இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியினர் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஒரு போட்டியை வென்று சமநிலைப் பெற்றிருந்த நிலையில் நேற்று, அக்.29 அன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற நியூசி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
மைதானம் இந்திய அணியின் பந்து வீச்சுக்கு கை கொடுத்தது. நியூசியின் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சுசி பேட்ஸ் மற்றும் ஜார்ஜியா ஜோடியால் அதிரடியாக விளையாட முடியாமல் நிதானமாக விளையாடினர். 6 வது ஓவரில் சுசி பேட்ஸ் 4 ரன்னில் ரன்-அவுட் ஆனார். அடுத்த ஓவரில் லாரன் டவுன் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் சோபி டிவைன் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.10 ஓவர் முடிவில் 3 விக்கட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்து நியூசி அணி தத்தளித்தது. ஆயினும் ஜார்ஜியா 6 பவுண்டரிகளை விளாசி 39 ரன்கள் எடுத்திருந்தார்.
ஒரு புறம் புரூக் ஹாலிடே நன்றாக அஸ்திவாரமிட்டு நிலைத்து விட்டார். மறுபுறம் விக்கெட்டுகள் சரிந்து கொண்டே வந்தது. அணியின் ஸ்கோரை 199 ஆக அவர் உயர்த்தி ஆட்டமிழந்தார். புரூக் ஹாலிடே 3 சிக்சர்களும் 9 பவுண்டரிகளையும் விளாசி 86 ரன்கள் குவித்து அணியை நல்ல பாதைக்கு கொண்டு சென்றிருந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய 49.5 ஓவரில் நியூசி அணி மொத்த விக்கட்டுக்களையும் இழந்து 232 ரன்களை எடுத்திருந்தது. இந்திய அணியின் சார்பாக சிறப்பாக பந்து வீசி தீப்தி ஷர்மா 3 விக்கட்டுக்களையும் பிரியா மிஸ்ரா 2 விக்கட்டுக்களையும் சாய்த்தனர்.
இரண்டாவது இன்னிங்க்ஸில் களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷாபாலி வர்மா ஜோடி அதிரடியாக விளையாட தொடங்கினர். இம்முறை ஸ்மிரிதி தன் பொறுப்பை உணர்ந்து விளையாடினார். 12 ரன்களில் ஷபாலி வெளியேற அடுத்து வந்த யாஸ்த்திகா பாட்டியா நல்ல ஒத்துழைப்பை கொடுத்தார்.
மறுபுறம் ஸ்மிருதி நிதானமாக ரன்களை குவித்தார். இந்த ஜோடி 21 ஓவர் வரை நிலைத்து நின்று நியூசி பவுலர்களை கதற விட்டனர். யாஸ்திகா 35 ரன்களில் வெளியேற அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்பிரித் கவுர், ஸ்மிருதியுடன் ஜோடி சேர்ந்து இன்னும் 20 ஓவர்கள் இந்த பார்ட்னர் ஷிப் நிலைத்தது.
இந்திய அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்ற ஸ்மிருதி தனது 8வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்திய அணியின் மிதாலி ராஜ் செய்த சாதனையை முந்தினார். ஸ்மிருதி அவுட் ஆகும் போது இந்திய அணி 209 ரன் கள் என்ற வலுவான நிலையில் இருந்தது. கேப்டன் கவுரும் 59 ரன் களை குவித்து வெளியேறினார்.
இறுதியில் இந்திய அணி 44.2 ஓவரில் 236 ரன்களை எட்டி வெற்றி பெற்றது. இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்து மூன்று போட்டிகள் கொண்ட மகளிர் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. சதமடித்த ஸ்மிருதி ஆட்ட நாயகியாகவும் தீப்தி தொடரின் நாயகியாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
ஒரே நேரத்தில் நியூசிலாந்து நாட்டு ஆடவர் அணியும் , மகளிர் அணியும் இந்திய அணிகளுடன் மோதியது. இதில் ஆண்கள் அணி டெஸ்ட் தொடரை இழந்து ரசிகர்களை கவலைக்கு உள்ளாக்கியது. ஆயினும் இந்திய மகளிர் அணி நியூசிக்கு எதிராக சிறப்பாக விளையாடி தொடரை வென்றது ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக கிடைத்துள்ளது.