பாரதி பாஸ்கர் 
ஸ்பெஷல்

புத்தகம் படிக்கையில் மனதின் சில வாசல்கள் திறக்கும்; பாரதி பாஸ்கர்.

நேர்காணல்

கோமதி

-கோமதி, லண்டன்.

இன்றைய மேடைப் பேச்சில்  தனக்கென முத்திரை பதித்து, தன்னுடைய தெளிவான சிந்தனையாலும், ஆணித்தரமான அதே நேரம் நிதானமான பேச்சாலும்  அனைவரையும் தன்பால் ஈர்த்தவர் பாரதி பாஸ்கர். இவர் சுதா சேஷயன், இளம்பிறை மணிமாறன், சரஸ்வதி ராமநாதன், மற்றும் சாரதா நம்பி ஆரூரன் என்ற பெண் மேடைப் பேச்சாளர்கள் வரிசையில் இன்று உலகமே கொண்டாடும் திருமதி.பாரதி பாஸ்கரை கல்கி  சார்பாக நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.

லண்டனில் நடைபெற்ற ‘கல்யாணமாலை’ பட்டிமன்ற நிகழ்ச்சிக்காக வந்திருந்த அவரை, ஒரு  மாலை  நேரத்தில் சந்திக்க நேர்ந்த பொழுது அலைச்சலால் ஏற்பட்ட உடல் சோர்வு, விண்பயண களைப்பு, விறைக்கும் குளிர் என எதையும் பொருட்படுத்தாது "வாங்கப்பா" என அன்போடு அவருக்கே உரித்தான சிரிப்போடும், கம்பீர காந்தக்குரலோடும் நம்மை வரவேற்றார்.

‘’கேள்விகளை ஒரு முறை பார்த்துவிடுகிறீர்களா?’’ எனக் கேட்டதற்கு "அதெல்லாம் பார்த்துக்கலாம்பா, ஃப்ரீயா விடுங்கள்" எனக் கூறியது அவரது ஆளுமையை தெள்ளென விளக்கியது. பாரதியார் இன்று இருந்திருந்தால் புதுமைப்  பெண்ணின் இலக்கணமாக பாரதி பாஸ்கர் எனச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்திருப்பாரோ எனப் பல முறை நான் எண்ணியதுண்டு. ஒரு ரசிகையாக அவரை சந்தித்தபொழுது தெளிந்த நீரோடை போன்ற அவரது பேச்சு சிந்தையைத் தூண்டும் விதமாக அமைந்தது என்றால் அது முற்றிலும் உண்மை.

திருவள்ளுவர் முதல் பாரதிதாசன்,ஜெயகாந்தன் வரை ஒவ்வொரு படைப்பாளியும் தங்களின் காலத்திற்கேற்ப பெண் சுதந்திரத்தை நோக்கிய விதம், அவர்களின் பங்களிப்பும் தான் இன்றைய பெண்களின் முன்னேற்றத்திற்குக் காரணம் என்ற அவரின் முன்னுரையோடு பாரதி பாஸ்கரின் சந்திப்பில் துளிர்த்த சிந்தனை துளிகள் உங்கள் பார்வைக்கு ..

கம்பன் கழகங்களில் கலந்து கொண்டது மேடைப்பேச்சிற்கு அடித்தளமாக அமைந்தது எனப் பல மேடைகளில் கூறியுள்ளீர்கள். அதற்கு முன்பே பள்ளி, கல்லூரிகளில் உங்களின் திறமையை அடையாளம் கண்டவர்கள் உண்டா ?

என்னுடைய பள்ளி ஆசிரியர் பற்றி நான் அடிக்கடி குறிப்பிடுவேன். அவர்கள் தான் என்னை முதலில் அடையாளம் கண்டு மிகச் சிறிய வயதிலேயே இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்பு படிக்கும் பொழுதே, பள்ளி நாடகம் ஒன்றில் நான் சிறுவனாக நடிக்க வேண்டும் என்று விரும்பினார். நான் படித்தது பெண்கள் பள்ளியில் என்பதால்,  சிறுவனாக நடிப்பதற்கு அந்த ஆசிரியர் என்னைத் தேர்வு செய்தார். மற்ற ஆசிரியர்கள் அனைவரும் ‘’ஐந்து அல்லது ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியை நடிக்க வைக்கலாமே, இவள் சிறுமியாக இருக்கிறாள்’’ எனக் கூறினார்கள்.அப்போது என்னைத் தேர்ந்தெடுத்த ஆசிரியர், இவள் தான் செய்வாள் என்றும், இவளால் தான் பேச முடியும் என்றும் கூறினார். பள்ளி நாடகங்களில் நான் வசனங்களைச் சொல்லுகின்ற போது என்னுடைய குரல் அல்லது மெய்ப்பாடு அவர்களால் அறியப்பட்டது. எனவே என்னுடைய பள்ளி ஆசிரியர்களால் தான் நான் அடையாளம் காணப்பட்டேன். தொடர்ந்து என்னைப் பேச்சு போட்டிகளுக்கு அழைத்துச் செல்வது, பேச வைத்தது என அனைத்தும் அவர்கள் தான் செய்தார்கள்.அதற்குப் பிறகு கல்லூரிகளில் நடக்கும் பேச்சு போட்டிகளில் பங்கேற்ற பொழுது அதற்கு வந்த நடுவர்கள், குறிப்பாகத் திரு. அவ்வை நடராஜன் அய்யா அவர்கள். (இன்றைக்கு அவர் காலமாகி விட்டார் என்ற செய்தி வந்தது). அவர் ஒரு போட்டிக்கு நடுவராக இருந்த பொழுது, அதில் நான் இரண்டாம் பரிசு வாங்கினேன். அதை வழங்கிய அவர் "ராஜா நல்ல பேசறடா நீ" எனக் கூறியிருக்கிறார். அதைப் போன்று நடுவர்களாக வந்த மிகப்பெரிய பேச்சாளர்கள் என்னை அடையாளம் கண்டுகொண்டார்கள் என நினைக்கிறேன். அப்படித் தான் அது ஆரம்பித்தது.அதற்குப் பிறகு அதில் தீவிரமாக ஈடுபட்ட பின் தான் எனக்கே என்னைப் பற்றி நான் ஒரு பேச்சாளர் என்ற எண்ணம் என்னுள் எழுந்தது.

உங்கள் "வெற்றியின் ரகசியம்" அல்லது சக்ஸஸ் ஃபார்முலா ...?

முதலில் வெற்றி என்பதற்கான விளக்கம் யாரிடமும் தெளிவாக இல்லை.என்னை பொறுத்த வரை நம்முடைய மனம் மிகவும் ஈடுபடுகின்ற துறையில் தொடர்ந்து இருந்து கொண்டிருப்பதே வெற்றி தான். அப்படி இருக்கும் பொழுது சில நாட்கள் நன்றாக இருக்கும், சில நாட்கள் சாதகமாக அமையாது.அதை வைத்து வெற்றி தோல்வி என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. பத்து பேர் நன்றாக இருக்கும் என்பார்கள், இரண்டு பேர் திட்டுவார்கள். அதெல்லாம் நடக்கத் தான் நடக்கும். ஆனால் எதில் மனம் முழுமையாக ஈடுபடுகின்ற துறையோ, எதில் இது தான் என்னுடைய அறம், தன்னறம் - ஸ்வதர்மம் என உணர்கிறோமோ அதில் தொடர்ந்து இருப்பதே வெற்றி தான் என நான் நினைக்கிறேன். அதைச் செய்கிற பொழுது அதில் கிடைக்கிற மகிழ்ச்சி, உதாரணமாக, பேச வேண்டும் என்றால் அந்த தயாரிப்பில் ஈடுபடும்பொழுது ஏற்படுகின்ற மகிழ்ச்சி - இதெல்லாம் தான் வெற்றி என நான் நினைக்கிறேன். அதற்கான ஃபார்முலா என்னவென்றால் - என்ன வருகிறது, என்ன கிடைக்கும்  என்கிற யோசனையை விடுத்து, நாம் செய்கின்ற செயலில் நம்முடைய எண்ணம் இருக்க வேண்டும். இதுவே வெற்றிக்கான வழி என்பது என் எண்ணம்.

தங்களின் பார்வையில் பெண் சுதந்திரம் என்பது?

பெண் சுதந்திரம் என்பது மானுட சுதந்திரத்தின் ஒரு பகுதி தான். எந்த இடத்திலும் மற்றவர்களோடு சரிநிகர் சமானமாக இல்லாமல் ஏதோ ஒரு குழுவினரோ, பிரிவினரோ - ஒடுக்கப்பட்டால் அல்லது அவமானப்படுத்தப்பட்டால் அவர்களுக்கு வாழ்வதற்கும், சம உரிமை பெறுவதற்கும் என்ன உரிமை இருக்கிறதோ அதுவே மானுட சுதந்திரம். பெண் சுதந்திரம் என்பது அதில் ஒரு அங்கமே! பெண்களுக்கு அது கிடைக்காத வரை அதற்காகக் குரல் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அதைப் பற்றிப் பேச வேண்டும். அதை சமூகத்தின் பார்வைக்கு யாராவது கொண்டு வர வேண்டும். அதைத் தான் நான் செய்து கொண்டிருக்கிறேன் என நினைக்கிறேன்.

இன்றைய சமூக சூழலில் பெண் சுதந்திரம் முழுமை அடைந்து விட்டது என நீங்கள் நினைக்கிறீர்களா?

இல்லை, இல்லவே இல்லை. பழைய நிலைமையோடு நீங்கள் ஒப்பிட்டு பார்க்கிற பொழுது அது நிறைய மாறி இருக்கிறது என்பது மகிழ்ச்சியான விஷயம். ஆனால் பெண்ணை ஒரு உடலாகத்தான் பார்க்கிற பார்வை என்பது சமூகத்திடம் இருந்து முழுவதுமாக மாறிவிட்டது என்று நான் நினைக்க வில்லை. நமது இந்தியாவில் மட்டும் நான் கூறவில்லை, உலகெங்கிலும் அவ்வாறு தான் இருக்கிறது. மிக மிகத் தீவிரமான பாலியல் வன்முறைகள் கடந்த ஒரு இருபது இருபத்தைந்து வருடங்களில் இந்தியாவில் அதிகமாக வெளியில் தெரிய வருகிறது. முன்பும் நடந்து கொண்டு தான் இருந்திருக்கிறது. ஆனால் இப்பொழுது நாம் கேள்விப்படுவது மிக அதிகமாக உள்ளது. அதுவே ஒரு அடையாளம் தான். நினைத்த அளவு சமமாகப் பார்க்கப்படவில்லை. "ஒரு பொம்பளை நீ, இப்படி பேசலாமா நீ" என்ற பேச்சுகளை இப்பொழுதும் நாங்கள் கேட்டுக்கொண்டு தான் இருக்கின்றோம். எனவே, எழுதப்பட வேண்டிய அளவு அது எழுதப்படவில்லை. நாம் போவதற்கான தூரம் இன்னும் நிறைய இருக்கிறது. உலகத்தில் இருக்கும் பல நிறுவனங்களில் நீங்கள் பார்த்தீர்களேயானால் பெண் தலைவர்கள் இருப்பது என்பது பத்து சதவீதம் கூட இல்லை. சீனாவில் மிக அதிகமாக உள்ளது. சீனாவை விடுத்தது நீங்கள் பார்த்தால் பத்து சதவீதம் கூட கிடையாது. அரசியலிலும் அதே மாதிரி தான். போகவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்று தான் நான் நினைக்கிறேன்.

தங்களின் தமிழ் ஆர்வத்திற்கு காரணம் தங்களது பெற்றோர் - அதிலும் குறிப்பாக அம்மா என்றும்,  தங்களுடைய முதல் பேச்சை அவர்கள் எழுதிக் கொடுத்ததாகவும் பதிவு செய்துள்ளீர்கள். இன்றைக்கு பாரதி மேடம் இருக்கும் உயரத்தை, அங்கீகாரத்தை அவர்கள் காணவில்லை என்ற ஏக்கம் இருக்கிறதா?

தினமும் தோன்றும். அனால் ஓரளவு அவர்கள் பார்த்தார்கள். பார்க்கவே இல்லை என்று கூற முடியாது. அப்பாவும் அதில் மிகவும் ஈடுபாடு காட்டுவார். ஒவ்வொரு நிகழிச்சியையும் அப்பா வந்து காண்பார். தூர்தர்ஷனில் மகளிர் பஞ்சாயத்து என்று ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். அது அன்றைய நீயா நானா என்றே கூறலாம். அதை தூர்தர்ஷனில் ஒரு வாரத்தில் மூன்று நாட்கள்  ஒளிபரப்புவார்கள். சில சமயம் இரவு நேரங்களில் முன்னறிவிப்பு இன்றி ஒளிபரப்பாகும் . மூன்று முறை என்பது அதைத் தயாரித்தவர்கள் கூட பார்க்க மாட்டார்கள்,ஆனால் என் தந்தை பார்ப்பார். ஒவ்வொரு முறையும் அதை பார்ப்பார், ஒவ்வொரு முறையும் அந்த நிகழ்ச்சி முடியும் அந்த வினாடியில் என்னை தொலைபேசியில் அழைத்து நிகழ்ச்சியை பார்த்ததாகக் கூறுவார். அதெல்லாம் இப்பொழுது இல்லையே என்று நினைக்கும் பொழுது கஷ்டமாக உள்ளது.

ஒவ்வொரு தடைவையும் பேசி முடித்த பிறகு அந்த தொலைபேசி என்னிலிருந்து அழைப்பு வரவில்லை என்பது வருத்தமாக தான் உள்ளது. அனால் அவர் என்னை நினைத்து மிகவும் பெருமை பட்டார். அம்மா வெளியில் வார்த்தைகள் மூலம் வெளிப்படையாகக் கூற மாட்டார்கள். ஆனால் அவர் மனதிலும் நிச்சயம் அந்த பெருமிதம் இருந்திருக்கும். அம்மா உடல் நிலை நன்றாக இருந்த பொழுது ராஜ் டிவி ஒரு நிகழ்ச்சி நடத்தினார்கள். பிரபலங்களின் தாயாரை கவுரவிக்கும்  நிகழ்ச்சி அது. அதில் என்னைத் தேர்ந்தெடுத்து, என்னுடைய அம்மாவையும் அதில் பங்கேற்க அழைத்துச் சென்றார்கள். மேடையில் என் அம்மாவை ஏற்றி ஒலிபெருக்கி முன் பேச வைத்தார்கள். அதில் கவுரவிக்கப்பட்ட அனைவருமே வேறு வேறு துறைகளைச் சார்ந்த பெண்களுடைய அம்மாக்கள் தான். பெண்கள் என்பவர்கள் ஒரு சமூகத்தை முன்னெடுப்பு செய்வது என்பது அந்த சமூகத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றி என்  அம்மா முப்பது வினாடிகள் பேசினார்கள். அப்பொழுது தான் நான் உணர்ந்தேன் - எனக்குள் இருக்கும் பேச்சாளர் எங்கிருந்து கிளம்பி இருக்கிறார் என்று! மற்றபடி அம்மா பேசுவது என்பது மிகவும் குறைவு. எனவே அவர்கள் இல்லை என்பது பேச்சரங்கில் நான் பெறுகிற வெற்றிக்காக இல்லை, என்னுடைய வாழ்க்கையை அவர்கள் முழுமையாக பார்க்கவில்லை என்கிற வருத்தம் இருக்கத்தான் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் தொடர்கிற வருத்தம் தானே அது.

இந்த லண்டன் பயணம், கல்யாண மாலை நிகழ்ச்சி மற்றும் லண்டன் அனுபவம் பற்றி?

கல்யாணமாலை பட்டிமன்ற நிகழ்ச்சி ஆக்ஸ்போர்ட் மற்றும் மான்செஸ்டெர் என இரு இடங்களில் அரங்கேறியது. ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்து கொண்டார்கள். அவர்கள் காண்பிக்கும் அன்பு என்பது மிகவும் மகத்தானது. நாங்கள் நன்றாக பேசுகிறோமோ இல்லையோ அவர்கள் கொண்டாடித் தீர்க்கிறார்கள். நிகழ்ச்சியை மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். லண்டன் ஒவ்வொரு முறை வரும் பொழுதும் இந்த மழை, குளிர் பழகுவதற்கு சில காலம் ஆகும். அதற்குள் நாங்கள் திரும்பி சென்று விடுவோம். இங்கு பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கின்றன, ஆனால் அதற்கான நேரம் அமையவே இல்லை. எனக்கு, குறிப்பாக லண்டனில் இருந்த எழுத்தாளர்கள் - எவ்வளவு பிரம்மாண்டமான படைப்பாளிகள் - அவர்கள் வாழ்ந்த இடங்களை எல்லாம் போய்ப் பார்க்க வேண்டும். பைரன் , கீட்ஸ் , ஷேக்ஸ்பியர், மில்டன் முதல் ஜே.கே.ரௌலிங் வரை அவர்களுடைய கையெழுத்துப் பிரதி இருந்தால் அதைக் காண வேண்டும் என்று ஆசை. அந்த ஆசை இன்னும் நிறைவேறவில்லை. வழக்கமாக பயணிகள் பார்க்கும் அனைத்து இடங்களும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால், முன்பே கூறிய படி அந்த ஆசை நிறைவேறினால் தான் ஒரு முழுமையான லண்டன் அனுபவமாக அமையும் என நினைக்கிறேன். இது மட்டும் எனக்கு அது கிடைக்கவில்லை.

உங்கள் யூடியூபில் ஜெஃப்ரி ஆர்ச்சர், டான் பிரவுன் என்று பலரது படைப்புகளையும் பற்றி பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். பிற மொழி இலக்கியங்களில் ஆர்வம் எவ்வாறு உருவானது?

இலக்கிய ஆர்வம் தான் இதன் அடிப்படை. அதன் பின் என்னென்ன மொழிகள் தெரியுமோ அதில் அந்த ஆர்வம் சென்று விடும். எனக்குப் பல மொழிகள் தெரியவில்லை என்ற வருத்தம் உண்டு.சில கவிதைகள், அந்த மொழியில் தான் படிக்க வேண்டும். அது எழுதப்பட்ட மொழியில் தான் அதை எழுதிய கவிஞனின் இதய துடிப்பை நம்மால் கேட்க முடியும். மொழிபெயர்ப்பு எவ்வளவு நன்றாக இருந்தாலும் அந்த மொழியில் படிக்கும் அனுபவம் அதற்கு ஈடு இணையே கிடையாது.  எனக்கு நன்றாகத் தெரிந்தது இரண்டு மொழிகள் தான். எனக்கு ஆங்கில கவிதைகளில் மிகுந்த ஈடுபாடு உண்டு, கீட்ஸ் மிகவும் பிடிக்கும். தமிழில் எல்லோரையும் போன்று சுஜாதாவால் பெரிய அளவில் ஈர்க்கப்பட்டு , பாலகுமாரனை மிக அளவில் படித்து - இப்பொழுதும் நீங்கள் அவர்களின் எந்த கதையைக் கேட்டாலும் என்னால் அப்படியே சொல்ல முடியும். அப்படி நான் படித்துக்கொண்டே இருந்தேன், வேறு எந்த வேலையும் செய்தது இல்லை. அதன் பின் கல்கி, அகிலன், நா. பார்த்தசாரதி இவர்களைப் படித்து, ஜெயகாந்தன் என்னும் பெரிய உலகத்தில் நுழைந்து, ஜானகிராமன், அசோகமித்திரன், ஆதவன் இவர்களைப் படிக்க ஆரம்பித்து, ஜெயமோகனில் வந்து நின்று கொண்டிருக்கிறேன். ஆங்கிலத்தில் நான் பல்வேறு எழுத்தாளர்களை படித்தேன் என்று சொல்ல முடியாது. காலேஜ் நாட்களில் நாம் அனைவரை போன்று ஷெட்னி ஷெல்டன், ஜெஃப்ரி ஆர்ச்சர் என ஏழு எட்டு எழுத்தாளர்களுக்கு மேல் படித்தது இல்லை. இன்னும் நிறைய படிக்க வேண்டும். வாய்ப்பும் நேரமும் கிடைக்கும் பொழுது விரிவு செய்ய வேண்டும்.

இவ்வளவு படைப்புகளை படித்த நீங்கள், இலக்கிய ஆர்வலர்களுக்கு படிக்க வேண்டிய மூன்று தமிழ் இலக்கியம் நூல் என்றால் நீங்கள் பரிந்துரைப்பது ?

இந்த கேள்விக்கு பதில் சொல்வது மிகவும் கடினம். நிறைய பேர் என்னிடம், "என்னால் படிக்கவே முடியவில்லை, புத்தகத்தை எடுத்தாலே தூக்கம் வந்து விடுகிறது" என்று கூறுவார்கள். அதற்குக் காரணம் பழக்கம் இல்லை. வாசிப்பு என்பது ஒரு பழக்கம் தான். திடீரென்று இந்த லண்டன் குளிரில் ஓடுதல் சாத்தியமா? எல்லோரும் இங்கு செய்கிறார்கள். என்னால் முடியாது. ஏனென்றால் பழக்கம் இல்லை. வாசிப்பும் ஒரு பழக்கம் தான். நீங்கள் எவ்வளவு சீக்கிரம் ஆரம்பிக்கிறீர்களோ அவ்வளவு நிறைய படிக்க இயலும். வீட்டில் பெற்றோர் படிப்பதைப் பார்த்தால்தான் குழந்தைகள் படிப்பார்கள். தாய் தந்தையர் தொலைக்காட்சி பார்த்தால் குழந்தைகள் புத்தகத்தை திறந்து படிக்க மாட்டார்கள். எனவே அதை ஒரு வழக்கமாக வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது எதைப் படிக்க வேண்டும் என்றால் எதை வேண்டுமானாலும் படிக்கலாம். உங்கள் மனதில் எதன் மீது இயல்பாக ஆர்வம் இருக்கிறதோ அதில் இருந்து ஆரம்பிக்கலாம்.

பொன்னியின் செல்வன் படம் வெளிவந்த சமயம், பல பேர் திடீரென்று அந்தப் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தனர். ஆனால் அதை அவ்வாறு படிக்க இயலாது, அவ்வாறு ஆரம்பிக்க முடியாது.  ஏற்கனவே படிக்கிற அனுபவம் இருக்கிறவர்களுக்கு, அவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும் என நான் நினைக்கும் மூன்று புத்தகங்கள் - புனைக் கதைகள் வரிசையில் - ஜெயகாந்தனின் ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம். மனதுக்குள் இருக்கும் சில வாயில்கள் திறந்து கொள்ளுகின்ற அனுபவத்தை இந்தப் புத்தகம் நமக்குக் கொடுக்கும். அந்தத் தளத்தில், அந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட மிக மிக வித்தியாசமான புத்தகம். இரண்டாவது தி. ஜானகிராமனின் மோகமுள். இயலும் இசையும் சேர்ந்து இரு தண்டவாளங்களில் ஓடுகின்ற ரயில் போன்று ஒரு புத்தகம். மூன்றாவதாக எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு நூல் - ஜெயமோகனின் வெண்முரசு.இருபத்தையாயிரம் பக்கங்கள் கொண்ட உலகின் மிகப்பெரிய புனைவு நூல் என்று கூறுகிறார்கள். மொத்தமாக படிப்பது என்பது கஷ்டம், ஆனால் பகுதிகளைத் தேர்ந்து எடுத்து படிக்கலாம். அதில் அவர் மிக முழுமையான தமிழ் சொற்கள் மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார். எந்த வடமொழி கலப்பும், பிற மொழிச் சொற்களின் பயன்பாடும் அதில் இல்லை.

உங்கள் பேச்சில், நீங்கள் ஒரு மேடையில் ஒரு முறை கூறியதை மறுமுறை கூறுவது இல்லை. இதற்கான மெனக்கெடல்கள் உண்டா?

உண்மையில் எங்கள் பட்டிமன்றத் துறையில் ரெபெட்டிஷன் இல்லாமல் பேசுபவர் ராஜா சார் ஒருவர் தான். அவரிடம் கண்டிப்பாக அது இருக்காது. அவைக்கு ஏற்றார் போன்று இதைச் சொன்னால் நன்றாக இருக்கும் என்று நான் மறுமுறை சில சமயம் கூறுவது உண்டு. ஆனால் ராஜா சார் பேச்சில் எப்போதும் அவர் மறுமுறை ஒரு கருத்தை, நகைச்சுவையை கூற மாட்டார். ஏனென்றால் அந்த நேரத்தில் தான் அது வரும். ஆனால் இப்பொழுது யாராலும்  மறுமுறை கூறுவது என்பது இயலாது. யூடியூப் வந்து அதற்கான வாய்ப்புகளை முழுமையாக நீக்கிவிட்டது. மெனக்கெடல்கள் என்றால் - பேசுவதற்கான விஷயங்கள் நிறைய இருக்கின்றன தானே? எதற்காகப் பேசியதையே நாம் பேச வேண்டும்? நிறைய  செய்திகள் இருக்கின்றன .

அந்த அரங்கத்திற்கு ஏற்ற செய்திகளை அந்த சமயத்தில் தான் யோசிக்க முடியும். முன்பே தயாரித்து வருவது என்ற வழக்கம் பெரும்பாலும் எனக்குக் கிடையாது. இலக்கிய தலைப்பு என்றால் நான் தயாரித்து வருவேன். மற்றபடி சமூக தலைப்புகளுக்கோ, அறிவியல் மற்றும் பட்டிமன்ற தலைப்புகளுக்கு பெரிய அளவில் தயாரிப்பு என்கிற பழக்கம் கிடையாது. அந்த அவை தான் நான் என்ன பேச வேண்டும் என்பதை  முடிவு செய்யும், நான் செய்து கொள்ளுகிற தயாரிப்பு என்னவென்றால்- சில விஷயங்கள் அப்படி பிடித்திருக்கும், அதைப் பற்றிய குறிப்பு எடுத்துக் கொள்வேன், இதை எங்காவது ஒரு இடத்தில சொல்ல வேண்டும் என்பதை என் நினைவில் நான் கொள்வதே நான் எடுக்கும் முயற்சி.  அது நான் பேசுகிற பொழுது சரியாக வந்து விழுந்துவிடும்.

பார்வையாளர்கள் தான் என்ன பேசவேண்டும் என்பதை தீர்மானிக்கிறார்கள் என்றால் எவ்வாறு அவர்களை உங்கள் பேச்சால் கட்டுண்டு வைக்கிறீர்கள்?

பேச்சு என்கிற அந்த செயல்முறையே பேச்சாளர் மாத்திரம் நிகழ்த்துவது அல்ல. பேச்சாளர்களும் கேட்பாளர்களும் சேர்ந்து நிகழ்த்துவது தான் ஒரு பேச்சு. அவர்களின் உள்ளீடு இல்லாமல் இங்கிருந்து எதுவுமே வராது. அப்போ ஏதோ ஒரு கட்டத்தில் பேசுகிறவர், கேட்கிறவர் என்று இரு பகுதிகளாக இல்லாமல் ஐக்கியமாகி விடுவார்கள். அது தான் அந்த பேச்சினுடைய உச்சம். அந்த உச்சக்கட்டம் என்பது எல்லா மேடைகளிலும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. சில இடங்களில் அது அமையும் சில இடங்களில் அது அமையாது. ஆனால் எங்களுடைய அனுபவத்தினாலும், எங்களுக்கு முன்னாள் இருந்த ஆசிரியர்களின் வழிகாட்டுதலாலும் - எங்களுடைய நடுவர் அதில் மிகவும் குறிப்பாக இருப்பார். அவரைப் பொறுத்த வரையில் கலை என்பது மக்களுக்காகத்தான். கலை கலைக்காக என்ற தத்துவத்தில் அவருக்கு நம்பிக்கை இல்லை. ‘’அவனுக்கு போய் சேரவில்லை என்றால் பேசி என்னப்பா பயன்?”’ என்று தான் அவர் கேட்பார்.

எனவே ஒரு இடத்திற்குச் செல்கிறோம் என்றால் அங்கிருக்கும் பார்வையாளர்கள் யார், அவர்களின் பின்புலன் என்ன, என்ன எதிர்பார்க்கிறார்கள், எதற்காக வருகிறார்கள் என்கிற தீர்ப்பு நமக்கு கிடைத்துவிடும். முதல் ஐந்து நிமிடம் லேசான விஷயம் , மற்றும் அவர்களின் வாழ்க்கையோடு ஒட்டிய விஷயம் பேசிய பிறகே நாங்கள் சொல்ல வந்த கருத்தை கூற இயலும். தலைப்பையும் மீறி நாங்கள் என்ன பேச வேண்டும் என்பதை பார்வையாளர்கள் தான் தீர்மானிக்கிறார்கள். அவர்களை பார்த்து வருகிற தீர்ப்பை வைத்தே நாங்கள் பேச வேண்டும். அப்போது தான் அந்த பேச்சு வெற்றி பெரும். பேச்சு என்பது ஒருவர் நிகழ்த்துவது அல்ல. அது ஒரு நிகழ்த்துகலை மாதிரி தான். பார்வையாளர்களோடு சேர்ந்து தான் அது அமையும்.

பெண்களைப் பற்றி பேசும் பொழுது work life balance என்று சொல்லும் வேலை வாழ்க்கை இரண்டையும் சமநிலையில் எடுத்து செலுத்துதல் என்பது சவாலாகவே அமைந்திருக்கிறது. நீங்கள் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றிய பொழுது எவ்வாறு கையாண்டீர்கள்? அதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்வீர்களா?

பல சமயங்களில் சமநிலை (balance) என்கிற வார்த்தையே இதற்கு சரியான வார்த்தையாக இருக்காது. நம்மால் அதனை சமநிலைமையோடு எடுத்துச் செல்ல இயலாது. ஒரு நாள் அலுவலகத்தில் அதிக வேலை இருந்தால், அன்று நாம் வீட்டில் செலவழிக்கும் நேரம் குறைவு தான். அங்கு எங்கு சமநிலை இருக்கிறது? ஒரு நாள் வீட்டில் முக்கியமான வேலை வருகிறது என்றால் அலுவலகம் செல்ல இயலாது. எனவே நீங்கள் சமமாக எடுத்து செல்ல இயலாது. நீங்கள் இங்கும் அங்குமாக ஆங்கிலத்தில் கூறுவது போன்று "you can only juggle" - பந்துகளை போட்டு போட்டு எந்த ஒரு பந்தும் கீழே விழாத படி கையாள்வது தான் இதற்கான வழி. இது எனக்கு மிகவும் கடினமான பயணமாகத் தான் இருந்தது. சுலபமானது அல்ல. இரண்டு விதமாக நான் இதைப் பார்த்தேன். ஒன்று, சில விஷயங்களை நாம் தியாகம் செய்து தான் ஆக வேண்டும். கட்டாயமாக, நண்பர்களோடு வெளியில் செல்வது, நேரம் செலவிடுவது, சினிமாவிற்கு செல்வது, கடைகளுக்கு செல்வது, வெளியில் சென்று விருந்து சாப்பிடுவது, எல்லா குடும்ப நிகழ்வுகளிலும் மிக அதிகமாக கலந்து கொள்வது இது எதுவும் கிடையாது.

ஆங்கிலத்தில் கூறுவது போல் சோஷியலைசிங் என்பது இல்லை. தியாகம் செய்து தான் ஆக வேண்டும். இவை எல்லாம் வேண்டும் என்றால் நான் செய்வதைச்  செய்ய இயலாது. அப்போ இது அனைத்தும் செய்கிறவர்கள் நேரத்தை வீணாக்குகிறார்களா என்றால் இல்லை, அப்படி நான் சொல்லவில்லை. நமக்கு எது வேண்டும் என்பதை  நாம் தான் தீர்மானம் செய்ய வேண்டும். அது ஒன்று. இரண்டாவது, இது ஒரு கடினமான பணி. இதற்கு நாம் தயாராகத்தான் இருக்க வேண்டும். இரண்டு துறைகளில் இருந்து கொண்டு, குடும்பத்தையும் கவனிப்பது என்பது சவாலான விஷயம் தான். எனவே சிறிதும் யோசிக்காமல் என்ன வேண்டும் என்பதை யோசித்து அதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். சிலதெல்லாம் செய்ய முடியாது என்றால் முடியாது, அவ்வளவு தான். இதைச்  செய்ய வேண்டும் என்றால் செய்தே ஆக வேண்டும்.

எனக்கு எது வேண்டும் என்ற தெளிவு என்னுள் இருந்தது. அதுதான் எனக்கு மிகவும் உதவியது. மூன்றாவது நீங்கள் கூறியது போன்று organized ஆக, அதற்கான முன்னேற்பாடுகள், முன்கூட்டியே யோசித்து செய்திருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் தேடக் கூடாது என்பது என் கொள்கை. அந்தத் தேடலில் பத்து நிமிடம் வீணாகி விடும். என்னுடைய அலமாரியில் இரண்டாவது அறையில் வலது புறத்திலிருந்து நான்காவது புத்தகம் "சினிமாவிற்கு போன சித்தாள்" என்ற ஜெயகாந்தனின் புத்தகம் இருக்கிறது என்கிற  அளவிற்கு எனக்குத் தெரியும்.அது அவ்வாறு இருந்தால் மட்டுமே நான் சீராக செயல்பட முடியும். அதையும் தாண்டி இரு துறைகளில் இருந்ததற்கு காரணம் ஒரு துறையிலிருந்து இன்னொரு துறைக்கு பெற்றுக்கொண்டேன். ஒரு துறையில் சில சமயம் மனச்சோர்வுகள், தோல்விகள்,வருத்தங்கள் ஏற்படும் பொழுது இன்னொரு துறை அதை ஈடு செய்து விடும். அது உதவியாக தான் இருந்தது.

உடல்நிலை தேறி வந்த பிறகு வாழ்க்கையை நீங்கள் வேறு கோணத்தில் பார்க்க ஆரம்பித்திருக்கிறீர்களா? குறிப்பாக ஆன்மீக ஈடுபாடு என்பது பல மேடைகளில் புலப்படுகிறதே?

ஆன்மிகம் என்பது எப்போதுமே என்னுள் இருந்திருக்கிறது, உடல் நிலை தேறியதால் கடவுளை நோக்கிச் சென்றேன் என்பது இல்லை. எப்பொழுதுமே இருந்த ஒன்று.நிறைய பேர் பட்டிமன்ற பேச்சாளராக மாத்திரமே என்னை பார்த்த காரணத்தினால், ஏனென்றால் தொலைக்காட்சியில் அது தான் ஒளிபரப்பாகிறது.எனவே என்னுடைய இலக்கிய பின்னணியோ, ஆன்மீக பின்னணியோ பல பேருக்கு தெரியாமல் இருந்தது. குடும்பத்திலேயும் ரத்தத்திலும் ஊறிய ஒன்று அது. ஆரம்பத்திலிருந்தே அவ்வாறு தான் இருந்திருக்கிறது. எனக்கு நேர்ந்த மருத்துவ நிலை எனக்கான புதிய சிந்தனை பாதைகளை திறந்தது என்பது உண்மைதான். முதல் விஷயம் ஏதோ ஒரு காரணத்திற்காகத் தான் எனக்கு இந்த நீட்டிப்பு கிடைத்திருக்கிறது என நான் தீவிரமாக நம்புகிறேன். எனக்கு என்ன நோய் வந்தது என்பதை நான் கிட்டத்தட்ட மூன்று மாதம் கழித்து தான் என் கைபேசி என்னிடம் கொடுக்க பட்டவுடன் தான் தெரிந்து கொண்டேன். அதில் என்ன போட்டிருந்தது என்றால் எண்பத்திரண்டு விழுக்காடு இந்த நோய்க்கு ஏதாவது ஒரு விதத்தில் பாதிப்பு அடைந்து விடுவார்கள், மீதி பதினெட்டு சதவீதம் தான் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் வெளியே வருவார்கள். நான் ஏன்  பதினெட்டில் இருக்கிறேன், எண்பத்திரெண்டில் இல்லை? அதானே முதல் கேள்வி! எனக்கு வந்தன்றைக்கே இந்த நோய் வந்த வேறு சிலர் இன்னமும் கூட கோமாவில் உள்ளார்கள். ஒரு வருடம் ஆகிவிட்டது.

அப்போ, ஏதோ ஒரு நோக்கத்துடன் தான் கடவுள், ஒன்றை நிறைவேற்ற, அதைச் செய்ய வேண்டும் என்பதற்காக தான் நான் பதினெட்டில் இருக்கிறேன் எண்பத்திரெண்டில் இல்லை என நான் உணர்ந்து கொண்டேன். இரண்டாவது நான் தெரிந்து கொண்டது - நான் பிரபலமானவள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். அதில் ஒன்றும் தன்னடக்கம் இல்லாமல் சொல்லவில்லை. போகிற இடங்களில் எல்லாம் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள், ஆட்டோகிராப் வாங்குகிறார்கள், எனக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் அப்படித் தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால் அவர்கள் வெறும் ரசிகர்கள் மாத்திரம் அல்ல; எனக்காக கண்ணீரோடு பிரார்த்தனை செய்ய ஆயிரக்கணக்கான பேர் இருந்தார்கள் என்பது எனக்கு மிகப் பெரிய புரிதலாக இருந்தது. அவர்கள் அன்பை இவ்வளவு தூரம் பெறுவதற்கு நான் என்ன செய்தேன் என்று இன்னமும் கூட புரியவில்லை எனக்கு. நான் ஒரு பேச்சாளர் தானே, அதைத் தாண்டி அவர்களோடு என்ன தொடர்பு, அவர்களில் பல பேரை நேரில் பார்க்க முடியுமா என்பது கூட தெரியாது. அது ஒரு நெகிழ்ச்சியான புரிதலாக இருந்தது எனக்கு. எனக்கு மாத்திரம் அல்ல என் வீட்டில் இருந்தவர்களுக்கும் கூட. அவர்களைப் பொறுத்த வரையில் நான் ஏன் பேசப் போகிறேன் என்றால் இவளுக்கு பாராட்டு என்றால் பிடிக்கும், மேடையில் ஏறுவது என்பது பிடிக்கும் என்று தான் அவர்கள் பார்த்தார்கள்.

இது அவர்களுக்கும் ஒரு புரிதல் - இத்தனை பேர் உனக்காக இவ்வளவு பிரார்த்தனை செய்கிறார்கள் என்றால் நீ ஏதோ ஒன்று அவர்கள் மனதைத் தொடும் வகையில் செய்திருக்கிறாய் என்ற புரிதல் என் உறவுக்காரர்களிடமும் உண்டானது. மூன்றாவது, அந்த எல்லையை சென்று நான் தொட்டு விட்டு வந்து விட்டேன். " I have met death on its face and said not today and I have come back!" எனவே, இனி அச்சங்கள், தளர்ச்சிகள் எதுவுமே இருக்க கூடாது என்று நான் நினைத்து கொள்வேன்.இதுக்கும் மேலே நாம் பயப்படுவதற்கு என்ன இருக்கிறது. எதுவுமே கிடையாது. எனவே எது  மனதுக்கு  நெருக்கமானதோ அதை தைரியமாக  தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த மூன்று புரிதல்கள் தான் எனக்குக் கிடைத்தது.

பெண்கள் இன்றைய சூழலில் அவசியம் கடைபிடிக்க வேண்டிய விஷயம் அல்லது தன்னம்பிக்கையோடு செயல்பட நீங்கள் கூறும் அறிவுரை?

அறிவுரை சொல்லும் அளவிற்கெல்லாம் நான் ஒன்றும்  பெரிய ஆள் இல்லப்பா. நான் எப்போதும் என்னுடைய அனுபவத்தை தான் பகிர்கிறேன். பல துறைகளில் நான் இருந்ததால், அலுவலுக வாழ்க்கையில் கிட்டத்தட்ட இருபத்தொன்பது முப்பது வருடம் மிகப் பெரிய நிறுவனத்தில் பணியாற்றி உள்ளேன். என்னுடைய அனுபவத்திலிருந்து நான் என்ன நினைக்கிறேன் என்றால் - பெண்கள் சுதந்திரம் என்று பேசும் பொழுது, எனக்கு இன்னும் உரிமை வேண்டும் என்று கூறும் பொழுது - இன்னும் அதிக பொறுப்புகளை சுமக்கத்தான் வேண்டும். உரிமை பொறுப்புகளோடு தான் வரும்! (Freedom always comes with responsibilities). சுதந்திரம் என்பது அனைத்தையும் துறந்து விட்டு செல்வதல்ல.

அதிக பொறுப்புகளை சுமப்பது தான் சுதந்திரம் என்பது! அப்போ, அது வேண்டும் என்றால் இதை எடுத்துக் கொள்ள தான் வேண்டும்! எனக்கு உயர் பதவி கொடுங்கள், ஆனால் என்னை தினமும் வீட்டிற்கு ஐந்து மணிக்கு அனுப்பிவிடுங்கள் என்றால் அது நடக்காது. நீங்கள் உங்கள் பொறுப்புகளை சுமக்க தயாராக இருக்க வேண்டும். எனவே இறங்கி வேலை செய்ய வேண்டும் என்றால் அப்படி தான் நான் செய்வேன் - என்கிற விடாமுயற்சி வேண்டும். பாதியில் உடல் நிலை சரியில்லை, குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டும் இப்படி  காரணங்கள் இருக்கு தான், உண்மை தான். ஆனாலும், செய்து தான் ஆக வேண்டும் என்றால் அதை முடிக்க வேண்டும். பாதியில் நிறுத்த கூடாது. தோல்விகளாலும், சோர்வுகளாலும் அதை விட்டு சென்று விடலாம் என்று நினைக்காமல் தொடர்ந்து இருக்கின்ற, செயல்படுகிற அந்த மன உறுதி - அது மிகவும் முக்கியம் என நினைக்கிறேன் .அவர்கள் மிக எளிதாக விட்டுவிட முனைகிறார்கள்.

அதிலும் குறிப்பாக, இந்தத் தலைமுறையை சார்ந்த பெண்கள் தான் இதைச் செய்கிறார்கள். பழைய தலைமுறையில் அப்படி விட்டுவிட மாட்டார்கள். செய்தே தீருவார்கள். எனவே "dont give up!" - இதுவே நான் சொல்ல விழைகிறேன். ஒரு நாள் மோசமாகத்தான் இருக்கும், என்ன செய்வது. நாளை காலை நன்றாக விடியும் என்ற நம்பிக்கையோடு நகர வேண்டும்!

பாரதி பாஸ்கர் அவர்களை ஒரு படைப்பாளியாக, கதாசிரியராக ஜெயமோகன் வரிசையில் எப்பொழுது கொண்டாட போகிறோம் ?

(இதற்கான பதில் அவரது காணொளி மூலம் உங்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது)

-என்ன ஒரு தெளிவான சிந்தனை, ஒரு செயலை எவ்வாறு வீரியத்துடன் செய்ய வேண்டும் என்பதை ஆணித்தரமாக கூறி இருக்கிறார் பாரதி பாஸ்கர்.

நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைக்கவும் சுவாரஸ்யமாக மாற்றவும் யாரால் முடியும்?

உலகிலேயே விலையுயர்ந்த பாஸ்போர்ட் இதுதான்! இதன் விலை எவ்வளவு தெரியுமா?

காலிஃப்ளவர் சமைக்கும் முன் இதை செய்யத் தவறாதீர்கள்! 

பத்தே நிமிடத்தில் சுடச்சுட வெஜ் கட்லெட்டும், சோயா கட்லெட்டும் செய்வோமா?

குழந்தைகளிடம் அடிக்கடி கேள்வி கேட்கும் பெற்றோரா நீங்க? அப்போ இதை நோட் பண்ணிக்கோங்க!

SCROLL FOR NEXT