மக்களின் இணையப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனைகளும், இணையம் வழியாக நடக்கும் வங்கி பரிவர்த்தனைகளும் அதிகரித்துள்ளது. வீட்டில் இருந்தபடியே ஒருவர் இணையம் வழியாக உலகம் முழுவதிலும் எங்கு வேண்டுமானாலும் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்ற நிலைக்கு நாம் தற்போது வந்துள்ளோம்.
இதனால் அதிகப்படியான வங்கி பரிவர்த்தனைகள் நடப்பதால், அதில் உள்ள பாதுகாப்பிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இணையத்தில் பணத்தை அனுப்பும்போது அதில் பலவிதமான ஆபத்துகளும் இருப்பதை நாம் மறுக்க முடியாது. தொழில்நுட்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நமது வங்கியில் இருக்கும் பணத்திற்கான பாதுகாப்பும் அதிகம் தேவைப்படுகிறது. ஏனெனில் இணையம் வழியாக ஒரே சொடுக்கில் நமது கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் ஒருவரால் திருட முடியும். நமது தலையீடு இல்லாமலேயே பணம் அனைத்தும் மறைந்துபோக வாய்ப்புள்ளது.
வீடு புகுந்து கொள்ளையடித்ததெல்லாம் அந்த காலம். ஆனால் தற்போது நமக்கே தெரியாமல் நமது பணத்தை திருடுவது இந்த காலம். குறிப்பாக இந்தியாவில் OTP மோசடிகள் அதிகரித்து வருகிறது. இதற்காக அரசாங்கம் பல நடவடிக்கைகள் எடுத்தாலும், போதிய விழிப்புணர்வு இல்லாத மக்கள் இத்தகைய மோசடிகளில் சிக்கி விடுகின்றனர். கொள்ளையர்கள் லாவகமாக வங்கி கணக்கு வைத்திருப்பவர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி, அவர்களிடமிருந்து ஓடிபி எண்ணைப் பெற்று, கண்ணிமைக்கும் நேரத்தில் பணத்தை திருடிக் கொண்டு பறந்து விடுகின்றனர்.
இதில் பெரும்பாலானவர்களுக்கு தன் பழத்தை இழந்த பிறகு தான் ஏமாற்றப்பட்ட விஷயமே தெரிகிறது. அதன் பின்னர் காவல் நிலையம் சென்று புகார் அளித்து அவர்களை இணையக் கடலில் தேடிக் கண்டுபிடிப்பது கடினமான ஒன்றாகதான் இருந்து வருகிறது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற மோசடிவாலையில் சிக்கிக் கொள்ளாமல் கவனமாய் இருங்கள்.
உங்களது வங்கிக் கணக்கை அப்டேட் செய்ய வேண்டும், ஆதார் கணக்கை அப்டேட் செய்ய வேண்டும் என யார் உங்களை தொடர்பு கொண்டாலும், அதைத் தவிர்த்துவிடுவது நல்லது. இணையத்தை பயன்படுத்துவோர் பாதுகாப்புடனும் விழிப்புடனும் செயல்படுவது அவசியமாகும். நீங்கள் என்ன ஏதென்றே தெரியாமல் கிளிக் செய்யும் லிங்க், உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் மாயமாக்கிவிடலாம்.
எனவே முடிந்தவரை பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருங்கள்.