ஸ்பெஷல்

விடுதலை கோரி நளினி மனு: தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்! 

கல்கி

தமிழக ஆளுனரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தங்களை விடுதலை செய்யக் கோரி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி மற்றும் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுக்களை இன்று தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பேரறிவால்னை சமீபத்தில் உச்சநீதிமன்றம் தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்தது.

இந்நிலையில், தமிழக ஆளுனரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தங்களையும் விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிசந்திரன் ஆகியோர் சார்பில் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி தலைமையிலான முதல் அமர்வில் விசாரிக்கப்பட்டது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவிக்கும் வருவதாகவும் தமிழக அரசு தங்களை விடுதலை செய்வதற்கான மசோதாவை சட்டமனறத்தில் நிறைவேற்றி அனுப்பினாலும், அதன் மீது தமிழக ஆளுனர் முடிவெடுக்காமல் காலதாமதம் செய்வதாக தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இதையடுத்து, ஆளுனர் ஒப்புதலுக்குக் காத்திராமல் தங்களை விடுவிக்கும்படி அந்த மனுவில் குறிப்பிட்டனர்.

இந்நிலையில் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோரது மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர் தலைமை நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு.

-இதுகுறித்து நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:

நளினியை விடுதலை செய்ய கோரி ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எனவே இந்த மனு நிலைக்கத் தக்கதல்ல. மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டம் 142-ன்கீழ் உச்ச நீதிமன்றத்திற்கு உள்ள சிறப்பு அதிகாரம் போல, இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது. 

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து நளினி மற்றும் ரவிச்சந்திரன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT