செய்திகள்

"ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை" திட்டம் பற்றிய தமிழக அரசின் புதிய உத்தரவு.

கிரி கணபதி

னி "ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை" திட்டத்தின் கீழ் பொருட்களை வழங்க, எந்த ரேஷன் கடை ஊழியரும் மறுக்கக்கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

2020 ஆம் ஆண்டில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்தபோது, நோய்த் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது எல்லா தரப்பினரும் தங்களுடைய அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே சிரமப்பட்டனர். பலரும் பட்டினியால் வாடினார்கள். வட மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் பலரும், இலவச ரேஷன் பொருட்கள் கூட பெற முடியாமல் அவதிக்குள்ளானார்கள். இத்தகைய மக்களின் துயரங்களை தடுப்பதற்காகவே "ஒரே நாடு ஒரே ரேஷன்" திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. 

நாட்டு மக்களின் முக்கிய ஆவணங்களில் ரேஷன் கார்டும் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த புதிய திட்டத்தின் மூலமாக இந்தியாவில் வசிக்கும் எந்த மாநிலத்தவரும் எங்கு வேண்டுமானாலும் தங்களுக்கான ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதனால் சொந்த மாநிலத்தை விட்டு வேற்று மாநிலத்தில் வசிப்பவர்கள், தங்கள் வசிக்கும் பகுதியிலேயே அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கலாம்.

தற்போது இந்த திட்டம் நாடு முழுவதும் செயல் படுத்தப்பட்டு வருவதால், அனைத்து ரேஷன் கடை களிலும் இணையம் வாயிலாக செயல்படும் 'எலக்ட்ரானிக் பாய்ண்ட் ஆப் சேல்' சாதனங்கள் கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது. இந்த புதிய முடிவால் இனி ரேஷன் கடைகளில் எவ்விதமான குளறுபடியும் நடக்க வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது. எனவே எல்லா மக்களுக்கும் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ரேஷன் பொருட்கள் முறையாகக் கிடைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருந்தாலும் தமிழகத்தில் "ஒரே நாடு ஒரே ரேஷன்" திட்டத்தினால் மக்களுக்கு முறையாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்ற புகார்கள் எழுந்து வந்தன. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழாக அரசு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இதன் மூலம் "ஒரே நாடு ஒரே ரேஷன்" திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து ரேஷன் பொருட்களும் முறையாக வழங்கப்பட வேண்டும் எனவும், இதை மீரும் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த சுற்றறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

"ஒரே நாடு ஒரே ரேஷன்" திட்டத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? இதனால் யாருக்கு சாதகம் யாருக்கு பாதகம் என்பதை கீழே உள்ள கமெண்ட் பகுதியில் தெரிவிக்கலாம். 

நேரம் எனும் நில்லாப் பயணி!

ஸ்வஸ்திக் வடிவ கிணறு பற்றி தெரியுமா உங்களுக்கு?

சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!

World Family Doctor Day: கொண்டாடப்பட வேண்டிய ஹீரோக்கள்! 

பெண்களே! உங்கள் முகத்திற்கு ஏற்ற பொட்டு எது?

SCROLL FOR NEXT