முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகச் செயலாளர் டி.டி.வி.தினகரனை சமீபத்தில் சந்தித்தது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, ‘‘ஓபிஎஸ், டிடிவி தினகரனை சந்தித்தது சந்தர்ப்பவாத சந்திப்பு. இதனால் எந்த தாக்கமும் யாருக்கும் ஏற்படாது. அதிமுக விவகாரத்தில் பத்து முறை நீதிமன்றத்தில் முறையிட்டும் அவர்களுக்கு தோல்வியே கிடைத்திருக்கிறது. தேர்தல் ஆணையமும் தீவிர ஆய்வு செய்து, ஆதாரத்தின் அடிப்படையிலேயே அதிமுக தலைமையை முடிவு செய்து இருக்கிறது. பொதுச்செயலாளர் பொறுப்பில் எடப்பாடி பழனிச்சாமியை தொண்டர்கள்தான் வைத்துள்ளனர். இதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்து இருக்கிறது.
அரசியல் நாகரிகத்துடன் பேச எங்களுக்கு முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள். அந்த அரசியல் நாகரிகம் அவர்களுக்கு இருந்தால், மக்கள் முகம் சுளிப்பது போலப் பேச மாட்டார்கள். ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்தாலும் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. அதிமுக என்பது ஒன்றாம் நம்பர். அந்த ஒன்று இருக்கும்போது, பூஜ்ஜியத்துக்கெல்லாம் மதிப்பு கிடையாது. பூஜ்ஜியமும், பூஜ்ஜியமும் இணைந்து ராஜ்ஜியம் அமைத்த வரலாறு கிடையாது” என்று ஆர்.பி.உதயகுமார் ரைமிங்காகப் பேசி உள்ளார்.