ஸ்கேம் கால்களைத் தவிர்க்கும் விதமாக, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI, புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
இன்றைய நவீன காலத்தில் செல்போன் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இதை அழைப்புகள் மேற்கொள்வதற்கு மட்டுமின்றி, இணையப் பயன்பாடு, வர்த்தகம், பணப்பரிவர்த்தனை போன்ற பல விஷயங்களுக்குப் பயன்படுத்துகிறோம். ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தின் தீவிர வளர்ச்சியால் இவை அனைத்துமே சாத்தியமாக்கியுள்ள நிலையில், ஸ்மார்ட் ஃபோன்களால் மக்களுக்கு தொல்லைகளும் ஏற்படுகிறது.
இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அவ்வப்போது நமது எண்ணுக்கு வரும் தேவையில்லாத அழைப்புகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய அழைப்புகளில் பெரும்பாலானவை மோசடி கும்பல்களால் செய்யப்படுகிறது. மேலும் ஏதேனும் முக்கிய வேலையில் நாம் இருக்கும்போது இப்படிப்பட்ட ஸ்பேம் அழைப்புகள் நமக்கு எரிச்சலூட்டும். இவை அனைத்தையும் தவிர்த்து, பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, TRAI உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதாவது இனி செல்போனுக்கு வரும் அழைப்புகளில், யார் அழைக்கிறார்கள் என்பவரின் பெயரை காட்டும் வசதியை எல்லா பயனர்களுக்கும் ஏற்படுத்தும் படி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI உத்தரவிட்டுள்ளது. ஒருவேளை ஏதாவது எண் ஒரு நிறுவனம் தொடர்புடையதாக இருந்தால், அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்தின் ஜிஎஸ்டி பதிவு செய்யப்பட்ட நபரின் பெயரைக் காட்டும்படி, அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் இந்த புதிய சேவை விரைவில் நடைமுறைக்கு வர உள்ளதால், இனி உங்களது செல்போனுக்கு வரும் தேவையில்லாத அழைப்புகளை எளிதாகத் தவிர்க்கலாம். இதற்கு முன்னர் ஒருவருக்கு புதிய எண்களில் இருந்து அழைப்பு வந்தால், அது யாருடையது என்பதை கண்டறிய, ட்ரூ காலர் என்ற செயலி பிரத்யேகமாக பலரால் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த அம்சம் அனைவருக்கும் இலவசமாகவே கிடைக்கப் போகிறது என்பதால், ட்ரூகாலர் செயலியின் பயன்பாடு முற்றிலும் குறைந்துவிடும் எனச் சொல்லப்படுகிறது.
இருப்பினும் பயனர்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, வரவேற்கும் விதமாக இருப்பதாகவே பலர் கூறுகின்றனர்.