இன்று செப்டம்பர், 27 உலக சுற்றுலா தினமாகும். அதையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சுற்றுலா கொள்கை – 2023ஐ சென்னை தலைமை செயலகத்தில் வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சுற்றுலா துறை வேலை வாய்ப்புகளை அளித்தல், அன்னியச் செலாவணியினை ஈட்டுதல் ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றுகிறது. இந்தியாவில் சிறப்பான சுற்றுலாத் தலங்கள் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழகம் முக்கிய இடத்தில் உள்ளது. தமிழகத்தில் பல்வகையான சுற்றுலா தலங்கள், பிரம்மாண்டமான திருக்கோயில்கள், இயற்கை எழில் கொஞ்சும் மலை மற்றும் வனப்பகுதிகள், அழகிய கடற்கரைகள் போன்ற பல்வேறு சுற்றுலா தலங்கள் பலதரப்பட்ட சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் அமைந்துள்ளன.
இத்தகைய பெரும் வாய்ப்புகள் அடங்கிய சுற்றுலாத்துறையை மேம்படுத்திட தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தின் குறிப்பிடத்தக்க இயக்கியாக சுற்றுலாத்துறை திகழ்கிறது. திறமையான தொழில் வல்லுநர்கள், உள்ளூர் கைவினைஞர்கள், வழிகாட்டிகள், சிறிய அளவிலான தொழில்முனைவோர் என பரந்த அளவிலான திறன்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திறனை சுற்றுலாத்துறை கொண்டுள்ளது.
வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை தருவதற்கு ஏற்ற இடமாக தமிழகத்தை உயர்த்துவதையும், சுற்றுலாப் பயணிகளின் தங்கும் காலத்தை அதிகரிப்பதையும், அன்னிய செலாவணியை ஈர்க்கும் வகையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலான வசதிகளை, கட்டமைப்புகளை அதிகப்படுத்தும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. வலுவான அடித்தளத்தையும், மாறிவரும் காலங்கள் மற்றும் தேவைகளுக்கேற்ப முன்னேறும் அணுகுமுறையையும் உறுதி செய்யும் வகையில் ஆராய்ச்சி மற்றும் விரிவான ஆய்வின் அடிப்படையில் இக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா கொள்கை, சுற்றுலாத்துறை சார்ந்த நிபுணர்கள், சுற்றுலாத் தொழிலில் பல்வேறு தளங்களில் செயல்பட்டு வரும் பங்குதாரர்கள் மற்றும் சுற்றுலா வல்லுநர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முன்னுரிமை சுற்றுலா பிரிவுகள், தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதற்கு தகுதியான சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் அனைத்துத் தகுதியான சுற்றுலா திட்டங்களுக்கும் ஒற்றைச் சாளர அனுமதியுடன் கூடிய நெறிப்படுத்தப்பட்ட ஒப்புதல் செயல்முறை மேற்கொள்ளப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் க.மணிவாசன், சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.