அடுத்த ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் சாம்பியன் ட்ராபி தொடரின் இந்தியாவுடைய போட்டிகளை மட்டும் ஒரே மைதானத்தில் நடத்தத் PCB திட்டமிட்டுள்ளது.
இந்தமுறை ஐசிசி சாம்பியன் ட்ராபி போட்டிகளை எடுத்து நடத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், போட்டிகள் நடத்தும் மைதானத்திற்கான இடங்களை இறுதி செய்து வருகிறது. 50 ஓவர்க் கொண்ட இந்தத் தொடரில் மொத்தம் 8 அணிகள் மோதவுள்ளன. இந்தத் தொடருக்கான அட்டவணை இன்னும் வெளியாகவில்லை என்றாலும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எப்போதும் ஒரு சுமுகமான உறவு இல்லை என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம். இது ஒரு விளையாட்டு தானே என்றாலும் கூட, பாகிஸ்தானில் இந்திய அணியால் பதற்றம் இல்லாமல் விளையாட முடியாது என்பதை நாம் யோசித்தே ஆக வேண்டும்.
இன்னும் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புவதா? வேண்டாமா? என்ற முடிவை பிசிசிஐ எடுக்கவில்லை. கடந்த ஆண்டு ஆசிய கோப்பைத் தொடருக்கு கூட இந்திய அணி அங்கு செல்லவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. இந்த அசாதாரண சூழலை புரிந்துக்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்திய அணியின் போட்டிகளை மட்டும் இந்தியாவிலேயே நடத்த முடிவெடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனால், இந்திய அணியின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். அதேபோல் வீரர்களும் அழுத்தம் இல்லாமல் விளையாடுவார்கள் என்பது அவர்களின் எண்ணம்.
அந்தவகையில், இந்தியாவின் போட்டிகளை மட்டும் லாகூர் மைதானத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
லாகூர் எல்லையில் உள்ள ஒரு நகரமாகும். இங்கு ரசிகர்கள் வாகா எல்லையை கடந்துத் தங்கள் அணியின் போட்டியை எந்த சிரமமும் இல்லாமல் பார்க்கலாம் என கருதப்படுகிறது.
ஆனால் சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புவதா என்பது குறித்த இறுதி முடிவு, பிசிசிஐயை விட இந்திய அரசாங்கத்தின் கைகளில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன்ஸ் போட்டிகளை இந்தியா ஒரே மைதானத்தில் விளையாடினால், பயணம் செய்யவோ அல்லது இடங்களை மாற்றவோ தேவையில்லை. அவர்கள் ஒரே ஒரு நகரத்தில் தங்கி தங்கள் விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்தலாம். இதன்மூலம் இந்திய வீரர்களின் சிரமங்களை குறைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபியை நடத்துவது இதுவே முதல் முறை. கடந்த 2008 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் தொடரை நடத்த பாகிஸ்தானுக்கு உரிமை வழங்கப்பட்டது. ஆனால் பாதுகாப்புக் காரணங்களால் அது பின்னர் மாற்றப்பட்டது. அதாவது அந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை 2009ம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா நடத்தியது குறிப்பிடத்தக்கது.