இன்று தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியால் பல நிதி சேவை செயலிகள் உருவெடுத்துள்ளது. உதாரணத்திற்கு போன் பே, கூகுள் பே, பேடிஎம் போன்றவை இந்தியாவில் பிரபலமாக இருக்கும் நிதி சேவை தளங்கள். இவர்களுக்குப் போட்டியாக எக்ஸ் தளத்திலும் தற்போது நிதி சேவைகள் அறிமுகம் செய்ய எலான் மஸ்க் திட்டமிட்டு வருகிறார்.
இவர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்தே, மக்கள் பயன்படுத்தும் எல்லா விதமான சேவைகளும் X தளத்திலேயே கிடைக்க வேண்டும் என்பது தன்னுடைய விருப்பம் என்பதை தெரிவித்திருந்தார் எலான் மஸ்க். இவர் முதன்முதலாக PayPal நிதி சேவை நிறுவனத்தை தொடங்கும்போத, அதில் எல்லா சேவைகளையும் வழங்க விருப்பமுள்ளதாக கூறினார். ஆனால் அந்த நிறுவனத்தை பிறருக்கு விற்ற பிறகு அவரால் அதை செயல்படுத்த முடியவில்லை. தற்போது இந்த யோசனை அவருக்கு ட்விட்டர் X தளத்தின் மீது திரும்பியுள்ளது.
எனவே சமீபத்தில் எக்ஸ் தளத்தில் எல்லாவிதமான நிதி சேவையும் வழங்கும் திட்டம் சார்ந்த தகவல்களை தன்னுடைய ஊழியர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் எலான் மஸ்க். நிதி சேவை என்றதுமே வெறும் பணப்பரிமாற்றம் மட்டும் என நினைக்க வேண்டாம். நிதி தொடர்பாக இணையத்தில் என்னென்ன வசதிகள் இருக்கிறதோ அனைத்துமே எக்ஸ் தளத்தில் கொண்டுவர விரும்புகிறார் இவர். அதாவது தன்னுடைய சேவையைப் பயன்படுத்தும் நபர்களுக்கு வங்கிக் கணக்கு இருந்தால்தான் இதையெல்லாம் செய்ய முடியும் என்ற அவசியம் இருக்கக்கூடாது என்பதே இவரது புதிய யோசனை.
எனவே அமெரிக்காவில் இத்தகைய நிதி சேவையை தொடங்குவதற்கான உரிமத்தை வாங்குவதற்கு தீவிர ஆர்வம் காட்டி வருகிறார் எலான் மஸ்க். இதற்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும் ஒரு சிலர் எதிர்ப்பும் தெரிவிக்கிறார்கள். "ஒரு நபரின் எல்லா வகையான நிதி தகவல்களையும் ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதா?" என்று கேள்வி எழுப்புகின்றனர். மேலும் ஐரோப்பா அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள சட்டங்கள் எலான் மஸ்கின் இந்த மாற்றுத் திட்டத்திற்கு முட்டுக்கட்டையாக உள்ளதாகவும் கூறுகின்றனர்.
எந்த ஒரு துறையில் போட்டியின்றி ஒரு தனி நிறுவனம் எல்லா தகவல்களையும் நிர்வகிக்கிறதோ, அதை ஐரோப்பிய, அமெரிக்க அரசுகள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது. இதனால் அங்கிருக்கும் கடுமையான சட்டங்களை எதிர்த்து இவரால் இந்த புதிய திட்டத்தை செயல்படுத்த முடியாது என்கின்றனர் வல்லுனர்கள். இருப்பினும் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் இத்திட்டத்தை செயல்படுத்திக் காட்டும் முனைப்புடன் எலான் மஸ்க் செயல்பட்டு வருகிறார்.