Donald Trump 
செய்திகள்

மீண்டும் அதிபரான டிரம்ப் வலிமையான மூவர் கூட்டணியை சமாளிப்பாரா?

ராஜமருதவேல்

காலங்கள் மாறும்போது சூழல்களும் மாறும். ஒரு காலத்தில் காட்டை ஆண்ட சிங்கம் முதிர்ந்து போனால் மற்ற விலங்குகளுக்கு இரையாகும். 2016-இல் டிரம்ப் பதவியேற்ற போது உள்ள சூழல்கள் இன்று இல்லை. அன்று சரிந்த அமெரிக்க செல்வாக்கை அவர் தூக்கி நிறுத்தினார். இப்போதும் அவரால் செல்வாக்கை தூக்கி நிறுத்த முடியுமா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.

2016-இல் அரபு நாடுகளுக்கு அமெரிக்கா பணம் காய்க்கும் மரம். ஐரோப்பிய நாடுகளுக்கு தங்களது பாதுகாவலன். கானானிய நாடுகளுக்கு ஒரு அசுரன். அப்போது இந்தியாவும், ரஷ்யாவும் பொருளாதார நிலையில் பின்தங்கி இருந்தது. சீனா அசுர வேகத்தில் அமெரிக்காவின் வளர்ச்சியை நெருங்கிக் கொண்டிருந்தது.

அமெரிக்க அதிபர் வழக்கமாக 3 யுக்திகளை செய்வார். "முதல் யுக்தி போர், இரண்டாவது மற்ற போர் செய்யும் நாடுகளுக்குள் சமாதானம், மூன்றாவது மற்ற நாடுகளுக்கு நிதியுதவி செய்து கைக்குள் போடுவது". இதில் முதல் யுக்தியான போரை ரஷ்ய அதிபர் புடின் எடுத்துக் கொண்டார். மொத்தமாக ஐரோப்பிய நாடுகள் எதிராக திரண்டும் அவரை வீழ்த்த முடியவில்லை.

சமாதானம் செய்யும் யுக்தியை இந்தியாவின் மோடி எடுத்துக் கொண்டார். ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - அரபு போரில் சமாதான முயற்சியை மேற்கொண்டு சர்வதேச செல்வாக்கை பெற்றுவிட்டார். சிறிய நாடுகளுக்கு உதவி செய்து கைக்குள் வைத்துக் கொள்கிறார். உலக வர்த்தகம் எப்போதும் அமெரிக்க டாலரில் நடைபெறும். ஆனால் இந்தியா எதிர்ப்பையும் மீறி, ஈரானுடன் டாலர் இல்லாமல் வர்த்தகம் செய்கிறது. சமீபமாக ரஷ்யாவுடன் ரூபாயில் வர்த்தகம் செய்கிறது. இது அமெரிக்காவிற்கு வீழ்ச்சியை ஏற்படுத்தும்.

சீனா தன் பொருளாதார வன்மையால் அமெரிக்காவின் இடத்தை பல தளங்களில் பிடித்துவிட்டது. ஜிங்பிங் பல நாடுகளுக்கு உதவி செய்து அவர்களின் எல்லைக்குள் தனது படைத்தளத்தை உருவாக்கும் அமெரிக்காவின் யுக்தியை பின்பற்றுகிறார். உலகளவில் உற்பத்தி, ஏற்றுமதி வர்த்தகத்தில் சீனா முதலிடம் வகிக்கிறது.

தற்போது செல்வாக்கில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளும் முயற்சியை புடின் மேற்கொள்கிறார். உலகின் 2 பெரிய வல்லரசு நாடுகளை தன் பக்கம் திருப்பி, அமெரிக்க - ஐரோப்பிய கூட்டணியை விட வலிமையானதாக மாற்றியுள்ளார். தற்போது பிரிக்ஸ் நாடுகள் இணைந்து புதிய பணத்தை உருவாக்கும் முயற்சியில் உள்ளனர். அது இறுதி வடிவம் பெற்றால் டாலர் பல நாடுகளில் மதிப்பில்லாமல் போகலாம்.

இந்திய - ரஷ்யா - சீனா மூன்று நாடுகளின் ஒன்றிணைந்த வர்த்தகம் அமெரிக்காவை விட பெரியது. அமெரிக்காவின் வாங்கும் திறனை விட அதிகமாக கச்சா எண்ணெயை சீனா வாங்குகிறது. இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதில் அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் உள்ளது. ரஷ்யா கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்வதில் இரண்டாவது நாடாக உள்ளது, இதற்கு காரணம் இந்தியாவும் சீனாவும் அங்கு கொள்முதல் செய்வது தான்.

இப்போது 2024 சீனா வளர்ச்சியின் உச்சிக்கு சென்றுள்ளது. பல நாடுகளுக்கு கடன் கொடுத்து சீனா அவர்களை கைக்குள் வைத்துள்ளது. இந்தியா பொருளாதாரத்தில் 4 இடத்திலிருந்து 3 இடத்தை நோக்கி நகர்கிறது. ரஷ்யா தற்போது உலகின் பெரிய அண்ணனாக மாறி உள்ளது. இஸ்ரேலோ எதிர்ப்பு சிறிது கூட இல்லாமல் 4 நாடுகளை ஒரே நேரத்தில் பந்தாடுகிறது. இஸ்ரேல் போன்ற வலிமையான போரை அமெரிக்கா கூட நடத்தியது இல்லை.

சமீபத்திய மூன்று ஆசிய வல்லரசுகளின் பெரும் வளர்ச்சி அமெரிக்காவை மட்டுப்படுத்தியுள்ளது. ரஷ்ய உறவில் பெருலாபம் பெறும் இந்தியா, அமெரிக்க அதிபருக்கு பழைய முக்கியத்துவம் கொடுக்க இயலாது. அதே வேளையில் ரஷ்யாவும் சீனாவும் தனக்கு எதிரி நாடுகள் என்பதால் ஆசியாவில் இந்தியாவின் ஆதரவு அமெரிக்காவுக்கு கட்டாயம் தேவை. அமெரிக்கா பக்கம் நெருங்காமல் இருக்க புடினும் இந்தியாவிற்கு இன்னும் மலிவாக எண்ணெயும் ஆயுதமும் தரலாம். லடாக் எல்லையில் இறங்கி வந்த சீனா மேலும் இறங்கி வரலாம். இதனால் இந்தியக் காட்டில் அடைமழை பெய்யலாம்.

இயற்கையிடம் சுறுசுறுப்பை கற்றுக் கொள்ளுங்கள்!

தலைக்கு ஷாம்பு பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க!

வாழ்க்கை என்பது கொடுக்கல் வாங்கல் மட்டுமல்ல…

புடவைக் கட்டும் பொழுது பெண்கள் செய்யக்கூடாத 9 தவறுகள்!

நிமிர்ந்த நடைக்கு ஆதாரமான முதுகெலும்பை பராமரிக்க 10 எளிய வழிகள்!

SCROLL FOR NEXT