புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ஆம் நாளன்று 'உலகப் புகைப்பட நாள்' (World Photograph Day) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், லூயிசு டாகுவேரே என்பவர், 'டாகுரியோடைப்' எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். 1839 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ் இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆகஸ்ட் 19 ஆம் நாளில் பிரான்ஸ் நாட்டு அரசு 'டாகுரியோடைப்' செயல்பாடுகளை 'ப்ரீ டூ தி வேர்ல்டு' என உலகம் முழுவதும் அறிவித்தது. அதனை எடுத்துரைக்கும் வகையில், ஆகஸ்ட் 19 ஆம் நாள் உலக புகைப்பட நாளாகக் கொண்டாடப்படுகிறது.
புகைப்படம் என்பது ஒரு கலை. அதற்கு மிகப்பெரிய வலிமை உள்ளது. உலக வரலாற்றை மாற்றும் சக்தி புகைப்படத்திற்கு உண்டு. புகைப்படம் ஒவ்வொருவரின் வாழ்க்கையோடும் ஒன்றி இணைந்திருக்கிறது. புகைப்படமானது வரலாற்று நிகழ்வுகள், குடும்ப நிகழ்வுகள், பொதுக்கூட்டம், தலைவர்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள் என அனைத்தையும் நம் கண் முன் கொண்டு வந்து காட்டுகிறது. ஒரு தலைமுறையின் சாதனைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டும் ஒரு வழிகாட்டியாக புகைப்படம் விளங்குகிறது.
தூரிகையைக் கொண்டு ஒரு படத்தை வரைவதற்குப் பதிலாக, மிகத் துல்லியமாக ஒரே நிமிடத்திற்குள் புகைப்படம் எடுத்து, பல நகல்களையும் எடுத்து விடலாம். ஒரு புகைப்படத்திற்குள் பல கதைகள் இருக்கின்றன. பல தகவல்கள் புதைந்து கிடக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
சில நூறு பக்கங்கள் எழுதி விளக்க வேண்டியதை ஒரு புகைப்படம் எளிமையாக விளக்கிவிடும். அறிவியல் வளர்ச்சிக்குப் புகைப்படம் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.
புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறைந்துவிடும் என்கிற தவறான நம்பிக்கை மக்களிடம் இருந்தது. ஆனால் அந்த மூட நம்பிக்கை தற்போது போய்விட்டது.
முன்பெல்லாம் புகைப்படமெடுக்க, ஒளிப்படக்கருவி தேவையாக இருந்தது. தற்போது அலைபேசியிலேயே புகைப்படமெடுக்கும் வசதிகள் இடம் பெற்றிருக்கின்றன. அதனைப் பயன்படுத்திப் பலரும் தங்களையும், தங்களுக்குப் பிடித்த காட்சிகளையும் அவ்வப்போது புகைப்படமெடுத்து தாங்கள் பார்த்து மகிழ்வதுடன், தன்னுடைய உறவினர்கள் நண்பர்கள் என பலருக்கும் பகிர்ந்து மகிழ்கின்றனர்.
உலகின் முதல் புகைப்படம் என்று எடுத்துக் கொண்டால், 1826 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் நைஸ்போர் நீப்ஸ் என்பவர் எடுத்த முதல் நிலையான நவீன புகைப்படம் குறிப்பிடப்படுகிறது. இந்தப் புகைப்படம் நாளடைவில் அழிந்தது. அதன் பின்பு, 1839ஆம் ஆண்டு லூயிஸ் டாகுரே பாரிசில் உள்ள போல்வர்டு கோயிலை, அருகில் உள்ள தெருவைப் புகைப்படமாக எடுத்தார். தனிநபர் எடுத்த முதல் புகைப்படம் இது. இப்படமே முதல் புகைப்படமாக இருந்து வருகிறது.
20 ஆம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உலக வரலாற்றையே மாற்றி இருக்கின்றன. உதாரணமாக, சீன வீரர்களின் ராணுவப் பீரங்கியை எதிர்த்து நின்ற டேங்க் மேன், வியட்நாம் போரை நிறுத்தக் காரணமாக இருந்த சிறுமியின் புகைப்படம், 1994 ஆம் ஆண்டு, சூடானில் நிலவிய உணவுப் பஞ்சத்தை எடுத்துரைத்த குழந்தையின் புகைப்படம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.