இந்தியா நியூசிலாந்து இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா நியூசிலாந்து இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்துள்ளது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சொதப்பியதால், இரண்டாவது இன்னிங்ஸில் எவ்வளவு முடிந்தும் வெற்றிபெற முடியவில்லை. இதனால், நியூசிலாந்து அணி 3 போட்டிகளில் ஒரு போட்டியில் வென்று முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இரண்டாவது போட்டி வரும் 24ம் தேதி ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டிக்கான அணி வீரர்களை இந்திய அணி வெளியிட்டுள்ளது.
இந்த அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். அண்மையில் நடந்த ரஞ்சி ட்ராபியில் டெல்லி அணிக்கு எதிராக சதம் அடித்தார். இதனையடுத்துதான் இவர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் ஏற்கனவே அஸ்வின், ஜடேஜா, குல்தீப், அக்ஷர் படேல் என 4 சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ள நிலையில், தற்போது கூடுதலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் இணைகிறார்.
இதுகுறித்து வாஷிங்டன் சுந்தர் பேசியதாவது, “இது நிர்வாகத்தின் முடிவு. இதற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். நான் உண்மையாகவே என்னை ஒரு டாப் ஆர்டர் பேட்டராகதான் கருதுகிறேன். நான் நிர்வாகத்தின் முடிவை பெரிதும் மதிக்கிறேன்.” என்று பேசியுள்ளார்.
25 வயதான வாஷிங்டன் சுந்தர் கடைசியாக 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். சமீபத்தில் அவர் வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வாஷிங்டன் சுந்தர் இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 265 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் மூன்று அரை சதம் அடங்கும். அதேபோல் பந்துவீச்சில் அவர் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.
ஆனால், யாருக்கு பதிலாக சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பது மட்டும் தெரியவரவில்லை. கில்லுக்கு இன்னும் காயம் சரியாகவில்லை. அவருக்கு பதிலாக சென்ற போட்டியில் சர்ஃபராஸ் கான் அணியில் சேர்க்கப்பட்டார். ஒருவேளை இந்தமுறை கில்லுக்காக சுந்தர் சேர்க்கப்பட்டிருக்கலாம். அல்லது கே.எல்.ராகுலுக்கு ஓய்வு கொடுக்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.