கால்பந்து என்றாலே இன்றைய தலைமுறையினருக்கு உடனே நினைவிக்கு வருபவர்கள் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி தான். இருவருமே மிகச் சிறந்த வீரர்கள். அனைத்து காலத்திலும் கால்பந்து வரலாற்றில் தலைசிறந்த வீரர் என்ற தகவலை பிரபல பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ளது. யார் அந்த வீரர்? வாங்க தெரிந்து கொள்வோம்.
உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விளையாட்டுகளில் கால்பந்து முன்னணியில் இருக்கிறது. அதற்கேற்ப உலக நாடுகளும் கால்பந்தில் தொடர்ந்து முத்திரை பதித்து வருகின்றன. ஒரு அணியாக இல்லாமல் தனி ஒரு வீரராக பலருக்கும் பிடித்தமான கால்பந்து வீரர்கள் என்றால் லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகிய இருவர் தான். இன்றைய கால்பந்து உலகை இவர்கள் தான் ஆட்சி செய்கிறார்கள் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு களத்தில் இவர்களது ஆட்டம் இருக்கிறது. அதற்கேற்ப இவர்களை உற்சாகப்படுத்த ரசிகர்களும் பக்கபலமாக இருக்கின்றனர். இந்நிலையில் இதுவரையில் கால்பந்து வரலாற்றிலேயே சிறந்த வீரர் யார் என்ற ஆராய்ச்சியை நடத்தியது ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த “மார்கா” என்ற கால்பந்து பத்திரிகை நிறுவனம்.
கால்பந்தில் இதற்கு முன்னதாக பிரேசிலைச் சேர்ந்த பீலே, அர்ஜென்டினாவைச் சேர்ந்த மாரடோனா மற்றும் பல வீரர்கள் புகழ்பெற்று விளங்கினர். இந்த வரிசையில் நிகழ்காலத்தில் இடம் பிடித்தவர்கள் தான் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. உலக்கோப்பை வந்துவிட்டால் போதும், கால்பந்தின் ஆதிக்கம் தான் உலகெங்கும் எதிரொலிக்கும். அந்த அளவிற்கு புகழ்பெற்ற கால்பந்து விளையாட்டில் சிறந்த வீரர் என ஒருவரை மட்டும் தேர்வு செய்வது மிகவும் கடினமான ஒன்று.
இருப்பினும் வீரர்கள் அடித்த கோல்களின் எண்ணிக்கை, வெற்றி பெற்ற கோப்பைகளின் எண்ணிக்கை மற்றும் களத்தில் வீரர்களின் செயல்பாடு ஆகியவற்றைக் அளவீடாக கொண்டு சிறந்த வீரர் யார் என்பதை ஆராய்ந்தது மார்கா பத்திரிகை. இந்த ஆய்வின் முடிவில் கால்பந்து வரலாற்றில் தலைசிறந்த 6 வீரர்களைத் தேர்வு செய்துள்ளது இப்பத்திரிகை.
மார்கா பத்திரிகையின் ஆய்வு முடிவின் படி, கால்பந்தில் சிறந்த வீரராக அர்ஜென்டினாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மெஸ்ஸி இதுவரை தனது வாழ்நாளில் அர்ஜென்டினா அணிக்காக 2022-ல் ஒரு உலக்கோப்பை, 2021 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் கோபா அமெரிக்கா கோப்பைகளை வென்றுள்ளார். இதுதவிர்த்து பார்சிலோனா அணிக்காக 2009, 2011, 2015 ஆகிய ஆண்டுகளில் மூன்று கிளப் உலகக்கோப்பைகள், 2005-06, 2008-09, 2010-11, 2014-15 ஆகிய ஆண்டுகளில் நான்கு சாம்பியன்ஸ் லீக் கோப்பைகள் உள்பட மொத்தமாக இதுவரை 46 கோப்பைகளை வென்று சாதனைப் படைத்துள்ளார்.
இரண்டாவது இடத்தில் புகழ்பெற்ற போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இருக்கிறார். பிரேசிலைச் சேர்ந்த மறைந்த கால்பந்து ஜாம்பவான் பீலே மூன்றாவது இடத்தையும், அர்ஜென்டினாவைச் சேர்ந்த வீரர்கள் ஸ்டெபானோ நான்காவது இடத்தையும், மாரடோனா ஐந்தாவது இடத்தையும், நெதர்லாந்து வீரர் கிரப் ஆறாவது இடத்தையும் பிடித்தனர்.