்சர்களின் மீதான தாக்குதல் தொடர்பாக ஜனசேனா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை இன்று காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.