ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் டி20 உலகக்கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை தோற்கடித்து இறுதிச் சுற்றிற்குள் நுழைந்துள்ளது.
இந்தப் போட்டியைப் பொறுத்தவரை இரு அணியும் பலம் வாய்ந்ததாக கருதப்பட்டாலும், நியூசிலாந்து அணி வெல்லும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக நியூசிலாந்து அணியின் தொடக்கவீரர்கள் சரியாக விளையாடாத நிலையில் 20 ஓவர் முடிவில் 152 ரன்கள் மட்டுமே எடுத்தது.
153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய பாகிஸ்தான் அணி ஆரம்பம் முதலே அடித்து விளையாட ஆரம்பித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய முகம்மது ரிஸ்வானும், பாபர் அசாமும் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர்.
இந்நிலையில் அணியின் ஸ்கோர் 105-ஐ எட்டியபோது பாபர் அசாம் 53 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். இதையடுத்து முகம்மது ஹாரிஸ், முகம்மது ரிஸ்வானுடன் ஜோடி சேர்ந்தார். இந்நிலையில் அணியின் ஸ்கோர் 132ஆக இருந்தபோது முகம்மது ரிஸ்வான் 43 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி 19.1 ஓவர் முடிவில் 7 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இப்போட்டியைப் பொறுத்தவரை நியூசிலாந்து அணிக்கு ராசி இல்லை என்றுதான் கூற வேண்டும். சிட்னி மைதானத்தின் பிட்ச் வறண்டு இருப்பதால், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஸ்விங் கைகொடுக்காது என்ற நிலையில், பேட்ஸ்மேன்கள் பந்தை லெகுவாக அடித்து துவம்சம் பண்ணமுடியும். அதனடிப்படையில் முதலில் பேட்டிங் செய்யும் அணி தான் அதிக இலக்கை வைப்பதற்கான சூழலும் உருவாகி, அதில் வெற்றியும் அடைந்துள்ளது.
அதனால் நியூசிலாந்து கேப்டன் டாஸை வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது சரி என கருதப்பட்டாலும், வரலாறு என்ற ஒரு விஷயம் இன்னும் நியூசிலாந்தை துரத்தி வந்ததுதான் இதில் வருத்தத்திற்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
அதவாது பாகிஸ்தானும் நியூசிலாந்தும் இதற்கு முன்னதாக உலகக்கோப்பை வரலாற்றில் 1992, 1999, 2007ம் ஆண்டுகளில் 3 முறையும் அரையிறுதிப் போட்டிகளில் மோதியுள்ளன. இந்த மூன்று போட்டியிலுமே பாகிஸ்தான் அணிதான் வெற்றி பெற்றுள்ளது. இன்னொரு துரதிருஷ்டவசமான விஷயம் என்னவென்றால் இந்த 3 போட்டிகளிலுமே நியூசிலாந்து அணிதான் முதலில் பேட்டிங் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது பாகிஸ்தான் அணி பெற்ற இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.